"நான் வெளியிட விரும்பும் எழுத்தாளர் ஷோபாசக்தி" – க்ரியா ராமகிருஷ்ணன் நேர்காணல் : சந்திப்பும், ஆக்கமும் ஷங்கர்ராமசுப்பிரமணியன்

Kriya Ramakrishnan Interview by Shankarramasubramaniayan

________________________________________________________________________________________________________

 

kriya ramakrishnanதமிழ்ப் பதிப்பக வரலாற்றின் நீண்ட நெடும்பாதையில், சென்ற நூற்றாண்டின் பின்பகுதியில் செயல்படத் தொடங்கிய க்ரியா பதிப்பகம் தற்போது 40 ஆண்டுகளைக் கடந்துள்ளது. பதிப்பு, மொழிபெயர்ப்பு, எடிட்டிங், மொழியியல், அகராதியியலில் இன்று தவிர்க்க முடியாத பெயராக க்ரியா பதிப்பகம் திகழ்கிறது.

 

நாவல், சிறுகதை, கவிதை என எந்த நூலாக இருப்பினும் உள்ளடக்கத்திற்கும் அட்டை வடிவமைப்பு, அழகியலுக்கும் சம்பந்தமே இல்லாமல் வெறும் சரக்குகளாகப் புத்தகங்கள் வெளிவந்து கொண்டிருந்த காலகட்டம் அது. எழுத்தாளர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் தங்கள் படைப்புகளைப் புத்தகங்களாக வெளியிடும் வாய்ப்புகளும் குறைவாகவே இருந்தன. இச்சூழ்நிலையில் தரமான வெளியீடு என்பதை அவர்கள் நினைத்துப் பார்க்கவும் இயலாத நிலையே இருந்தது. இப்பின்னணியில் 1974-ல் தமிழ்ச் சிற்றிதழ் இயக்கம் சார்ந்த சமகால படைப்புகளை வெளியிடுவதன் மூலம் கால்பதித்தனர் க்ரியா பதிப்பகத்தினர். இதன் பதிப்பாளர் க்ரியா ராமகிருஷ்ணன், தாம் வெளியிடும் புத்தகங்களைக் கலைப்படைப்புகளாக மாற்றினார்.

 

தமிழில் புதுக்கவிதை இயக்கம் வலுப்பெற்ற பின்னணியில் முக்கியமான கவிக்குரல்களாக உருவான சி.மணி, பசுவய்யா (சுந்தர ராமசாமி), நாரணோ ஜெயராமன் போன்றவர்களது முதல் கவிதைத் தொகுதிகள் இன்றும் க்ரியாவின் ஆத்மார்த்தத்திற்குச் சான்றாக இருப்பவை.

 

பிரெஞ்சிலிருந்து நேரடியாக மொழி பெயர்க்கப்பட்ட ஆல்பெர் காம்யூவின் ‘அந்நியன்’, எக்சுபெரியின் ‘குட்டி இளவரசன்’ போன்றவை தமிழ் வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நூல்கள். ஜெர்மன் மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்ட பிரான்ஸ் காஃப்காவின் ‘விசாரணை’ நாவல் தமிழ் எழுத்தாளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நூல்.

 

இந்தியா போன்ற மூன்றாம் உலக நாட்டு மக்களின் எளிய மருத்துவப் பிரச்னைகளுக்கு அவர்களே தீர்வு காணும் விதமாக எழுதப்பட்ட டேவிட் வெர்னரின் ‘டாக்டர் இல்லாத இடத்தில்’ நூலை எளிமையாக மொழிபெயர்த்து பதிப்பித்தது பெரிய சேவை.

 

உடல்நலம், விவசாயம், சுற்றுச்சூழல், தொழில்நுட்பம் எனப் பல துறைகள் சார்ந்து க்ரியா பதிப்பகம் புத்தகங்களை வெளியிட்டுள்ளது. இந்தப் பணிகளின் பின்னணியில் ஏற்பட்ட மொழி அனுபவம் வழியாகத் தற்காலத் தமிழ் அகராதியின் தேவையை உணர்ந்து க்ரியா- தற்காலத் தமிழ் அகராதியை பல ஆண்டுகள் உழைப்புக்குப் பின்னர் 1992-ல் வெளியிட்டது. தொடர்ந்து அந்த அகராதியை புதிய சொற்களுடன் புதுப்பித்தும் வருகிறார்கள். க்ரியாவின் இணையதளத்தில் சொல்வங்கி ஒன்றையும் உருவாக்கி 35 லட்சம் வரை சொற்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

 

நாவல், சிறுகதை, கவிதை போன்ற இலக்கியப் படைப்புகளுக்கும் மொழிசார்ந்து மேம்படுத்த ஒரு எடிட்டர் தேவை என்பதைத் தமிழ்ப் பதிப்புத் தொழிலில் உணர்த்தியவர்கள் க்ரியா பதிப்பகத்தினர். ஒரு புத்தகம் என்பது உள்ளும், புறமும் அழகான ஒரு உயிர் என்ற அந்தஸ்தை அளித்த பெருமை க்ரியாவுக்கு உண்டு. க்ரியா ராமகிருஷ்ணனுடன் தி இந்து தமிழ் நாளிதழின் ‘கலை ஞாயிறு’ 
இணைப்புக்காக எடுக்கப்பட்ட நேர்காணலின் முழுவடிவம் இது…

 

 உங்கள் பின்னணி பற்றி கூறுங்கள்?

 

நான் சென்னையில்தான் பிறந்து வளர்ந்தேன். தமிழ்மீடியம்  பள்ளியில் தான் தான் படித்தேன். தமிழ்வழிக் கல்வி படித்ததில் இப்போது சந்தோஷம் எனக்கு. தாய்மொழிக் கல்வி கற்பதுதான் ஆரோக்கியமானது என்பதை உணர்கிறேன்.  நான் படித்த பள்ளி  பின்தங்கிய பள்ளிக்கூடமாக கருதப்பட்டாலும், அங்குள்ள ஆசிரியர்கள் மிகவும் பொறுப்பானவர்கள். குறிப்பாக ஆங்கில, தமிழாசிரியர்கள் நல்லதொரு அடிப்படையை அமைத்துக் கொடுத்தார்கள். அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்த அடிப்படை மீதுதான் நான் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறேன்.

 

நவீன இலக்கியவாதிகளோடு எப்போது பரிச்சயம் ஏற்பட்டது?

 

1963-ல் ம.ராஜாராமைச் சந்தித்தேன். அவர் லயோலாவிலும் நான் ஜெயின் கல்லூரியிலும் படித்தோம். ஒரே தெருவில் வசித்தவர்கள் நாங்கள். ஒன்றாகப் பயணம் செய்வோம். அப்போதே ம.ராஜாராம், கல்கியில் ஒரு கதை எழுதிப் பரிசெல்லாம் வாங்கியிருந்தான். அவன் என்னைவிட ஒரு வயது மூத்தவன். அவர் காலேஜ் முடித்துவிட்டு குரோம்பேட்டை எம்ஐடியில் சேர்ந்து எலக்ட்ரானிக்ஸ் படித்தான். பின்னாளில் எழுத்தாளர் சுஜாதாவுடன் சேர்ந்து, ‘காசளவில் ஒரு உலகம்’ என்று வாசகர் வட்டம் வெளியிட்ட புத்தகத்தையும் எழுதினான். எலக்ட்ரானிக்ஸ் தொடர்பாக தமிழில் வெளிவந்த முதல் புத்தகம் அது. ராஜாராம் எம்ஐடியில் படிக்கும்போதுதான் அங்கே சா.கந்தசாமி ஆய்வகத்தில் உதவியாளராக வேலை செய்துகொண்டிருந்தார். அதனால் சா.கந்தசாமி எனக்கும் பரிச்சயமானார். சா.கந்தசாமியும், பின்னர் கசடதபற ஆசிரியராக இருந்த கிருஷ்ணமூர்த்தியும் தஞ்சாவூர் பக்கம் ஒரே ஊர். அவர்கள் சேர்ந்து படித்தவர்கள். அதனால் நான்கு பேரும் சந்திக்க ஆரம்பித்தோம். நான் இலக்கியத்துறைக்கு வருவதற்கு முக்கியமான காரணம் சா.கந்தசாமியும், ம.ராஜாராம் இருவரும்தான். அதற்கு முன்னாடியும் எனக்குப் புத்தகங்கள் படிப்பது பிடிக்கும். நிறைய படித்துக்கொண்டே இருந்தேன். அகிலன், நா.பார்த்தசாரதி எல்லாரையும் படிப்பேன். கல்லூரி நாட்களில் ஜெயகாந்தன் பெரிய ஆதர்சமாக இருந்தார்.

 

ஆனால் இலக்கியம் என்பது படைப்பு ரீதியான விஷயம், அதற்கென்று பல பரிணாமங்கள் இருக்கிறது என்பதெல்லாம் நாங்கள் நான்குபேர் சேர்ந்தபிறகுதான் எனக்குத் தெரியவந்தது. இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, பள்ளிப்படிப்போ கல்லூரிப் படிப்போ எந்த விதத்திலும் எனக்கு உதவிசெய்யவில்லை.  மொழியின் பயன்பாட்டு நிலை பற்றிய அறிவுதான் பள்ளி, கல்லூரியில் கிடைத்தது. இலக்கியப் பிரக்ஞை,மொழியின் அமைப்பு, நுணுக்கங்கள் பற்றியெல்லாம் வெளியில் படித்துத்தான் தெரிந்துகொண்டேன். சுந்தர ராமசாமியின் எழுத்துகளை அறிமுகப்படுத்தியது ராஜாராம்தான்.

 

கசடதபற சிற்றிதழுக்கு முன்பே நீங்களும் நண்பர்களும்  இலக்கியக் கூட்டங்களை நடத்தியுள்ளீர்கள். அதற்கான உந்துதலை எப்படி பெற்றீர்கள்?

 

நாங்கள் அக்காலத்தில் சென்ற இலக்கியக் கூட்டங்கள் நடத்தப்பட்ட விதம் மிகவும் மோசமாக இருந்தது. நேரத்திற்கு ஆரம்பிக்க மாட்டார்கள். பேசுவதில் அர்த்தமே இருக்காது. சம்பிரதாயம், சடங்குகள் தான் அதிகமாக இருக்கும். 1966-ல் இலக்கிய சங்கம் என்ற பெயரில் நாங்கள் நான்கு பேரும் கூட்டங்கள் போடத் தொடங்கினோம். அப்போதுதான்  எல்எல்ஏ பில்டிங்கில்(தேவநேயப் பாவாணர் நூலகம்) ஒரு பெரிய கூட்ட அரங்கம் கட்டி முடித்திருந்தனர்.  இரண்டு ரூபாய்தான் வாடகை வைத்திருந்தனர். மிக வசதியான அரங்கம் அது. அந்த இடத்தை நாங்கள்தான் முதலில் பயன்படுத்தத் தொடங்கினோம். மூன்று ஆண்டுகள் தொடர்ந்து கூட்டங்கள் நடத்தினோம்.  ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையிலும் ஞாயிற்றுக்கிழமையிலும் கூட்டங்கள் நடக்கும். எங்கள் கூட்டங்களுக்கென்று சில விதிமுறைகளைக் கறாராக வைத்துக் கொண்டிருந்தோம். நேரத்தில் தொடங்குவோம். பங்கெடுப்பவர் கட்டுரை தான் வாசிக்க வேண்டும். பார்வையாளர்கள் கேள்விகளுக்கு கட்டுரை வாசித்து முடித்தபின்னர் பதில் சொல்லவேண்டும். ஒவ்வொரு கூட்டத்திலும் பேசப்படும் பொருள் குறித்து அறிமுகக் குறிப்பும் முதலில் தரப்படும். அந்த அறிமுகக் குறிப்பை எழுதுவதற்காகவே நான் பலதுறை நூல்களைப் படித்தேன். கட்டுரை படிக்க வருபவருக்கு ஒரு பைசா கூட செலவு செய்யமாட்டோம். எல்லா விதிமுறைகளையும் கடுமையாகப் பின்தொடரவும் செய்தோம். இதுகுறித்து அசோகமித்திரன் போன்றவர்கள் கேலி செய்துள்ளனர். இது என்ன இரங்கல் கூட்டம் மாதிரி யாரும் சிரிக்கக் கூட முடியாமல் இருக்கிறதென்று சொல்லியிருக்கிறார். இலக்கியம் தவிரவும் உளவியல், காந்தியம், ஓவியம் எல்லாம் குறித்து பல துறைசார்ந்தவர்கள் பேசியுள்ளனர். அங்கேதான் ஓவியர் கிருஷ்ணமூர்த்தியின் அறிமுகம் கிடைக்கிறது. கிருஷ்ணமூர்த்தி வரைந்த ஓவியம்தான் நாங்கள் வெளியிட்ட கோணல்கள் சிறுகதைத் தொகுப்பின் அட்டையாக வந்தது. தமிழ் புத்தக வெளியீட்டுத் துறையில் முதலில் வெளிவந்த  நவீன ஓவியம் அவருடையதுதான்.

 

சி.சு.செல்லப்பா, முத்துசாமி போன்றவர்கள் எல்லாம் அந்தக் கூட்டத்திற்கு வருவார்கள். செல்லப்பா கையில் காக்கிப்பை தொங்கிக் கொண்டிருக்கும். அவர் பின்னால் முத்துசாமி, கி.அ.சச்சிதானந்தம், வி.து. ஸ்ரீனிவாசன் எல்லாரும் வருவார்கள். வி.து. ஸ்ரீநிவாசன் நிறைய எழுதியவரில்லை. நல்ல படிப்பாளி. கணக்குலயும் சயன்ஸ்லயும் நல்ல ஈடுபாடு. மிஸ்டிகல் சிஸ்டம்ஸ் என்று சொல்லப்படும் அறிவியலில் அவருக்கும், சி.மணிக்கும் அபாரமான ஈடுபாடு இருந்தது. ஐம்பதுகளின் பின்பகுதியிலும் அறுபதுகளின் ஆரம்பத்திலும் அவர்கள் அத்துறை சார்ந்து, நிறைய புத்தகங்களை வெளிநாடுகளில் இருந்தெலாம் வரவழைத்துப் படித்து பல பரிசோதனைகளிலும் ஈடுபட்டார்கள். வி.து.ஸ்ரீனிவாசன் கனத்த குரலில் பேசுவார். இலக்கிய சங்கம் கூட்டங்களிலும் கேள்விகள் கேட்பார். செல்லப்பாவையும் ஒரு கூட்டத்தில் பேசக் கூப்பிட்டோம். கட்டுரை படிக்கமாட்டேன், பேசத்தான் செய்வேன் என்றார். அப்படியெனில் நீங்கள் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டோம். கூட்டம் முடிந்தபிறகு யாரும் கலையமாட்டார்கள். அப்படியே பக்கத்தில் உள்ள தேநீர் கடையில் போய் பேசுவோம்.

 

இடதுசாரி கட்சிகள் சார்ந்த இலக்கியக்குழுக்களும் அப்போதுதான் கூட்டங்கள் போடத்தொடங்கினார்கள். அவர்களும் எங்கள் கூட்டத்துக்கு வருவார்கள். தி.க.சி., தொ.மு.சி.ரகுநாதன் எல்லாம் வருவார்கள். தேவநேயப் பாவாணர் நூலகத்துக்குப் பக்கத்திலேயே அப்போதிருந்த அமெரிக்கத் தூதரக நூலகத்திற்கும் போவோம். அதன் நூலகர் எங்களுக்கு நண்பரானார். அவருக்கு சொந்தமாக ஹிக்கிம்பாதம்ஸ் எதிரே ஒரு சிறிய திரையரங்கு இருந்தது. அதில் அமெரிக்க எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் தொடர்பான ஆவணப்படங்களைத் திரையிட்டு எல்லாரையும் வரவழைத்தோம். மாக்ஸ்முல்லர் பவனுடனும் தொடர்பு உருவானது. அவர்களுடன் சேர்ந்து ஜெர்மன் மொழி இலக்கியங்களை நேரடியாக மொழிபெயர்க்கும் வேலைகளை அப்போதே ஆரம்பித்தோம். ஹைன்ரிச் பியோல், வோல்ப்கேங் ப்ரோச்சர்ட் இரண்டு பேருடைய சிறுகதைகளை மொழிபெயர்த்தோம். அங்கேயும் கூட்டங்கள் நடத்தியிருக்கிறோம்.

 

1969-ல் டெல்லிக்குப் போனேன். லீகல் சோசியாலஜியில் ஆய்வு உதவியாளராக எனக்கு வேலை கிடைத்தது. 1970 வரை அங்கேதான் இருந்தேன். வெங்கட் சாமிநாதன் தான் எனக்கு அறை பார்த்துத் தந்தார். என் வாழ்வின் மிக வளமான காலகட்டம் அது. அப்போதெல்லாம் டெல்லி, மாலை ஐந்தரை மணிக்கே தூங்கிவிடும். ஆனால் மாக்ஸ்முல்லர் பவன், சங்கீத நாடக அகாதமி, லலித் கலா அகாதமி எல்லாம் மாலையில்தான் உற்சாகம் கொள்ளத் தொடங்கும். தினமும் சாயந்திரம் நானும் வெங்கட் சாமிநாதனும் சேர்ந்து திரைப்படங்கள், கலை நிகழ்ச்சிகளுக்குப் போவோம். எனது அலுவலகத்திற்கு எதிரே ஐஎப்எக்ஸ் ஆடிட்டோரியத்தில் நல்ல நாடகங்களைப் பார்த்திருக்கிறோம். காலையில் ஏழுமணிக்கு எனது அறைக்கு வந்துவிடுவார் சாமிநாதன். அலுவலகம் கிளம்பும்போது அவரும் அலுவலகம் போவார். டெல்லி ஆல் இந்தியா ரேடியோவில் அப்போது தி.ஜானகிராமன் வேலை செய்துகொண்டிருந்தார்.  

 

கசடதபற இதழை எப்போது தொடங்கினீர்கள்?

 

டெல்லியிலிருந்து சென்னைக்கு மீண்டும் 1970-ல் வந்தேன். சென்னையில் உள்ள இந்துஸ்தான் தாம்சன் நிறுவனத்தில் சந்தை ஆய்வுப் பிரிவில் இருந்தேன். அந்த வேலை எனக்குப் பல விஷயங்களையும் தெரிந்துகொள்ள பயனுள்ளதாக இருந்தது. அப்போது எங்கள் இலக்கிய சங்கம் குழு விரிவானது. ஞானக்கூத்தன், ஐராவதம் சுவாமிநாதன், ந.முத்துசாமி, பாலகுமாரன், மஹாகணபதி(எம்.என்.பதி என்ற பெயரில் கவிதையெல்லாம் எழுதியிருக்கிறார்) எல்லாரும் சேர்ந்து கசடதபற பத்திரிக்கையைத் தொடங்கினோம். ஞானக்கூத்தன் தான் அதற்குப் பெயர் வைத்தார். கசடதபற தொடர்பான படைப்பாலோசனைகளை எல்லாரும் செய்தாலும் பணத்தை நிர்வகிப்பதிலிருந்து, அச்சகம் செல்வது, விநியோகம் வரை எல்லா பணிகளையும் நானும், கிருஷ்ணமூர்த்தியும் சேர்ந்தே செய்தோம். நா.கிருஷ்ணமூர்த்தி எனக்கு நேரெதிரான பண்புள்ளவர். நான் எல்லாரையும் அதட்டி உருட்டி வேலை வாங்குவேன். அவர் எல்லாவற்றையும் மிக அமைதியாகச் செய்வார். அச்சகத்துக்கு ஒன்பது மணிக்குப் போகலாம் என்றால் 8.55க்கு தயாராக இருப்பார்.

 

கசடதபற இதழுக்கு அப்போது எல்லாம் சேர்ந்து 150 முதல் 200 ரூபாய் வரை ஆகும். அப்போதுதான் ஞானக்கூத்தனின் திருமணத்தை முன்னிட்டு அவரது முதல் கவிதைத் தொகுதியான ‘அன்று வேறு கிழமை’ புத்தகத்தைக் கொண்டுவந்தோம். நல்ல தரமான அட்டை மற்றும் தாளில் வந்த கவிதைத் தொகுதி அது. அப்போதெல்லாம் படங்கள் அச்சிடுவதற்கு ப்ளாக்குகளை செய்ய வேண்டும். அதற்கு ப்ளாக்மேக்கர்களிடம் போகவேண்டும். க்ரியாவுக்கான அடித்தளம் கசடதபற பணிகளில்தான் உருவானது. ப்ரூப் பார்ப்பது, அச்சகத்துக்குப் போவது, அச்சிடுவதில் என்னென்ன பிரச்சினைகள் வரும் என்பதையெல்லாம் முழுமையாகத் தெரிந்துகொண்டேன்.

 இரண்டு ஆண்டுகள் நான் வேலைபார்த்த விளம்பர நிறுவனத்தில் 120 பேர் பணிபுரிந்தனர். விளம்பரத்துக்கான ஒரு யோசனை உருவாகி அது எப்படி முழுவடிவத்தை எப்படி அடைகிறது என்பதுவரை எல்லா விஷயங்களும் எனக்குத் தெரியும். ஒரு வானொலி விளம்பரம் தொடங்கி திரைப்பட ஸ்லைடு வரை ஒவ்வொரு படிநிலையிலும் எப்படி உருவம் பெறுகிறது என்பதை தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாக கற்றுக்கொண்டேன். அப்போதுதான் கசடதபற இதழ்பணிகளிலும் ஈடுபட்டேன். அப்போது திருவல்லிக்கேணியில் 10.40க்கு கடைசிப் பேருந்து. 11.15க்கு தண்டையார்பேட்டை போய்விடும். அதற்குப் பிறகு குளித்து சாப்பிட்டுவிட்டு, இரண்டு மூன்று மணிநேரம் புத்தகங்கள் படிப்பேன்.

 

க்ரியாவை எந்தச் சூழ்நிலையில் தொடங்கினீர்கள்?

 

விளம்பர நிறுவனத்தில் வெற்றிகரமாக நல்ல சம்பளத்தில் இருந்தாலும் அதன் கலாச்சாரம் எனக்குப் பிடிக்கவில்லை. ஒரு புள்ளியில் அந்த வேலையை விட்டேன். 1972 ஆம் ஆண்டு மே மாதம் வேலையை விட்டேன். என்ன செய்வது என்று தெரியாது. எனது தோழி ஜெயலட்சுமியை 73-ல் சந்தித்தேன். அவர் நல்ல வாசகி. அவர் கொடுத்த உந்துதல் மற்றும் பணத்தில்தான் க்ரியாவைத் தொடங்கினேன். அவரும் நானும் தான் க்ரியாவின் பங்காளிகள். க்ரியாவின் பங்காளியாக இருந்தும் அவர் எனது எந்த முடிவுகளிலும் குறுக்கிட்டதேயில்லை. குறுக்கிடாதது மட்டுமல்ல லட்சக்கணக்கான பணம் வருவதற்கு வாய்ப்புள்ள பணிகளைக் கூட மறுப்பதற்கு எனக்கு சுதந்திரத்தை அளித்தவர் அவர்.

 

இலக்கியம் சார்ந்துதான் முதலில் க்ரியா நூல்களை வெளியிட்டது இல்லையா?

 

இலக்கியம் சார்ந்துதான் நான் பதிப்பகப் பணிக்கே வந்தேன். ஆனால் ஒரு ஆண்டிலேயே எனக்குத் தெரிந்துவிட்டது, பதிப்புத்துறை என்பது இலக்கியம் மட்டும் அல்ல, இலக்கியத்துக்கப்பால் உள்ள கருத்துலகங்களோடு தொடர்புடையது என்பதை சீக்கிரத்திலேயே புரிந்துகொண்டேன். அதற்காக நான் என்னை ஆயப்படுத்திக்கொள்ளத் தொடங்கினேன். எங்களது முதல் நூல் ந.முத்துசாமியின் நாடகமான ‘நாற்காலிக்காரர்’. அதிலேயே மொழி ரீதியான எடிட்டிங்கை எங்கள் அளவில் செய்துதான் வெளியிட்டோம். எஸ்.வி.ராஜதுரையிடம் பேசி எக்ஸிஸ்டென்சியலிசம் ஓர் அறிமுகம் நூலை எழுதச் சொன்னோம். முதல்முறையாக விஞ்ஞானப்பூர்வமாக ‘நெல் சாகுபடி’ என்ற நூலை தமிழில் நாங்கள் தான் விவசாயம் சார்ந்து கொண்டுவந்தோம். முத்துசாமி என்ற விவசாய அறிஞர்தான் அதன் ஆசிரியர். 85-ம் ஆண்டுவரை பதிப்பு சார்ந்தும், மொழி சார்ந்தும் பட்டறிவின் அடிப்படையில் தான் செயல்பட்டு வந்தோம். மொழிசார்ந்து பிரச்சினைகள் இருப்பது தெரிந்தது. பிரச்சினைகளை வகைப்படுத்துவதற்கோ, புரிந்துகொள்வதற்கோ மொழிசார்ந்த கோட்பாட்டு ரீதியான அறிவு என்னிடம் இல்லை. ஒவ்வொரு வெளியீடும் எங்களுக்கு அனுபவத்தை மேம்படுத்தின. அதுவரை ஒரு கையெழுத்துப் பிரதியை சரிசெய்யும் போது, வாசகரின் பார்வையில் மொழி தெளிவாக இருக்கிறதா, வாக்கியங்கள் சீராக இருக்கிறதா என்பதில் எனது நோக்கமாக இருந்தது. முழு கையெழுத்துப் பிரதியையும் படித்து வரிவரியாகப் பார்த்தபிறகே புத்தகமாகும்.  

 

க்ரியாவின் புத்தகங்கள் கலைப்படைப்புகளைப் போன்ற உணர்வைத் தருபவை. அதுசார்ந்த பின்னணியைச் சொல்லுங்கள்?

 

 தமிழில் ‘வாசகர் வட்டம்’ பதிப்பகம் வெளியிட்ட நூல்கள் தமிழ் பதிப்புத் துறைக்கே முன்மாதிரி என்று சொல்வேன். ஒவ்வொரு புத்தகத்திலும் அவர்கள் ஒரு தர அளவை உருவாக்கினார்கள். ‘நடந்தாய் வாழி காவேரி’, ‘போதையின் பாதையில்’ போன்ற புனைவல்லாத நூல்களின் அச்சும், தரமும் எங்களுக்கு பெரிய உத்வேகமாக இருந்தவை.  எனக்கு விளம்பரத் துறையில் இருந்த அனுபவம் மிக முக்கியமான காரணம். ஆங்கிலத்தில் வரும் ஓவியப் புத்தகங்களை நான் ஆர்வத்தோடு தொடர்ந்திருக்கிறேன். இந்த உந்துதல்கள் எல்லாம் புத்தகத்தை நன்றாக கொண்டுவர வேண்டும் என்ற தூண்டுதலைக் கொடுத்திருக்கலாம்.  காலால் மிதித்து அச்சடிக்கும் டிரெடில் மிஷின் தொடங்கி இன்றைய ஆப்செட் தொழில்நுட்பம் வரை எல்லா மாறுதல்களையும் நான் உடனிருந்து பார்த்திருக்கிறேன். அத்தனை பிரச்சினைகளிலும் இருந்திருக்கிறேன். கையில் கோர்க்கும்போது, ஒரு பாரம் அச்சடித்து முடித்தபின்னர், அந்தந்த எழுத்துருக்களுக்கு இருக்கும் மரவெட்டியில் தேர்ந்த கம்பாசிட்டர்கள் கையாலேயே தடவி எழுத்துருவைக் கண்டுபிடித்து அதற்குரிய பெட்டியில் போடுவார்கள். கம்பாசிட்டர்கள் தப்பாக ஒரு எழுத்துருவை மாற்றிப் போட்டுவிட்டால் தவறு வரும். மெய்ப்பு பார்க்காவிட்டால் அந்தத் தவறு கடைசிவரை தொடரும். அச்சுநேர்த்தியிலும், காகிதத்திலும் கவனம் செலுத்தியதால் அப்போது சக பதிப்பகங்கள் வெளியிட்ட புத்தகங்களை விட எங்கள் புத்தகங்கள் சற்று விலை கூடுதலாக இருந்தன. ஆனால் இப்போது அப்படி சொல்லமுடியாது. ஏனெனில் குறைந்தபட்ச தொழில்நுட்பம் என்பது எல்லாருக்கும் சமமானது. இப்போது எங்கள் புத்தகங்கள் விலை கூடுதல் என்று சொல்லமுடியாது.

 

‘டாக்டர் இல்லாத இடத்தில்’, க்ரியாவின் புத்தக வெளியீட்டு அனுபவத்தில் முக்கியமான நூல் இல்லையா?

 

மருத்துவத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதிகள் மற்றும் செயல்முறைகள் கேள்விக்குள்ளாக்கப்பட்ட காலத்தில் வெளிவந்த நூல் ‘டாக்டர் இல்லாத இடத்தில்’. மெக்சிகோவில் உள்ள உயிரியலாளரான டேவிட் வெர்னர் அந்த நாட்டிலுள்ள ஏழைமக்களுக்காக எழுதிய கையேடு அது. இந்தியப் பதிப்பொன்றும் வெளிவந்தது. அதை தமிழ்சூழலுக்கேற்ப மாற்றி நாங்கள் மொழிபெயர்த்து வெளியிட்டோம். 26 மாதங்கள்  குழுவாகப் பணியாற்றினோம். அதற்கென தனியாக லெட்டர்பிரஸ் யூனிட்டை அமைத்தோம். ‘டாக்டர் இல்லாத இடத்தில்’ நூலைப் பொறுத்தவரை படங்கள், அட்டவணைகள், வேறு வேறு எழுத்தளவுகள் ஒவ்வொரு பக்கத்துக்கும் தேவையாக இருந்தன. ஒரு பேஸ்ட்அப் கலைஞரை அதிக சம்பளத்திற்கு நியமித்து படங்களையும் எழுத்துக்களையும் வெட்டியொட்டி பக்கங்களை உருவாக்குவோம்.    

  

இந்தியா போன்ற ஏழை மூன்றாம் நாடுகளில் அதிக விலையில் புத்தகங்கள் விற்பதற்கான தேவை இருக்கிறதா?   

 

இது அபத்தமான கேள்வி. மூன்றாம் உலக நாட்டுக்கு இரண்டு லட்ச ரூபாய்க்குப் பட்டுப்புடவை வாங்குவது தேவையாய் இருக்கிறது. 38 ரூபாய்க்கு காபி தேவையாக உள்ளது. புஸ்தகம் என்று வந்தால் மட்டும் நமது நாடு ஏழை நாடு என்ற ஞாபகம் வருகிறது. இங்கே புத்தகம் வாங்கமுடியாத அளவு ஏழையாக இருக்கிறார் என்பது மிகவும் அரிதான சூழல். இங்கேயுள்ள பிரச்சினை என்னவெனில், நிறைந்த பொருளாதாரம் உள்ளவர்களும் புத்தகங்கள் வாங்குவதில்லை என்பதே. 2000-ல் சொற்கள் என்ற பிரெஞ்சு கவிதை மொழிபெயர்ப்பு நூலை வெளியிட்டு இலவசமாக கொடுத்தோம். மூன்றே மாதத்தில் தீர்ந்துபோனது. அதே புத்தகத்தை 110 ரூபாய்க்கு திரும்ப வெளியிட்டோம். ஆயிரம் பிரதிகளைக்கூட எங்களால் இன்னும் விற்க முடியவில்லை. புத்தகங்கள் மீதான விருப்பத்திற்கும் அதற்கான விலைக்கும் தொடர்பே இல்லை என்பதுதான் எனது அனுபவம். அவன் ஏழையாக இருந்தாலும் அது அவனுக்குப் பொருட்டேயில்லை.

 

க்ரியா அகராதி உருவாக்கும் எண்ணம் எப்படி ஏற்பட்டது?

 

விவசாயம், தத்துவம், மருத்துவம் என பலதுறை நூல்களை வெளியிட்ட அனுபவம் மொழியைப் பற்றிய கூருணர்வை அதிகமாக்கியது. எங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை நானும் நண்பர் கி.நாராயணனும் குறித்துவைத்துக் கொண்டோம். இந்தப் பிரச்சினைகளையெல்லாம் வைத்து இ.அண்ணாமலையைச் சந்தித்தபோதுதான் அவர் நமக்கு இப்போதைய தேவை தற்கால தமிழ் அகராதி என்று சொன்னார். அவர்தான் மொழியைப் பற்றிய முழு உணர்வை ஏற்படுத்தினார். மொழி என்பது எப்படி தொடர்ச்சியான ஓட்டம் என்பதையும்…நாம் வாழும் காலத்தின் மொழிக்கும் நமக்கு முன்பு இருந்த மொழிக்கும் இடையிலான வித்தியாசங்களையும் எடுத்துக்காட்டினார். வார்த்தைகளை எப்படி எழுதவேண்டும் என்பது தொடர்பான உணர்வையும் அவர்தான் உருவாக்கினார். ‘நெல்லில் இருந்து அரிசி’ என்று எழுதுவது மிகவும் சகஜமாகிவிட்டது. ‘நெல்லிலிருந்து அரிசி’ என்பதே சரி. ‘கொள்’ என்ற சொல் ஒரு வினையாகவும் இருக்கிறது,  ஒரு துணைவினையாகவும் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும்போதுதான் ‘வந்துகொண்டிருந்தேன்’ என்பதை எப்படி எழுதவேண்டும் என்று தெரியும். ஒரு சொல்லின் வகையை இலக்கணரீதியாகத் தெரிந்துகொண்டால்தான் அதைத் திறமையாகக் கையாள முடியும். அகராதி, மொழியைப் பற்றிய உணர்வைக் கூர்மையாக்குகிறது. அதன்மூலம் நாம் எழுதுவதைத் துல்லியமாகவும், குழப்பமில்லாமலும் எழுத முடியும்.

 

ஒரு சொல்லின் நிலை இலக்கண ரீதியாகத் தெரிந்தால்தான் அதைத் திறமையாகக் கையாள முடியும். அகராதி, மொழியைப் பற்றிய கூர்மையுணர்வை உருவாக்குகிறது. அதன்மூலம் நாம் எழுதுவதை துல்லியமாகவும், குழப்பமில்லாமலும் எழுதமுடியும். ஒரு சொல்லின் அமைப்பு, வாக்கியத்தில் இடம்பெற வேண்டிய முறை, சொல்லின் பொருள் இவற்றைத் தெரிந்துகொள்வதற்கு அகராதி பயன்படும். ஒரு சொல்லுக்கு எத்தனையோ பொருள்கள் உண்டு. அதைத் தெரிந்துகொள்ளும் போது அதன் வீச்சு நமக்குப் புலப்படுகிறது. முதலில் அகராதியைத் தொகுத்து முடித்தபோது, எங்கள் சொல்வங்கியில் 18 லட்சம் வார்த்தைகள் இருந்தன. இப்போது எங்கள் தொகுப்பு ஒரு கோடியை எட்டியுள்ளது. இப்படியாக அகராதி வேலை என்பது முப்பது ஆண்டுகளாக அன்றாட நடவடிக்கையானது.

 

தமிழ் அகராதி என்பது தமிழ் மென்பொருள்களுக்கும் உதவிகரமாக இருக்கும் இல்லையா?

 

ஆமாம். எடுத்துக்காட்டாக, இன்று புத்தகங்களுக்காக அச்சுக்கோக்கக் கணினியைத்தான் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. ஆனால் வரி முடிவில் ஒரு சொல்லுக்கான இடம் போதுமான அளவு இருக்காதபோது, அந்தச் சொல்லை எப்படிப் பிரிக்க வேண்டும் என்பது கணினிக்குத் தெரியாது. கையால் அச்சுக்கோக்கும் முறையில் அச்சுக்கோப்பவருக்குச் சொற்களைப் பிரிக்கும் முறை அவர் தொழில்முறை அறிவின் பகுதியாக இருந்தது. சொற்களைப் பிரிப்பதற்கான மென்பொருள் தமிழில் உருவாக்கப்படவில்லை. ஆங்கிலம் போன்ற மொழிகளில் இந்த வசதி உருவாக்கப்பட்டு ஒரு அகராதி வடிவத்தில் அச்சுக்கோக்கும் மென்பொருளின் ஒரு பகுதியாக இருக்கிறது. ஒரு சொல்லின் வடிவம், அது எந்த இலக்கண வகையைச் சேர்ந்தது, அந்தச் சொல்லை எப்படி எழுத வேண்டும் என்பது போன்ற தகவல்கள் இருந்தால்தான் தமிழுக்கான இந்தக் குறிப்பிட்ட மென்பொருளை உருவாக்க முடியும். எடுத்துக்காட்டாக, வரி முடிவில் ‘நண்பர்களால்’ என்ற சொல் வந்து, ஆனால் அந்த வரியில் ‘நண்ப’ என்ற எழுத்துகளுக்கு மட்டுமே இடம் இருந்தால், அந்த மூன்று எழுத்துகளையும் கணிப்பொறி அடுத்த வரிக்கு தள்ளி, அவற்றுக்கான இடத்தை அந்த வரியிலேயே நிரவிவிடும். இதனால் ஒவ்வொரு வரியிலும் இடைவெளி சீராக இருக்காது; பார்வைக்கும் அழகாக இருக்காது. அதைவிட முக்கியமான விஷயம், இந்தச் சீரற்ற இடைவெளிகளால் 100 பக்கங்களில் முடிய வேண்டிய பிரதி, 120 அல்லது 125 பக்கங்களாக நீண்டுவிடும். இது தேவையில்லாமல் தயாரிப்புச் செலவுகளை——காகிதம், மை, நேரம், உழைப்பு போன்றவற்றை——20% முதல் 25% கூட்டிவிடும். இதை ஒரு துறை முழுவதற்கும் பொருத்திப் பார்த்தால் எவ்வளவு வீண் செலவு ஏற்படுகிறது என்பது தெரியும். முறையாக உருவாக்கப்பட்ட அகராதிதான் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கும் மென்பொருளை உருவாக்க உதவ முடியும். இதையெல்லாம் பதிப்புத்துறையில் யாரும் கண்டுகொள்ளவோ எடுத்துச் சொல்லவோ இல்லை. ஆனால் இந்த நஷ்டம் அன்றாட வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தைப் பாதிக்கக் கூடியது.

 

புனைவுகளை எடிட்டிங் செயல்முறை எப்படி மேம்படுத்துகிறது?

 

புனைவில் முக்கியமான பிரச்சினை என்னவெனில், எழுதப்படும் விஷயம் சார்ந்து வாசகனை விட எழுத்தாளனுக்கு அதிகம் தெரிந்திருக்கும். வாசகனின் பார்வை என்னவென்று தெரிவதற்கான வாய்ப்பு அவருக்கு இல்லை. எடிட்டர் என்பவர் முதல் வாசகராகச் செயல்படுபவர். அத்தியாயங்களை ஒழுங்கமைப்பது, மறுஒழுங்கு செய்வது முக்கியமான பணி. கதையில் ஒரு இடம் மிகப் பிரமாதமாக வருவதற்கு வாய்ப்புள்ள இடமாக இருக்கலாம். ஆனால் அதை எழுத்தாளர் மிகவும் குறைவாக எழுதியிருப்பார். எடிட்டரின் யோசனையை ஏற்றுக்கொண்டால் எழுத்தாளர் அந்த இடத்தை விரிவுபடுத்திக் கொடுப்பார். விவரப்பிழை, மொழிப்பிழை என ஒரு பிரதி பலவகைகளில் எடிட்டரின் பரிசீலனைக்கு உள்ளாகிறது. ஒரு அத்தியாயத்தில் ஒன்றைச் சொல்லிவிட்டு அதற்கு முரண்பாடாக இன்னொரு இடம் பின்னால் வரலாம். பிரதியில் உள்ள காலக்குழப்பத்தை ஒரு எடிட்டரால் சரிசெய்யமுடியும். சுந்தர ராமசாமி எழுதிய ஜே.ஜே.சில குறிப்புகளில் காலம் சார்ந்து சில குழப்பங்கள் இருந்தன. அதை சி.மோகன் தேதியெல்லாம் போட்டு சரி செய்தார். எழுத்தாளர்கள் தாங்கள் எழுதும் செயல்பாட்டின் ஒருபகுதியாக எடிட்டர்களை ஏற்றுக்கொண்டாலொழிய எடிட்டர் ஒழுங்காகச் செயல்படமுடியாது. எடிட்டர் எப்போதுமே எழுத்தாளனின் இடத்தை எடுத்துக்கொள்ளவும் கூடாது. முடியவும் முடியாது. ஒரு எழுத்தாளருக்கு உதவிசெய்வதற்குத் தான் எடிட்டர் இருக்கிறார். இதில் ஈகோவுக்கு வேலையே இல்லை. மிகத் தெளிவாக எழுதும் எழுத்தாளர்கள் என்பவர்கள் மிகவும் சொற்பம். ந.முத்துசாமி, பூமணி போன்றவர்களை என் அனுபவத்தில் சொல்வேன். ஒரு மூலநூலோ, மொழிபெயர்ப்போ எடிட்டர் என்பவர் மிகவும் அத்தியாவசியமானவர். அவர் பிரதி முழுவதும் பரவியிருப்பார். ஆனால் வெளியே தெரியமாட்டார். தெரியவும் கூடாது.  

 

க்ரியாவின் மொழிபெயர்ப்புகளை அடுத்தடுத்த பதிப்பிலும் தொடர்ந்து மேம்படுத்தியபடி இருக்கிறீர்கள்…அது எத்தனை தூரம் அத்தியாவசியமாக உள்ளது?

 

மொழிபெயர்ப்பைப் பொருத்தவரை மூலத்திற்கு முடிந்தவரைக்கும் நெருக்கமாக இருக்கவேண்டும்-வாக்கிய அமைப்பு உட்பட. உள்ளடக்கத்தை மட்டும் மொழிமாற்றம் செய்வதல்ல மொழிபெயர்ப்பு. மொழி அமைப்புக்கும் உதவி செய்யவேண்டும். தமிழில் அதுவரை இல்லாமல் ஒரு வாக்கிய அமைப்பு இருக்கலாம். ஒரு மொழிபெயர்ப்பு வழியாக அப்படியான வாக்கிய அமைப்பு சாத்தியம் என்று காண்பிக்க முடிந்தால், தமிழுக்கு ஒரு புதிய சாத்தியத்தைத் திறந்துவிடுகிறோம். காஃப்கா, ஆல்பெர் காம்யூ போன்றவர்களின் படைப்புகளை மொழிபெயர்த்ததை உதாரணமாகச் சொல்லலாம். மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரை நூறு சதவீத முழுமை என்று சொல்லவே முடியாது. தொடர்ந்து அடுத்தடுத்த பதிப்புகளில் சரிசெய்துதான் கொண்டுவருகிறோம். தமிழில் பதிப்பு என்பதற்கும் மறுஅச்சு என்பதற்கும் வித்தியாசம் இல்லாத சூழல் இருக்கிறது. மறுபதிப்பு என்பது முதல் பதிப்பை விட ஏதோ ஒருவகையில் வித்தியாசமாக இருக்கவேண்டும். 

 

ஒரு மொழிபெயர்ப்பு தமிழுக்கு வரவேண்டும் என்பதை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்?

 

 என்னுடைய படிப்பு ஒரு அளவுகோல். பல நேரங்களில் நண்பர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பரிந்துரை செய்வார்கள். அந்நியன், குட்டி இளவரசன், விசாரணை எல்லாம் நாங்கள் ஏற்கனவே வாசித்து தமிழுக்கு வரவேண்டும் என்று முடிவுசெய்தது.    

 

க்ரியாவின் ஆரம்ப ஆண்டுகளில் நீங்கள் வெளியிட்ட தமிழ் படைப்புகள் சூழலில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியவை. 90களுக்குப் பின்னர் க்ரியாவிலிருந்து முக்கியமான தமிழ் படைப்புகள் அதிகம் வரவில்லை என்ற விமர்சனம் உள்ளதே?

 

நான் இதுவரை சொல்லாத விஷயத்தை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். நான் பல எழுத்தாளர்களிடம் புத்தகம் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறேன். அவர்கள் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. அவர்கள் கொடுக்கவேயில்லை. அவர்களுக்குத் தயக்கம் இருக்கிறது. நான் செயல்படும் விதத்தில் ஏதோ நம்பிக்கையின்மையும் மனத்தடையும் அவர்களுக்கு உள்ளது. புகழ் என்ற இளம் எழுத்தாளரின் சிறுகதைகளை நான் தொடர்ந்து படித்துவந்தேன். அவர் ஒரு நாள் திடீரென்று என்னைத் தேடிவந்து புத்தகம் போடமுடியுமா என்று கேட்டார். நான் கொடுங்கள் என்று சொன்னேன். நான் செயல்படும் முறைக்கு ஈடுகொடுத்தால்தான் ஒரு எழுத்தாளரின் புத்தகத்தை நான் போடமுடியும். ஒருவர் கொடுக்கும் படைப்பை அப்படியே போடவேண்டும் என்று சொன்னால் என்னால் முடியாது. இன்னொரு விஷயம், ஒரு பதிப்பாளர் எல்லா புத்தகங்களையும் வெளியிட முடியாது. உதாரணத்திற்கு ஜெயமோகனின் படைப்புகளைச் சொல்லலாம். அவரது கதைகளில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. ஆனால் என்னுடன் அவர் உட்கார விரும்புவாரா? தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரை அவருக்கு முக்கியமான இடம் உண்டு என்று கருதுகிறேன்.  

 

க்ரியாவைப் பொருத்தவரை அதிகம் தெரியவராத எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட வேண்டுமென்பதுதான் எங்கள் பிரதான நோக்கமாக இருந்தது.

 

க்ரியாவின் வளர்ச்சி என்பது  அதிகமான புத்தகங்களைப் போட்டுக் கொண்டே இருப்பது மட்டுமல்ல. ஒவ்வொரு புத்தகத்திலும் மொழி பற்றியோ, தொழில்நுட்பம் பற்றியோ தொடர்ந்து கற்றுகொண்டே இருக்கிறோம். ஒவ்வொரு புத்தகமும் எனக்கு அறிவுச் செயல்முறைதான். 1989க்குப் பிறகு நாங்கள் கொண்டுவந்த புத்தகங்களின் தரம் கூடியிருப்பதாகக் கருதுகிறேன். ஆனால் நூறு சதவீதம் சரியான புத்தகம் என்று ஒன்றையும் சொல்லமுடியாது.

 

92-லிருந்து 2000 வரைக்கும் க்ரியா பதிப்பகத்துக்கு என்னால் முழுமையான ஈடுபாட்டைக் கொடுக்கவில்லை. மொழி அறக்கட்டளை மற்றும் ரோஜா முத்தையா நூலகப் பணிகளுக்காக நிறைய நேரத்தை செலவிட வேண்டியதாகிவிட்டதும் ஒரு காரணம். நான், சங்கரலிங்கம், ஜேம்ஸ் நை எல்லாரும் சேர்ந்துதான் ரோஜா முத்தையா நூலகத்தை உருவாக்கினோம். இப்போது சரித்திரம் முழுமையாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இருக்கட்டும். 2000-ல் தான் க்ரியா பதிப்பக வேலைகள் மறுபடியும் சூடுபிடிக்கத் தொடங்கியது. மொழி அறக்கட்டளை சார்பில் வெளியான மரபுத்தொடர் அகராதி, மொழி நடைக் கையேடு போன்ற புத்தகங்களை வெளியிட்டோம். ஆனால் அந்த வேலைகள் வெளித்தெரியாதவை. எல்லாவற்றையும் விட மிக முக்கியமான பிரச்சினை என்னவெனில் நிதி வசதிதான். நாற்பது வருடங்கள் ஆகியும் பணவிஷயத்தில் எங்கள் நிலை நித்தியகண்டம், பூரண ஆயுசுதான்.

 

ஆனால் எந்தப் பதிப்பாளர்களை விடவும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு முன்னே செல்லும் பதிப்பகம் க்ரியாதான். க்ரியா அகராதி, ப்ரெய்லி பதிப்பு வந்துள்ளது. குட்டி இளவரசன் ப்ரெய்லி பதிப்பு வந்துள்ளது. இணையத்தில் வலுவாக எங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறோம். க்ரியா அகராதிக்கு app-ஐ உருவாக்கியிருக்கிறோம்.

 

அரசு சார்ந்த ஆதரவு க்ரியா அகராதி போன்ற பணிகளுக்கு எப்படி இருக்கிறது?

 

மத்திய அரசில் ஒரு திட்டம் இருக்கிறது. ஒரு தனிநபர் புத்தகம் எழுதி அவரே வெளியிட விரும்பினால் அந்தப் புத்தகச் செலவில் 80 சதவீதம் தொகையைத் தரும் திட்டத்தை வைத்திருக்கிறது. அந்தத் திட்டத்தின் கீழ் நிறைய அரிய புத்தகங்களும் வந்துள்ளன. அந்த திட்டத்தின் அடிப்படையில்தான் க்ரியா அகராதிக்கு முதலில் பணம் கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால் கையெழுத்துப் பிரதி தயாராக இருந்தால் தான் பணம் கொடுப்பார்கள். அகராதி போன்று கையெழுத்துப் பிரதியை உருவாக்குவதற்குப் பணம் கிடையாது என்று சொல்லிவிட்டார்கள். நான் அவர்களுக்கு கடிதம் எழுதினேன். ஒரு தனிமனிதர் எப்படி அகராதி வேலையைச் செய்யமுடியும்? பல்கலைக்கழகம் செய்யவேண்டிய பணி அல்லவா என்றெல்லாம் கேட்டார்கள். நான் அவர்கள் செய்யவில்லையே என்று சொன்னேன். உ.வே.சா தனிநபரா, பல்கலைக்கழகமா என்று பதில் அனுப்பினேன்.

அரசாங்கத்தில் நல்ல திட்டங்கள் இருக்கின்றன. அதிகாரிகள் நம்மை நம்பமாட்டார்கள். க்ரியாவின் அகராதியைப் பொருத்தவரை ஒரு அதிகாரி விருப்புறுதியுடன் முடிவெடுத்தார். அகராதியின் முதல் பதிப்புக்கு அரசு பணம் கொடுத்தார்கள்.

 

இப்போது நீங்கள் விரும்பி வெளியிட விரும்பும் எழுத்தாளர் யார்?

 

க்ரியாவில் நான் வெளியிட வேண்டும் என்று ஆசைப்படுகிற ஒரே எழுத்தாளர் ஷோபாசக்திதான். அவர் பெரிய இலக்கிய ஆற்றல் என்று நினைக்கிறேன்.

 

நாற்பது வருடங்களை முழுக்க முழுக்க மொழி சார்ந்தும், பதிப்பு சார்ந்தும் கழித்திருக்கிறீர்கள். அதுகுறித்து தற்போது எப்படி உணர்கிறீர்கள்?

 

மீண்டும் வாழ்வதற்கு வாய்ப்பு கிடைத்தால் இதே வாழ்க்கையை வாழவே விரும்புவேன். அதுபற்றி வருத்தமே கிடையாது. மனமகிழ்ச்சிதான் எனக்கு இருக்கிறது. விழுந்து,  எழுந்து கற்றுக்கொண்டது தான் அதிகம். க்ரியாவின் வளர்ச்சியில் முக்கியமான இரண்டு பேரைச் சொல்ல வேண்டும். ஒன்று ஜெயலட்சுமி, இன்னொருவர் இ.அண்ணாமலை.

 

நன்றி : தமிழ் இந்து நாளிதழ்

______________________________________________________________________________________________________________

சுயரூபம் (சிறுகதை) – பழம்பெரும் எழுத்தாளர் கு.அழகிரிசாமி

பரவும் தீ… பதறும் மோடி! : செம்பரிதி

Recent Posts