கோலமாவு கோகிலா : திரை விமர்சனம்.
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராகத் திகழும் நயன்தாராவுக்கு ஒரு மாஸ் பேன் பாலோயிங் உள்ளது.
அதற்கு காரணம் அவர் தொடர்ந்து தரமான கதையாக தேர்ந்தெடுத்து நடிப்பது தான்.
அந்த வகையில் இந்த கோலமாவு கோகிலாவும் தரமான படங்களின் லிஸ்டில் சேர்ந்ததா? பார்ப்போம்.
கதைக்கரு
நயன்தாரா மிடில் கிளாஸ் குடும்பம். அன்றாட வாழ்க்கையை நகர்த்தவே கஷ்டத்தில் இருக்கும் போது அவருடைய அம்மா சரண்யாவிற்கு கேன்சர் வருகின்றது.
அதை குணப்படுத்த நிறைய பணம் தேவைப்படுகின்றது. அந்த சமயத்தில் யதார்த்தமாக ஒரு போதைப்பொருள் கும்பலிடம் நயன்தாரா சிக்குகின்றார்.
அந்த கும்பலும் நயன்தாரா அப்பாவியாக இருக்கின்றார், யாருக்கும் சந்தேகம் வராது, இவரை வைத்தே கடத்தல் செய்யலாம் என்று நினைக்க, இவை நயன்தாராவிற்கு பெரும் பிரச்சனையில் போய் முடிகின்றது.
இந்த பிரச்சனை எல்லாம் கோகிலா எப்படி முறியடிக்கின்றார், தன் அம்மாவை எப்படி காப்பாற்றுகின்றார் என்பதே மீதிக்கதை.
படம் பற்றி ஒரு பார்வை
நயன்தாரா ஒன் வுமன் ஷோ என்று சொல்லலாம், இவருக்கு மட்டும் எப்படி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரம் இத்தனை நன்றாக கிடைக்கின்றதோ என எண்ண வைக்கின்றார்.
கொஞ்சம் நானும் ரவுடி தான் காதம்பரி ஸ்டைல், அமைதி மற்றும் பதட்டத்துடனே படம் முழுவதும் அசத்துகின்றார். அதிலும் ‘சார் நீங்க அவன சுட்டா தான் இங்க இருந்து போவேன்,
கொலை பார்க்க பயமா இருக்கு நான் திரும்பி காதை மூடிக்கொள்கின்றேன்’ என சொல்லும் இடமெல்லாம் செம்ம அப்லாஸ்.
அவருக்கு அடுத்து படத்தில் ஸ்கோர் செய்வது சொல்லி தெரிய வேண்டியது இல்லை யோகிபாபு தான். படத்தின் முதல் பாதி ஒரு பாடலுடன் எஸ்கேப் ஆகின்றார்,
அட எங்கடா போனார் என்று தேடும் நிலையில் இரண்டாம் பாதியில் நயன்தாராவுடனே ட்ராவல் செய்து கலக்குகின்றார்.
படத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களும் நம்மை கவர்கின்றனர், நயன்தாரா தங்கை ஜாக்லீன், யோகிபாபு கடையில் வேலை பார்க்கும் பையன், மொட்டை ராஜேந்திரன், இவர்களை எல்லாம் விட டோனி என்று ஒரு கதாபாத்திரம் வருகின்றது.
அவருடைய மேனரிசம் சிரிப்பு சரவெடி. அதே நேரத்தில் ஜாக்லினை காதலிக்கும் இளைஞர் ஏற்கனவே மீசைய முறுக்கு படத்தில் எப்படி பதட்டமாக பேசுவாரோ, அதேபோல் தான் இதிலும், ஆனால் கொஞ்சம் ஓவர் ஆக்டிங்.
விறுவிறுப்பாக சொல்ல வேண்டிய கதையை இயக்குனர் நெல்சன் கொஞ்சம் மெதுவாகவே நகர்த்தி செல்கின்றார். இடைவேளைக்கு முன்பு வரும் படத்தின் எதிர்ப்பார்ப்பு, அதன் பிறகு காமெடி ஒர்க் அவுட் ஆனாலும் திரைக்கதை கொஞ்சம் மெதுவாகவே செல்கின்றது,
அதிலும் கிளைமேக்ஸ் அட என்னப்பா இப்படி என்று தான் நினைக்க வைக்கின்றது.
சிவகுமாரின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கின்றது, அனிருத் பாடல்கள் ஏற்கனவே ஹிட் செய்து விட்டார், பின்னணியிலும் நல்ல இசையை கொடுத்தாலும், கொஞ்சம் டயலாக் கேட்க விடுங்க சார் என்று சொல்ல தோன்றுகின்றது.
ப்ளஸ்
நயன்தாரா, யோகிபாபு காட்சிகள் கைத்தட்டல் பறக்கின்றது.
படத்தின் வசனம் டார்க் ஹியூமர் நன்றாக ஒர்க் ஆகியுள்ளது, அதிலும் மொட்டை ராஜேந்திரன் ‘பச்சையப்பாவில் படித்தாலும் பச்சை பச்சையாக பேசுவேன், எட்டுக்கால் பூச்சிக்கு எட்டுக்கால் இருந்தாலும், 10வது மாடி போக 8 வருஷம் ஆகும், ஆனா 10 ரூ ராக்கேட் உடனே போகும், நீ ராக்கேட் மாதிரி போகனும்’ என்று பல வசனங்கள் பேசி இப்படி ஸ்கோர் செய்கின்றார்.
கதாபாத்திரங்கள் வடிவமைப்பு, அதிலும் டோனி செம்ம.
மைனஸ்
நல்ல விறுவிறுப்பாக செல்லவேண்டிய கதையை கொஞ்சம் மெதுவாக நகர்த்தி சென்றது.
கிளைமேக்ஸ் இன்னும் கொஞ்சம் கூட அழுத்தமாக இருந்திருக்கலாம்.
மொத்தத்தில் நயன்தாரா, யோகிபாபுவை நம்பி கோகிலாவை ரசிக்கலாம்.