முக்கிய செய்திகள்

சீனா வந்தார் கிம் ஜாங் உன்: ஜி ஜின் பிங்குடன் முக்கியப் பேச்சு

 

சீனாவுக்கு வருகை புரிந்துள்ள வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் அங்கு அதிபர் ஜி ஜின் பிங்குடன் முக்கியப் பேச்சு நடத்தி உள்ளார். சீனாவுக்கு சிறப்பு ரயில் ஒன்று வந்ததாகவும், அதற்கு ராணுவ மரியாதை வழங்கப்பட்டதாகவும் முன்னதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அது வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் என்று அப்போது உறுதிப்படுத்தப்படவில்லை. தற்போது சீனா, வடகொரியா இரு நாடுகளின் தரப்பிலும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தி டெலிகிராப் பத்திரிகை தெரிவித்துள்ளது. வடகொரியாவின் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் கிம் ஜாங்  வெளிநாட்டுக்கு வருவதும், அந்நாட்டுத் தலைவரைச் சந்திப்பதும் இதுவே முதல் முறையாகும். ஆனால் கிம் ஜாங் உன்னின் இந்தப் பயணம் ரகசிய ஏற்பாடாகவே செய்யப்பட்டுள்ளது. அவர் பெய்ஜிங் வந்து பேச்சுவார்த்தையெல்லாம் முடித்த பின்னரே உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுடன் அவரது மனைவி ரிசோல் ஜூவும் சீனா சென்றுள்ளார். பெய்ஜிங்கில் உள்ள மிகப்பெரிய வரவேற்பு மாளிகையில், கிம் ஜாங் உன் தம்பதியை சீன அதிபர் ஜி ஜின் பிங், பிரம்மாண்டமான முறையில் வரவேற்பளித்தார். பின்னர் இருதரப்பிலும் விரிவான பேச்சு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன அதிபர் ஜி ஜின்பிங், அணு ஆயுத ஒழிப்பில் உறுதியுடன் இருப்பதாக கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் வடகொரியாவும் தங்களது நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத அச்சுறுத்தல் முடிவுக்கு வந்து விடும் என்றும் கிம் ஜாங் உன் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்த தாம் தயாராக இருப்பதாக கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடன் பேசத் தயார் என்ற கருத்தை கிம் ஜாங் உன் வெளிப்படையாக கூறுவது இதுவே முதல் முறை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, கிம் ஜாங் உன் வருகை குறித்து, அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ஜி ஜின்பிங்கிடம் விவரங்களைத் தெரிவித்ததாக வெள்ளைமாளிகைச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

அமெரிக்காவுடன் பேச கிம் ஜாங் உன் தயாராகி வரும் நிலையிலேயே, வடகொரியாவுடனான உறவை உறுதிப்படுத்திக் கொள்ள சீனா இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்காவுக்கு நேரெதிரான பெரும் சக்தியாக நிற்கும் சீனா, வட கொரியாவை தன் வசப்படுத்திக் கொள்ளும் முயற்சியாகவே கிம் ஜாங் உன்னின் இந்த வருகை பார்க்கப்படுகிறது.