ஐநா அமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னான் காலமானார். அவருக்கு வயது 80. மேற்காப்பிரிக்க நாடானா கானாவில் 1938 ஆம்ஆண்டு பிறந்த கோஃபி அன்னான், அமெரிக்கா, ஜெனீவாவில் உயர்கல்வியை முடித்தார். 1962 ஆம் ஆண்டு ஐநா அமைப்பில் சேர்ந்த அன்னான், சர்வதேச சுகாதார அமைப்புக்காக பெருமளவு பணியாற்றினார். 1992 முதல் 1996 வரை ஐநா துணை செயலாளராக அமைதிக்கான குழுவில் இணைந்து பணியாற்றினார்.
1996 ஆம் ஆண்டு ஐநாவின் பொதுச்செயலாளராக பணியாற்றினார். அவரது பதவிக்காலத்தில் எய்ட்ஸ் ஒழிப்புக்கான அமைப்பை ஏற்படுத்தி அதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தினார். சிரியாவில் உள்நாட்டுக் கலவரம் வெடித்த போது, ஐநா – அரேபிய முன்னணி கூட்டமைப்பின் தலைவராக அமைதிக்கான முயற்சிகளை எடுத்தார். அதற்கு சர்வதேச ஒத்துழைப்புக் கிடைக்காததால், அந்தப் பதவியில் இருந்து விலகினார். 2001ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். 2007ல் ஐநா பொதுச்செயலாளர் பதவிக்காலம் முடிவுக்கு வந்த பின்னர் கோஃபி அன்னான் அறக்கட்டளையை நிறுவினார். இதனிடையே ஆப்பிரிக்க விடுதலை வீரர் நெல்சன் மண்டேலா அமைத்த தி எல்டர்ஸ் என்ற அறக்கட்டளைக்கும் தலைவராக இருந்தார். உடல்நலக்குறைவு காரணமா சுவிட்சர்லாந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்னான், ஆகஸ்ட் 18 (இன்று)ம் தேதி காலையில் மரணமடைந்தார் .இந்தத் தகவலை கோஃபி அன்னான் அறக்கட்டளை உறுதி செய்தது. சர்வதேச அளவில் மிக உயர்வாக மதிக்கப்படும் ஐநா பொதுச்செயலாளர் பதவியை அலங்கரித்த முதல் கறுப்பினத்தவர் என்பது கோஃபி அன்னானுக்குரிய தனிச்சிறப்பாகும்.
Kofi Annan pass away