கேரளாவின் அனைத்து மாவட்டங்களுக்கம் விடுக்கப்பட்ட ‘ரெட் அலார்ட்’ எனப்படும் தீவிர கனமழை எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் திரும்பப் பெற்றுள்ளது.
இருப்பினும் 10 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச் அலார்ட்’ எனப்படும் மிதமான மழை வாய்ப்பு எச்சரிக்கையும், 2 மாவட்டங்களுக்கு ‘எல்லோ அலார்ட்’ எனப்படும் லேசான மழை எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
மழையின் தீவிரம் குறைந்ததை அடுத்து மீட்புப் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாலக்காடு மாவட்டம் நிம்மரா பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 10 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மண்சரிவில் சிக்கி உள்ள உடல்களை மீட்பது பெரும் சவாலாக உள்ளதாக கேவை அதிரடிப்படை குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் தெரவித்துள்ளனர்.
கேரளாவில் மழை குறைந்ததை அடுத்து கர்நாடகாவில் இருந்து நிறுத்தப்பட்ட பஸ் சேவை இன்று முதல் மீண்டும் துவங்கப்பட உள்ளது.
கேரளாவின் எர்ணாகுளம், கோட்டையம், திரிச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, கன்னூர், திருவனந்தபுரம் பகுதிகளுக்கு பஸ் சேவை துவங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக மாலை 4 மணிக்கு பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
இடுக்கி அணை மற்றும் பெரியாறு ஆறுகளில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.