கோடநாடு சர்ச்சை: உச்ச நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி பொதுநல மனு..

கோடநாடு சர்ச்சை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார் டிராபிக் ராமசாமி.

ஆனால், இந்த பொதுநல மனுவை விசாரிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரணை தேதி ஏதும் குறிப்பிடவில்லை.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஏற்கெனவே நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது.

இந்நிலையில் அண்மையில் எழுந்துள்ள கோடநாடு சர்ச்சை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் டிராபிக் ராமசாமி.

தெகல்காவால் எழுந்த சர்ச்சை..

இந்நிலையில் தெகல்கா இதழின் முன்னாள் ஆசிரியர் மாத்யூ தனது புலனாய்வு மூலம் கிடைத்த தகவல்களை டெல்லியில் வெளியிட்டுள்ளார்.

அதில் உள்ள தகவல்கள் ஜெயலலிதா மரணம், கோடநாடு மர்மம் என மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கோடநாடு சம்பவங்கள்..

2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ம் தேதி கொடநாடு பங்களா சர்ச்சைக்குரிய பகுதியாக மாறியது.

அந்த பங்களாவின் காவலாளியாக இருந்த ஓம் பகதூர் என்பவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.

அப்போது காவல்துறை தரப்பில், ‘ஓம் பகதூர் சில மர்மமான நபர்களால் கொல்லப்பட்டார் என்றும் கோடநாடு பங்களாவில் இருந்த உயர்ரக கடிகாரங்களும் ஒரு கிரிஸ்டல் பேப்பர் வெயிட்டும் காணாமல் போனது’ என்றும் கூறப்பட்டது.

காவல்துறை விசாரணை நடத்திக்கொண்டு இருக்கும்போதே கனகராஜ் சாலை விபத்தில் மரணம் அடைகிறார்.

சயன் என்பவரது குடும்பமும் சாலை விபத்தில் சிக்குகிறது. அதில் சயன் மட்டுமே உயிரோடு தப்புகிறார். சயனின் மனைவியும் குழந்தையும் இறக்கிறார்கள்.

இந்த சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் கழித்து கோடநாடு பங்களாவின் சிசிடிவி ஆப்ரேட்டரான தினேஷ்குமாரும் இறக்கிறார்.

அதிரவைக்கும் வாக்குமூலங்கள்:

இந்த நிலையில் சயன் அளித்துள்ள வாக்குமூலத்தில், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜை தனக்கு 4 ஆண்டுகளாகத் தெரியும் என்று சயன் சொல்லி இருக்கிறார்.

ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது கனகராஜ் தன்னை அழைத்ததாகவும் கொடநாடு பங்களாவில் இருந்து சில ஆவணங்களை எடுக்க வேண்டும் என்று சொன்னதாகவும் சயன் சொல்லியிருக்கிறார்.

ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு 2017-ம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் கனகராஜ் தன்னை மீண்டும் தொடர்பு கொண்டதாகவும்

அந்த ஆவணங்களை கோடநாடு பங்களாவில் இருந்து எடுத்து வர எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக கனகராஜ் சொன்னதாகவும் சயன் சொல்லியிருக்கிறார்.

கனகராஜ் தன்னை சென்னைக்கு வரவழைத்து எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் ஆகியோரைச் சந்திக்க வைத்தாகவும் சயன் கூறியிருக்கிறார்.

கோடநாடு பங்களாவில் இருந்து ஆவணங்களை எடுத்து வர தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆட்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும்

கேரளாவைச் சேர்ந்த ஆட்களைப் பயன்படுத்தலாம் என்றும் அதற்கு 5 கோடி ரூபாய் பணம் பேசப்பட்டதாகவும்  வீடியோ பேட்டியாகவே சயன் கொடுத்துள்ளார்.

இந்த திட்டத்தைச் செயல்படுத்திய வலையார் மனோஜ் அளித்த வீடியோ பேட்டியில் கோடநாடு பங்களாவில் 2 ஆயிரம் கோடி ரூபாய் பணம் உள்ளதாக தன்னிடம் கனகராஜும் சயனும் சொன்னதாக வலையார் மனோஜ் சொல்லியிருக்கிறார்.

அதனை எடுக்க ஊட்டியில் தங்கி திட்டமிட்டதாகவும் வலையார் மனோஜ் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் இதனை எடுக்கத் திட்டமிடுவதாக கனகராஜும் சயனும் சொன்னதாக வலையார் மனோஜ் சொல்லியிருக்கிறார்.

இந்த வாக்குமூலங்களால் தமிழக அரசியலில் சர்ச்சை எழ கோடநாடு சர்ச்சை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார் டிராபிக் ராமசாமி.

இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமா என்பது இன்னும் உறுதியாகவில்லை.