கோவை கொள்ளை : கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொள்ளைத் திட்டத்தை அரங்கேற்றிய பெண் ஊழியர்

கோவையில் முத்தூட் மினி நிதி நிறுவனத்தில் 812 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், திட்டம் போட்டு கொள்ளையடித்த அந்நிறுவன பெண் ஊழியர் தனது கள்ளக் காதலனுடன் போலீசில் சிக்கினார்.

கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள முத்தூட் மினி நிதி நிறுவனத்தில் நேற்று முன் தினம் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியது.

முகமூடி அணிந்த மர்மநபர் ஒருவன், அலுவலகத்தில் இருந்த ரேணுகா, திவ்யா ஆகிய இரு பெண் ஊழியர்களைத் தாக்கி 812 சவரன் நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றதாகப் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நான்கு தனிப்படைகளை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

கொள்ளை சம்பவம் நடைபெற்றபோது பணியில் இருந்த ரேணுகா மற்றும் திவ்யா என்ற இரண்டு பெண்களையும் விசாரித்து வந்தனர்.
ரேணுகாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

கிடுக்கிப்பிடி விசாரணையில், முகமூடி அணிந்து வந்து கொள்ளையடித்த நபர் தனது கள்ளக் காதலன் என ரேணுகா ஒப்புக் கொண்டார்.

செல்போன் உரையாடல்கள் மற்றும் அழைப்பு விவரங்களை வைத்து கொள்ளையடித்துச் சென்றவன், கோவை கெம்பட்டி காலனியைச் சேர்ந்த சுரேஷ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை அடுத்து அவனைக் கைது செய்த போலீசார், அவனிடம் இருந்து நகைகள் மற்றும் பணத்தை மீட்டனர். ரேணுகாவையும் கைது செய்து இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

இருவரிடையே தகாத உறவு இருப்பதாகவும், சொகுசாக வாழ எண்ணி நகைகளை கொள்ளையடிக்க திட்ட தீட்டியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்…