கூடங்குளம் அணு உலையில் சைபர் அட்டாக்? சந்தேகத்திற்கு மேல் சந்தேகம் சேர்ந்திருக்கிறது; வேல்முருகன்…

கூடங்குளம் அணு உலையில் நடந்தது என்ன என்பது குறித்து மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வேல்முருகன் இன்று (அக்.31) வெளியிட்ட அறிக்கையில், “கூடங்குளம் அணு உலையில் சைபர் அட்டாக் நடந்துள்ளதாக செய்தி வெளியாகியது.

இது தொடர்பாக ஒருவர், “இந்தத் தகவலை மூன்றாம் நபர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார். நான் இதை தேசிய சைபர் செக்யூரிட்டி கோஆர்டினேட்டரை தொடர்பு கொண்டு தெரிவித்தேன்.

அதன் பிறகு அந்த நபரும் என்சிஎஸ்சியிடம் தெரிவித்தார்” எனத் தன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்த ட்விட்டர் பதிவைப் பார்த்த மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் சசிதரூர், “நமது அணுசக்தித் துறை மீது சைபர் அட்டாக் நடத்துவது என்பது நாட்டின் பாதுகாப்புக்கு விடப்பட்ட எச்சரிக்கையாகும். இதுகுறித்து அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” என ட்வீட் செய்தார்.

சசிதரூரின் இந்த ட்வீட் நாடு முழுவதும் பேசுபொருளானது. ஆனால் கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகள் யாரும் இதற்குப் பதிலளிக்கவில்லை.

மாறாக, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் சார்பில் இன்றுதான் ஒரு விளக்கம் வெளியிடப்பட்டது.

“கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மீது இணையத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் தவறான தகவல்கள் பரவி வருகின்றன.

கூடங்குளம் அணு மின்நிலையம் மற்றும் இந்திய அணுசக்தித் திட்டத்துக்கான கண்காணிப்பு மையங்கள் அனைத்தும் தனியாக இணைக்கப்பட்டுள்ளதே தவிர இணையத்தின் மூலமாக இணைக்கப்படவில்லை.

அதனால் எந்த வகையிலும் இணையத் தாக்குதல் நடக்க வாய்ப்பே இல்லை. முதல் அணு உலையில் 1,000 மெகாவாட் மின்சாரமும் இரண்டாவது அணு உலையில் 600 மெகாவாட் மின்சாரமும் எந்தத் தடையும் இல்லாமல் உற்பத்தியாகிறது” என்பதுதான் அந்த விளக்கம்.

ஆனால் நேற்று அணுசக்தித் துறையின் இடைநிலை அதிகாரி ஒருவர், ஓர் அணுமின் நிலையத்தில் கம்ப்யூட்டர் வைரஸ் பரவியிருக்கிறது என்று அறிக்கை வெளியிட்டார்.

ஓர் அணுமின் நிலையம் என்றால் எது? இப்படி பெயரை மறைப்பதன் ரகசியம்-மர்மம் என்ன?

நமது சந்தேகம் இது மட்டுமே அல்ல. “கூடங்குளம் முதல் அணு உலையில் 1,000 மெகாவாட் மின்சாரமும் இரண்டாவது அணு உலையில் 600 மெகாவாட் மின்சாரமும் எந்தத் தடையும் இல்லாமல் உற்பத்தியாகிறது” என்று சொல்லப்பட்டதாவது உண்மையா? அது உண்மை என்றால் அந்த மின்சாரம் எங்கு செல்கிறது?

அணுக்கழிவுகளை கூடங்குளம் அணு உலை வளாகத்திற்குள்ளேயே வைக்கும் மிக மிக ஆபத்தான முடிவையும் மத்திய அரசு எடுத்தது. இதனைக் கைவிட வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கில் 6.5.2013 அன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் 15 கட்டளைகளைப் பிறப்பித்தது.

அவற்றில் “அணுக்கழிவுகளை அணு உலைக்கு வெளியேதான் வைக்க வேண்டும்; அதற்கான வசதியை அதாவது அணுக்கழிவு மையத்தை 5 ஆண்டுகளில் ஏற்படுத்திட வேண்டும்.

இந்த நிபந்தனை நிறைவேற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மத்திய-மாநில அரசுகளுக்கு முழுமையாக இருக்கிறது” என்ற கட்டளை மிக முக்கியமானது.

ஆனால் இந்தக் காலக்கெடு 2018 மார்ச் மாதமே முடிவடைந்த நிலையில், தேசிய அணுமின் கழகம் மீண்டும் மீண்டும் கால அவகாசம் கேட்டு காலங்கடத்திக் கொண்டே போனது. உச்ச நீதிமன்றமோ “2022 ஆம் ஆண்டுக்குள் அணுக்கழிவு மையத்தைக் கட்டி முடித்திட வேண்டும்” என்று இறுதிக் கெடு விதித்தது.

ஆனால், உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கெடுவைப் பொருட்படுத்தவில்லை. கடந்த ஆண்டு ஜூலை 10-ம் தேதியன்று கூடங்குளம் அருகேயுள்ள ராதாபுரத்தில் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறும் என அறிவித்தது தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம். எதற்கு? கூடங்குளம் அணு உலை வளாகத்திற்குள்ளாகவே அணுக்கழிவு மையத்தைக் கட்டுவதற்கு!

இதிலிருந்து என்ன தெரிகிறது? வேறு என்ன, ஆர்எஸ்எஸ்-பாஜக அரசுக்கு அதிமுக அரசும் உடந்தை என்பதுதான். எனவே தமிழக மக்களின் உயிர்-உடமை-வாழ்வாதாரம் எதைப் பற்றியும் கிஞ்சிற்றும் கவலை இல்லை இரு அரசுகளுக்கும்.

ஏற்கெனவே அணுசக்தி எதிர்ப்பு இயக்கத்தினர் இறந்து பிறந்த குழந்தைள் என்றே கூடங்குளத்தின் இரு அணு உலைகளையும் பற்றிக் கூறினர்.

காரணம், அந்த உலைகளின் கட்டுமானக் கோளாறுகள், இயக்கக் குழப்பங்கள் மற்றும் அவற்றின் மின் உற்பத்திக் குளறுபடிகள்! இப்போது சந்தேகத்திற்கு மேல் சந்தேகம் எண்ணும்படியாக சைபர் அட்டாக்கும் வந்து சேர்ந்திருக்கிறது.

எனவேதான் கேட்கிறோம்: கூடங்குளம் அணு உலையில் நடந்தது என்ன, நடப்பது என்ன? தமிழக மக்களின் – இந்திய மக்களின் சந்தேகக் கேள்விக்கு தக்க விளக்கம் அளிக்குமா மத்திய, மாநில அரசுகள்?,” என வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.