கேரளாவின் கோரிக்கைகளை பிரதமர் மோடி தொடர்ந்து நிராகரிக்கிறார்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு


கேரள மாநிலத்தின் தேவைகளையும், கோரிக்கைகளையும் பிரதமர் மோடி தொடர்ந்து ஒதுக்குகிறார், புறந்தள்ளுகிறார் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

பிரதமர் மோடியைச் சந்தித்து கேரள மாநிலத்தின் கோரிக்கைகளை எடுத்துக்கூற 4 முறை முயற்சித்தும் முதல்வர் பினராயி விஜயனுக்கு பிரதமர் அலுவலகம் அனுமதி அளிக்கவில்லை. இதனால், பிரதமரைச் சந்திக்க வந்த பினராயி விஜயன் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

இந்நிலையில், டெல்லியில் இன்று நிருபர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

”கேரள மாநிலத்தின் கோரிக்கைகள், தேவைகளைப் பிரதமர் மோடி தொடர்ந்து ஒதுக்குகிறார், புறந்தள்ளுகிறார். நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை மத்திய அரசு மதிப்பதில்லை. எங்களுக்கு மனநிறைவான மாநில அரசும், கூட்டாட்சி முறையில் வலிமையான மத்திய அரசும் தேவை என்று நினைக்கிறோம். ஆனால், ஒரு மாநிலத்தின் தேவையைக் கூட பிரதமர் கேட்க மறுக்கிறார், புறந்தள்ளுகிறார்.

மத்திய அரசின் போக்கால், கேரளாவில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் சீர்குலைந்துவிட்டன. இந்த சூழலைப் பார்த்து பிரதமர் மோடியிடம் எங்களின் கோரிக்கைகளை மக்கள் சார்பில் அளிக்க வந்தால், அவர் எங்களைச் சந்திக்க மறுக்கிறார், எங்களைச் சந்திக்க அனுமதிக்கவில்லை.

பாலக்காடு அருகே உள்ள காஞ்சிக்கோடு ரயில் தொழிற்சாலையை நிறுவுங்கள், இடம் கொடுத்துவிட்டோம் என்று கேட்கிறோம். ஆனால், எங்கள் கோரிக்கையை நிராகரித்துவிட்டார்கள். கூட்டாட்சி முறையில் அடிப்படையானது என்னவென்றால், மாநிலங்களின் தேவைகளை மத்திய அரசு ஈடுபாட்டுடன் நிறைவேற்ற வேண்டும் என்பதாகும். ஆனால், துரதிருஷ்டவசமாக இங்கு மத்திய அரசு மாநிலங்களின் தேவைகளைக் கவனிப்பதில்லை. இதை இதற்கு முன் இருந்த அரசு புரிந்துகொண்டது. அனைத்து நடவடிக்கைகளையும் இதற்கு முந்தைய அரசுகள் எடுத்தார்கள் எனக் கூறவில்லை. இப்போது இருந்த நிலைமை அப்போது இல்லை.”

இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், ஐஏஎஸ் அதிகாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி கடந்த 8 நாட்களாகத் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி ஆகியோருடன் சேர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கேஜ்ரிவாலைச் சந்திக்க முயன்றார். ஆனால், துணை நிலை ஆளுநரால் அனுமதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று 4 மாநில முதல்வர்களும் கடிதம் எழுதினார்கள். அதில் பினராயி விஜயனும் கடிதம் எழுதினார். இது தொடர்பாக ஆந்திரா பவனில் ஆலோசனையும் நடத்தினார்கள்.

இந்தச் சம்பவத்தால் அதிருப்தி அடைந்த பிரதமர் அலுவலகம் கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்திக்க அனுமதி மறுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த 2 வாரங்களில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு 2-வது முறையாகப் பிரதமர் அலுவலகம் மோடியைச் சந்திக்க அனுமதி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.