கோயம்பேடு மார்க்கெட் நமக்கு மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன. சென்னையில் அதிக அளவு பாதிப்பு உள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து கடலூர் சென்றவர்களில் நேற்று முன்தினம் 2 பேருக்கும், பின்னர் நேற்று 7 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே கடலூரில் இருந்து காய்கறிகளை விற்பனை செய்வதற்காக சென்னையிலுள்ள கோயம்பேடு சந்தைக்கு வந்து சொந்த ஊர் திரும்பியவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது. இதில் 8 பேருக்கு கொரோனா இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கோயம்பேடு சந்தை நமக்கு மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகம் மற்ற மாநிலத்திற்கு முன்னுதாரணமாக திகழ்கிறது என்றும்,

சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.கோயம்பேடு சந்தை மூலம் 100க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.