கேரளா மாநில வெள்ள நிவாரண நிதிக்கு அறிவித்த படி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் தங்களது 1 மாத ஊதியத்தை வழங்கினார்கள்.
கேரளாவில் வரலாறு காணாத வெள்ள பாதிப்பை சந்தித்தது. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 400க்கும் அதிகமானோா் உயிரிழந்தனா்.
மாநில அரசு சாா்பில் சுமாா் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிவாரணம் கோரப்பட்ட நிலையில், மத்திய அரசு அவசர கால நிதியாக ரூ.600 கோடி வழங்கியது.
கேரளாவில் ஏற்பட்டுள்ள இழப்பை சரி செய்யும் வகையில், மாநில அரசுகள், பொதுமக்கள் தங்களால் முடிந்த உதவிகளை வழங்கி வருகின்றனா்.
இந்நிலையில் அ.தி.மு.க. அமைச்சா்கள், சட்டமன்ற உறுப்பினா்கள், எம்.பி.க்கள் தங்களது 1 மாத ஊதியத்தை கேரளாவிற்கு நிவாரணமாக வழங்குவதாக முதல்வா் பழனிசாமி அறிவித்தாா்.
இந்நிலையில் தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள நிவாரண பணிகளுக்காக தி.மு.க. சட்டமன்ற உறுப்பினா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள் என தெரிவித்தார்.
இந்நிலையில் தி.மு.க தலைவர் அறிவித்தபடி, தி.மு.க எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,களின் ஒருமாத ஊதியத்தொகை ரூ. 96 லட்சத்து 40 ஆயிரத்தை, மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ தலைமையில் கேரளா சென்ற குழுவினர் கேரள அமைச்சர் இ.பி.ஜெயராஜனிடம் வெள்ள நிவாரண நிதியாக வழங்கினர்.