கேரள வெள்ளத்திற்கு நாங்கள் காரணமில்லை : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு..


கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு நாங்கள் காரணமில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

இடுக்கி பகுதி வெள்ளத்திற்கு கேரள அரசு தான் காரணம் என்றும் தமிழக அரசு காரணமல்ல என்றும் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடுக்கிக்கு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 2 டிஎம்சி தண்ணீர் தான் திறக்கப்பட்டது என்றும் தமிழக அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகம் திடீரென அதிகஅளவில் தண்ணீர் திறந்து விட்டதால் தான் கேரளாவில் மிக மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் கேரளா சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதன் காரணமாக மாநிலத்தின் 80 அணைகளும் திறக்கப்பட்டன. தொடர் மழையால் மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியது. கேரளாவின் மொத்த மக்கள் தொகை 3.48 கோடியில், 40 சதவீதம் பேர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோர காவல் படை, துணை ராணுவப் படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் உதவிகள் குவிந்து வருகிறது. உணவுப் பொருட்கள், ஆடைகள், மருந்துகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள், நிதியுதவி என கேரள மக்களுக்கு நாடுமுழுவதும் இருந்து உதவிக்கரம் நீண்டு வருகிறது.

இதனிடையே, கேரளாவில் கனமழை பெய்து மக்களிடையே அச்சம் நிலவுவதால், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தற்காலிகமாக 136 அடியாக குறைக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதில் கடிதம் எழுதிய தமிழக முதல்வர் அணை பாதுகாப்பாக இருப்பதால் நீர்மட்டத்தை குறைக்க தேவையில்லை என கூறியிருந்தார்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க கோரி இடுக்கியை சேர்ந்த ரசூல் ஜாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் சார்பில் நேற்று பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. கேரள தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகம் திடீரென தண்ணீரை திறந்து விட்டது கேரளாவில் மிக மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட காரணமாயிற்று. அணையின் கீழ் பகுதியில் இருக்கும் மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கபோதுமான அவகாசம் தேவை என்ற கேரளாவின் கோரிக்கையை தமிழகம் ஏற்கவில்லை.

எந்த முன்னறிவிப்பும் இன்றி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து அதிகமான தண்ணீரை தமிழகம் திறந்துவிட்டுள்ளது. அதுபோலவே தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக திறக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையையும் ஏற்கவில்லை. 142 அடி வரை தண்ணீர் தேக்க வேண்டும் என்ற நிலையில் 140 அடியை எட்டியபின் அதிகமான தண்ணீரை தமிழகம் திறந்துவிட்டுள்ளது’’ என கேரளா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதற்கு முன்னறிவிப்பு இன்றி இடுக்கி உள்ளிட்ட அணைகளை கேரள அரசு திறந்து விட்டது தான் காரணம் என அம்மாநில எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது. மேலும், பேபி அணையை பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளவும் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகம்,புதுவையில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் : வானிலை மையம் தகவல்..

ஆசிய விளையாட்டுப் போட்டி : டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய அணிக்கு தங்கம்..

Recent Posts