முக்கிய செய்திகள்

தினகரனைத் தெரிந்து கொள்ளுங்கள் : செம்பரிதி

“அரசியல் கட்சிக்கு மதம் சாதி எல்லாம் எதற்கு?”

இப்படி கேட்டுக்கொண்டே அரசியல் நடத்தும் தினகரனைத் தான் சிறுபான்மையினரின் பாதுகாவலர் என சிலர் சித்தரிக்க முயல்கிறார்கள். மதமும், சாதியும் இல்லாத அரசியல் குறித்து தினகரனின் தம்பிகள்தான் விளக்க வேண்டும்.

சனாதனத்தின் மீது தினகரனுக்கு எந்த விமர்சனமும் இல்லை.

சாதிய ஒடுக்குமுறை குறித்து அவருக்கு எந்தக் கவலையும் (பார்வையும்) இல்லை. (அவருக்கு அது தேவையுமில்லை என்பது வேறு செய்தி)

சமூகநீதி என்றால் என்ன என்று கேட்பார்…

அவருக்கு பெரியாரும் தேவையில்லை. அண்ணாவும் தேவையில்லை. அனைத்தையும் கலந்து கட்டி அடித்து, தமிழகத்தின் அரசியலை ஆண்மையற்ற மலட்டுச் சமூகமாக்கி, பணத்திற்காக எல்லாவற்றையும் விற்கத் தயாராக இருக்கும் அடிமைகள் கூட்டத்தை உருவாக்கி ஒரு சமூகத்தையே சீரழித்த “அம்மா” போதும்…

 

ஜெயலலிதாவுக்கு எல்லாமே நாங்கள் தான் என பெருமிதம் பேசுவதில் இருந்தே, “அம்மா” செய்த அனைத்து சமூக சீரழிவுகளுக்கும் இவர்கள் குடும்பம்தான் காரணம் என்பது உறுதியாகிறது.

 

பாஜகவிடம் தங்களது கட்சியுடன் சேர்த்து, தமிழகத்தையும் அடகு வைத்திருக்கும் இந்த அடிமைக் கூட்டம் உருவாகவும் சசிகலா குடும்பம்தானே காரணம்… ஜெயலலிதா தனித்து எதையுமே செய்யவில்லை என்றுதானே தினகரனே சொல்கிறார்… அப்படி தங்களாலேயே உருவாக்கப்பட்ட அடிமைக் கூட்டம் தங்களை மதிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் பிறந்திருப்பதுதான் அம்மா முன்னேற்றக் கழகம்.

எம்ஜிஆருக்கு பிறகுதான் தமிழகத்தில் அரசியலகற்றம் (Apolitical process) தீவிரமடைந்தது. அரசியலகற்றம் என்பது, ஒரு சமூகம் அதுவரை பெற்றிருந்த கருத்தியல் ரீதியான விழுமியங்கள் அனைத்தையும் ஒருசேரத் துடைத்தெறிவதுதான். அதைக் கச்சிதமாக செய்து முடித்து, தமிழகத்தை அரசியல் ரீதியாக காயடித்தவர் எம்ஜிஆர். (விஜயகாந்த், கமல்ஹாசன், ரஜினி என அத்தகைய அரசியல் காயடிக்க வருவோரின் பட்டியல் தற்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது)

 

சமூகநீதி அடிப்படையில் போராடிப் பெற்ற இடஒதுக்கீட்டுக்கு மாறாக வருமானத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடை மாற்ற நினைத்த மகானுபவர்தான் எம்ஜிஆர். எனவே இவர்களின் தொடக்கப் புள்ளியே அரசியல் சீரழிவுதான்.

மதமும், சாதியும் அரசியலில் எதற்கு என்றால், நீட் ரத்தை ஏன் வலியுறுத்துகிறீர்கள். சிறுபான்மையினர் உரிமையை ஏன் பேசுகிறீர்கள். இடஒதுக்கீடு தேவையில்லை என்று சொல்ல வேண்டியதுதானே… இந்தப் பிரச்சினைகள் அனைத்துமே மதத்தாலும், சாதியாலும் பிளவுபடுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கோரிக்கைகள்தான்…

இதைத் திருப்பிக் கேட்கும் அறிவுள்ளவர்கள் யாரும் தினகரனின் கூட்டத்தில் இருக்க வாய்ப்பில்லை.

அது வேறு கூட்டம். இத்தகைய அரசியல் குறித்த அறிவோ, அக்கறையோ, சமூகத்தின் எதிர்காலம் குறித்த கவலையோ அவர்களுக்கு இருக்க வாய்ப்பில்லை.

 

அப்படியே அந்தக் கூட்டத்தில் சிலர் இருந்தாலும், கொள்ளையடித்து குவிப்பதை மட்டுமே கொள்கையாக கொண்ட “தினகரனின் குடும்பப் பண்பாட்டுக்கு பழகியவர்களாக அவர்கள் இருப்பதால், இவற்றையெல்லாம் கேட்க விரும்பவும் மாட்டார்கள்.

 

ஆனால், இத்தகைய சமூகப் பொறுப்பு சார்ந்த கவலைகள் தினகரனுக்கு தேவையற்றவை.

தினகரனின் ஆர்கேநகர் வெற்றியை முதலில் ஆதரித்தவர் பத்திரிகையாளர் என தன்னைக் கூறிக் கொள்ளும் மாலன்தான். அந்த மாலன்தான், இன்று பாஜகவுக்காக தனது சகாக்களுடன் வெளிப்படையாக வாக்குக் கேட்கிறார். அப்படியென்றால் தினகரன் யார்… அவரது அரசியல் என்ன…

கேட்டால்… “ஹ…ஹ… மாலனா.. அவர் யாருனே எனக்கு தெரியாதே… “ என தனது வழக்கமான “இந்தச்” சிரிப்புடன் தினகரன் பதில் சொல்லக் கூடும்.

உள்நாட்டில் ஜெயயலிதாவும் அவரது உடன் பிறவா சகோதரி சசிகலாவும், (இப்போது தினகரன் எதிர்ப்பதாக கூறும் கும்பலும் சேர்ந்து) கொள்ளையடித்த பணத்தை, வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று வெள்ளையாக மாற்றியதில் …

 

தேர்தலில் டோக்கன் கொடுத்து பணம் தருவதாக பொய் கூறி (ஆர்கே நகர்)  ஏழை மக்களின் வாக்குகளைச் சுரண்டுவதில் எல்லாம் தினகரன் பெரிய கெட்டிக்காரர்தான்.

 

இதுவரை ஏழைகளின் வாழ்வாதாரத்தைச் சுரண்டியவர்களைத் தான் பார்த்திருக்கிறோம்.  அவர்களது வாக்குகளையும் ஏமாற்றிச் சுரண்டிய தீரர்தான் இந்தத் தினகரன்.

 

1992 ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பின் போது, கரசேவைக்கு கரம் கொடுத்த ஜெயலலிதாவின் பெயரில்தான் தனது கட்சியையே தொடங்கி உள்ளார் தினகரன். கட்சியையே அவரது பெயரில் தொடங்கி இருக்கும் தினகரன் தான், இஸ்லாமியர்களின் பாதுகாவலராக வேடம் போட்டு, தேர்தல் மேடையில் நாடகமாடி வருகிறார்.

 

தினகரனின் அரசியல் பிரவேசம் என்பது பழனிசாமி, பன்னீரின் அரசியல் பிரவேசத்தை விட கேவலமானது, கீழ்த்தரமானது.

 

அவர்கள் வழிப்பறித் திருடர்கள்.

 

தினகரனோ, திருட்டு, பதுக்கல், ஒதுக்கல் என அனைத்து சமூக சுரண்டல்களையும் திட்டமிட்டு, தொழில் சுத்தத்துடன் கார்ப்பரேட் செட்டப்பில் செய்து முடிக்கும் திறனைப் பெற்றவர்.

 

அவர் சந்தித்து வரும் வழக்குகள் எதுவுமே அரசியல் ரீதியான போராட்டங்களில் ஈடுபட்டோ, ஆதிக்க அரசியலை எதிர்த்து குரல் கொடுத்தோ அதற்காக போடப்பட்டவை அல்ல.

 

மோசடி… பித்தலாட்டம்…. ஏமாற்று…

 

அவசரநிலைப் பிரகடனத்தை திமுக எதிர்த்ததற்காகவே தமது 24 ஆவது வயதில் கைது செய்யப்பட்டு ஓராண்டு கொடுஞ்சிறையை அனுபவித்த ஸ்டாலினைத்தான் – மோசடி, தில்லுமுல்லு, ஏமாற்று வேலைகளுக்காக சிறைக்கு சென்றதுடன் வழக்குகளையும் சந்தித்து வரும் தினகரன் – தன் வாய்க்கு வந்தபடி தற்போது விமர்சித்து வருகிறார்.

 

ஆற்றொழுக்காக தனக்கு பேச வரவில்லை என்பதற்காக ஸ்டாலினைப் போல மிமிக்ரி செய்து தன் வக்கிரத்தைத் தீர்த்து வருகிறார்.

 

நீதிக் கட்சிக் காலத்தில் இருந்து எத்தனையோ தலைவர்கள் அரும்பாடு பட்டும், அரும் பெரும் தியாகங்களைச் செய்தும் வளர்த்து வந்த பகுத்தறிவு, சமூகநீதி என அனைத்து கோட்பாட்டு விழுமியங்களையும், மூடத்தனம் எனும் சாக்குமூட்டையில் சுருட்டி குப்பையில் போட வந்திருப்பவர்தான் தினகரன்.

 

தினகரனை ஆதரிப்பதும், இதுவரை தமிழர்கள் தங்களுக்கென்று பெற்றிருந்த அரசியல் விழுமியங்கள் அனைத்தையும் மொத்தமாக ஓரிடத்தில் குவித்து அவற்றை தீவைத்து கொளுத்துவதும் ஒன்றுதான்…

 

தமிழகத்தின் அறிவார் அரசியலை தீவைத்துக் கொளுத்தவா, இத்தனை காலம் அரசியல் களமாடி வந்தோம்…

 

தமிழர்களே சிந்தியுங்கள்… அரசியலில் தறுதலைகளை இனியும் ஆதரித்தால், அடுத்த தலைமுறையும் இந்த வலையில் இருந்து மீள முடியாது…