சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து கிருஷ்ணகிரியில் அமையும் சிறப்பு முதலீட்டு மண்டலத்திற்கான துவக்க பணிகளை முதல்வர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டின் வடமாவட்ட பொருளாதார வளர்ச்சிக்காக கிருஷ்ணகிரியில் சிறப்பு முதலீட்டு மண்டலம் அமைக்க திட்டமிடப்பட்டது. ரூ. 2,420 கோடி மதிப்பில் உருவாகும் இந்த திட்டத்தின் மூலம் 60 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என தெரிகிறது.
இதற்கான துவக்க பணிகளை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரியில் உள்ள தேன்கனிக் கோட்டை மற்றும் சூலகிரி தாலுக்காவில் இந்த மண்டலம் 2100 ஏக்கர் பரப்பரப்பளவில் அமைய உள்ளது. இங்கு கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம், இணைய சேவை, மின்சார பயன்பாடு இவற்றுடன் கழிவு நீர் வடிகால்கள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த சாலை வசதிகள் போன்றவை கட்டமைக்கப்படுகின்றன.
இதற்கான பணிகள் 7 முதல் 8 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முதலீட்டு மண்டலத்தில் 5 ஆயிரம் கோடி வரையிலான முதலீடுகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் ஆகியவை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.