அவதூறு செய்தி வெளியிட்டால் 5 ஆண்டு சிறை தண்டனை என்று போலீஸ் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்திருக்கும் கேரள அரசின் செயல் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்துள்ளார்.
கேரள போலீஸ் சட்டத்தில் பிரிவு 118ல் 118ஏ என்ற ஓர் பிரிவு கூடுதலாகச் சேர்க்கப்பட்டு, போலீஸாருக்குகூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு தனிநபரின் மரியாதையை, மாண்பைக் குலைக்கு உள்நோக்கத்துடன் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களைப் ,படங்களை, பதிவேற்றம் செய்தால், பரப்பினால், ஷேர் செய்தால், அல்லது பிரசுரித்தால், அவருக்கு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் அபராதம், 5 ஆண்டு சிறை விதிக்கப்படும். அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் போலீஸாருக்கு அதிகமான அதிகாரம் அளிக்கும், கருத்துச் சுதந்திரத்தை முடக்கும், பத்திரிகை சுதந்திரத்தை முடக்கும் என்று காங்கிரஸ் , பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
இந்த அவசரச் சட்டத்திருத்தத்துக்கு ஆளுநர் முகமது ஆரிஃப் கான் நேற்று ஒப்புதல் அளித்துவிட்டார்.
இந்த சூழலில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த சட்டம் குறித்து அதிருப்தியும், அதிர்ச்சியும் தெரிவித்துள்ளார்.
அதில் “சமூக வலைத்தளத்தில் அவதூறு என்ற பெயரில் செய்தி பரப்பினால் 5 ஆண்டு சிறை என்ற சட்டத்தை கேரளாவில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு கொண்டுவந்துள்ளதை நினைத்து அதிர்ச்சி அடைந்தேன்.
அதுமட்டுமல்லாமல் எதிர்க்கட்சித்தலைவரும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ரமேஷ் சென்னிதலா மீதான மதுபார் மோசடி வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதியளித்துள்ள அரசின் முடிவும் எனக்கு அதிர்ச்சியளிக்கிறது.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த விசாரணை அமைப்புகள் எந்த ஆதாரங்களும் இல்லை 4 முறை வழக்கை முடித்துவிட்டன. இதுபோன்ற அட்டூழியமான,அராஜகமான முடிவுகளை எவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எனது நண்பர்களான சீதாராம் யெச்சூரி, ஜிஎஸ் ஆகியோர் ஆதரிக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிஆட்சியில் இருந்த போது சுங்கவரித்துறை அமைச்சர் கே.பாபு, சுகாதாரத்துறை அமைச்சர் வி.எஸ்.சிவக்குமார், காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோரிடம் மதுபார் உரிமம் பெற லஞ்சம் கொடுத்தேன் என்று மதுபான விற்பனையாளர் பிஜூ ரமேஷ் சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.
இதையடுத்து, பல்வேறு ஆதாரங்களை ஊழல்தடுப்பு பிரிவினர் திரட்டி, மேற்கொண்டு விசாரணை நடத்து அனுமதி கோரி முதல்வர் பினராயி விஜயனுக்கு கோப்புகளை அனுப்பினர். பினராயி விஜயன் அந்த கோப்புகளை ஆளுநர் ஆரிப் முகமது கான், சபாநாயகர் பி. ஸ்ரீராமகிருஷ்ணன் ஆகியோரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதைக் குறிப்பிட்டுத்தான் ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்துள்ளார்.