கோவையில் வி‌ஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு..


கோவையில் தங்கநகை தயாரிப்பு தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்திய போது வி‌ஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் ரவிசங்கர் (வயது 50). இவர் பாதர்ரேண்டிவீதியில் ‘ஸ்ரீபத்மராஜா ஜூவல்லரி’ என்ற பெயரில் தங்கநகை தயாரிப்பு தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு 16 பேர் வேலை பார்க்கின்றனர்.

இங்கு நகை தயாரிக்கும் போது தங்கத்தை சுத்தப்ப டுத்துவற்காக கெமிக்கல் பயன்படுத்துவார்கள். அந்த கெமிக்கலுடன் தங்க துகள்கள் சேர்ந்து வெளியேறும். அவை அங்கு அமைக்கப்பட்டுள்ள 10000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ‘சின்டெக்ஸ்’ தொட்டிக்கு செல்லும். 6 மாதத்துக்கு ஒரு முறை இந்த தொட்டியை சுத்தம் செய்து கழிவுநீரில் இருந்து தங்க துகள்களை பிரித்து சேகரிப்பது வழக்கம் என கூறப்படுகிறது.

அதன்படி நேற்று நள்ளிரவு இத்தொழிற்சாலையின் ‘சின்டெக்ஸ்’ தொட்டியை சுத்தம் செய்வதற்காக வேடப்பட்டியை சேர்ந்த கவுரிசங்கர்(21), ரத்தின புரியை சேர்ந்த ஏழுமலை(23), கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (28) ஆகியோர் சென்றனர். இவர்களுக்கு மொத்த சம்பளமாக ரூ.7 ஆயிரம் பேசப் பட்டிருந்ததாக தெரிகிறது.

மூன்று பேரும் நள்ளிரவு12 மணிக்கு ‘சின்டெக்ஸ்’ தொட்டியை சுத்தப்படுத்த தொடங்கினர். அதில் இருந்த தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி விட்டு சிறிது ஓய்வெடுத்தனர். பின்னர் தொட்டிக்குள் இருக்கும் தங்கதுகள்களை பிரித்து எடுப்பதற்காக அதிகாலை 1.30 மணி அளவில் மீண்டும் வேலையை ஆரம்பித்தனர்.

இதற்காக கவுரிசங்கர், ஏழுமலை ஆகிய இருவரும் தொட்டிக்குள் இறங்கினர். அப்போது எதிர்பாராதவித மாக வி‌ஷவாயு தாக்கி இருவரும் மயங்கி விழுந்தனர். வெகு நேரமாகியும் இருவரும் வெளியே வராததால் சந்தேக மடைந்த ராதாகிருஷ்ணன் தொட்டியை பார்த்த போது இருவரும் மயங்கிக் கிடப்பதை பார்த்து சத்தம் போட்டார். அங்கு பணியில் இருந்த காவலாளியான ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்த சூர்யா(23) ஓடி வந்தார். அவர் இருவரையும் மீட்பதற்காக தொட்டிக்குள் இறங்கிய போது அவரையும் வி‌ஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ராதாகிருஷ்ணன் பலத்த சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அந்நிறுவன ஊழியர்கள் அங்கு ஓடி வந்தனர். இதுகுறித்து தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தொட்டியை கவிழ்த்து 3 பேரையும் வெளியே எடுத்தனர். இதில் கவுரிசங்கர், ஏழுமலை ஆகிய இருவரும் சம்பவஇடத்திலேயே இறந்தனர்.

சூர்யா மயக்கத்தில் இருந்தார். தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அதிகாலை 4.30 மணிக்கு அவர் இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் உதவி கமி‌ஷனர் வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.