வரலாற்று நிகழ்வு: எல்லையைக் கடந்து கொரிய அதிபர்கள் சந்தித்துப் பேச்சு..


1953 ஆம் ஆண்டு கொரிய போருக்கு பிறகு வடகொரியா, தென்கொரியா நாட்டு அதிபர்கள் இருவரும் எல்லை கடந்து சந்தித்து கொண்ட வரலாற்று நிகழ்வு நடந்துள்ளது.

வடகொரியா அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் எழுந்தது. வடகொரியா மீது ஐ.நா. சபையும் அமெரிக்காவும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன.

திடீர் திருப்பமாக தென்கொரியாவின் அழைப்பை ஏற்று கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதன்பின் தென்கொரிய பிரதிநிதிகள் வடகொரியாவுக்கு சென்று அந்த நாட்டு அதிபர் கிம் ஜோங் உன்னை சந்தித்துப் பேசினர்.

அப்போது ஏப்ரல் 27-ம் தேதி இருநாடுகளின் உச்சி மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இரு நாட்டு எல்லை யில் உள்ள அமைதி கிராமமான பான்முன்ஜியோமில் இன்று உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வரும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை, தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் வரவேற்றார்.

வடகொரியா தென் கொரிய நாடுகளை பிரிக்கும் எல்லைக் கோட்டு பகுதியில் வந்திறங்கிய வடகொரிய அதிபர் கிம்மை, தென்கொரிய அதிபர் மூன் கைகுலுக்கி வரவேற்றார்.

பின்னர் இருவரும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். தென்கொரிய அதிகாரிகளை கிம்மிற்கு மூன் அறிமுகம் செய்து வைத்தார். இவர்களது சந்திப்பை பதிவு ஆயிரக்கணக்கான செய்தியாளர்கள் அங்கு குழுமி இருந்தனர்.

இந்த சந்திப்பில் அணு ஆயுத குறைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்றும் மேலும் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.

மாநாட்டின் நினைவாக பான்முன்ஜியோம் அமைதி கிராமத்தில் மரம் நடப்பட உள்ளது. இதற்காக இருநாடுகளில் இருந்து மண், தண்ணீர் எடுத்து வரப்பட்டிருக்கிறது.

அடுத்த மாதம் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளனர். அதற்கு இந்த உச்சி மாநாடு பாதை வகுக்கும் என்று கூறுகின்றனர்.