கேரளாவுக்கு வெளிநாட்டு நிதியுதவி மத்திய அரசு ஏற்க மறுப்பு..


கேரளாவில் ஏற்பட்டுள்ள கனமழை பாதிப்பையடுத்து ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க முன் வந்துள்ள நிலையில், அதனை ஏற்க மத்திய அரசின் அனுமதி தேவை. இந்த விஷயத்தில் மத்திய அரசு இந்த நிதியுதவியை ஏற்க மறுத்துள்ளது.

கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதன் காரணமாக மாநிலத்தின் 80 அணைகளும் திறக்கப்பட்டன. தொடர் மழையால் மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியது. கேரளாவின் மொத்த மக்கள் தொகை 3.48 கோடியில், 40 சதவீதம் பேர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோர காவல் படை, துணை ராணுவப் படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 67 ஹெலிகாப்டர்கள், 24 சரக்கு விமானங்கள், 548 மோட்டார் படகு கள் மீட்புப் பணியில் பயன்படுத்தப் படுகின்றன. மத்திய அரசு ரூ.600 கோடி நிதியுதவியை அறிவித்துள்ளது. பல மாநிலங்களும் நிதியுதவி அளித்துள்ளன.

மாநிலத்தின் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. 8 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் 8 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 8,000 வீடுகள் இடிந்துள்ளன. 26,000 வீடுகள் சேதமடைந்துள்ளன. 40,000 ஹெக்டேர் பயிர்கள் அழுகியுள்ளன. 134 பாலங்கள் இடிந்துள்ளன. 16,000 கி.மீ. சாலைகள் சேதமடைந்துள்ளன. ரூ.21,000 கோடிக்கும் அதிகமாக பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை 368 ஆக உயர்ந்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு பல்வேறு தரப்பினரும், நிவாரணப் பொருட்கள், நிதியுதவி செய்து வருகின்றனர். மத்திய அரசின் சார்பில் 600 கோடி ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் செய்ய முன் வந்துள்ளது.

இதனை அந்நாட்டு துணை அதிபர் ஷேக் முகமது பின் ரஷித் உறுதிப்படுத்தியுள்ளார். ஐக்கிய அரசு அமீரகத்தில் ஏராளமான கேரள மக்கள் பணி புரிந்து வருவதால் அவர்களின் துயரில் பங்கு கொள்வதாக அவர் தெரிவித்து இருந்தார்.

ஆனால் இந்த நிதியுதவியை கேரள அரசு தானாக பெற முடியாது. வெளிநாடுகளில் இருந்து யார் நிதி பெற வேண்டும் என்றாலும், வெளியுறவு அமைச்சகத்தின் முறையான அனுமதி பெற வேண்டும். அதுமட்டுமின்றி வெளிநாடுகள் சார்பில் அளிக்கப்படும் இதுபோன்ற நிதியை பெறுவதற்கு மத்திய அரசு கொள்கை முடிவு எடுப்பது மிகவும் அவசியம்.

மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே கேரள அரசால் இந்த நிதியை பெற்றுக் கொள்ள முடியும்.இதற்கு முன்பு இயற்கை பேரிடர் நடந்தபோது பல சமயங்களில் வெளிநாடுகள் நிதி அளிக்க முன் வந்தன. அப்போது மத்திய அரசு அதனை ஏற்க மறுப்பு தெரிவித்தது.

2004-ம் ஆண்டு சுனாமி பாதிப்பு ஏற்பட்டபோது அமெரிக்க நிதியுதவி அளிக்க முன்வந்தது. அப்போதைய மத்திய அரசு அதனை ஏற்க மறுத்ததாக அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் ரோன் சென் குறிப்பிடுகிறார். எந்த ஒரு பேரிடரையும் எதிர்கொண்டு சமாளிக்கும் நிலைமை இந்தியாவுக்கு இருப்பதால் வெளிநாட்டு நிதி தேவையில்லை என அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.

ஆனால் தேவையை கருதி சில சமயங்களில் வெளிநாட்டு நிதி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் சியாம் சரண் கூறுகையில் ‘‘வெளிநாடுகளில் இருந்து பேரிடர் காலங்களில் நிதி பெறுவதற்கு என தனியாக விதிமுறைகள் ஏதும் இல்லை. எனினும் பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் கிடைத்தால் நிதியை பெற்றுக் கொள்ளலாம்’’ எனக் கூறியுள்ளார்.

தாய்லாந்து மாலத்தீவு, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் கேரள வெள்ள பாதிப்புக்கு நிதியுதவி அளிக்க முன் வந்துள்ள நிலையில் இந்த விஷயத்தில் மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
தாய்லாந்து துாதர் இத்தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகரில் ஐஎஸ் கொடியுடன் இளைஞர்கள் பாதுகாப்பு படை வீரர்கள் மீது கல் வீச்சு..

ஆசியப் போட்டி துப்பாக்கி சுடுதல் : மகளிர் 25 மீ பிரிவில் இந்தியாவின் சர்னோபட்டுக்கு தங்கம்..

Recent Posts