முக்கிய செய்திகள்

கேரளாவில் பிஷப் மீது கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகார்…


கேரளாவில், சிரியோ மலபார் கத்தோலிக்க பிஷப் மீது கன்னியாஸ்திரி ஒருவர் போலீசில் கற்பழிப்பு புகார் அளித்துள்ளார்.

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், குருவிலாங்காடு பகுதியில், சிரியோ மலபார் கத்தோலிக்க சர்ச்சுக்கு சொந்தமான விடுதி உள்ளது. இங்கு தங்கியுள்ள கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் உள்ள பிஷப் மீது, கோட்டயம் மாவட்ட எஸ்.பி.,யிடம் கற்பழிப்பு புகார் கூறியுள்ளார். அப்புகாரில் கடந்த, 2014ம் ஆண்டு மே மாதம் குருவிலாங்காடு விடுதியில் வைத்து பிஷப் பிரான்கோ முல்லக்கல் என்பவர் தன்னை கற்பழித்தார். அதன் பிறகு பல முறை அந்த கொடூர செயல் நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டயம் மாவட்ட போலீஸ் தரப்பு கூறுகையில், தான் கற்பழிக்கப்பட்டது குறித்து சர்ச் நிர்வாகத்திடம் அந்த கன்னியாஸ்திரி புகார் அளித்துள்ளார். ஆனால், சர்ச் நிர்வாகம் அதை பொருட்படுத்தாததால், தற்போது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றனர்.

அதே நேரத்தில், பணியிட மாற்றம் செய்ததால் தன் மீது அந்த கன்னியாஸ்திரி அபாண்டமாக புகார் அளித்துள்ளார் என்று பிஷப் முல்லக்கல் தரப்பில், கோட்டயம் மாவட்ட எஸ்.பி., அரிசங்கரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு தரப்பில் இருந்தும் புகார் வந்துள்ளதை எஸ்.பி., அரிசங்கர் உறுதி செய்துள்ளார்.