கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை பொழியுமென இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் வருகிற 9, 10 ஆகிய தேதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் அந்த மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் போதுமான அளவு பெய்யாததால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் தென்மேற்கு பருவமழை தொடங்குவதை எதிர்பார்த்து விவசாயிகளும், பொது மக்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குமென இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த ஆணையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொல்லம் ஆலப்புழா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 9-ஆம் தேதியும், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வருகிற 10-ஆம் தேதி அன்றும் கன முதல் மிக மழை பெய்யுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கன முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேரள மாநில அரசுக்கு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் தென் மேற்கு பருவக்காற்று வலுப்பெற்று உள்ளது என்றார்.
கேரளாவில் மழை தொடங்கும் அதே நேரத்தில் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள கன்னியாகுமரி, நெல்லை, தேனி திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உருவாகி உள்ளது.