___________________________________________________________________________________________________________
கடமையில் ஈடுபட்டிருக்கிறபோதே இயற்கையாக மரணமடைவது சிலரது வாழ்க்கையில்தான் நிகழ்கிறது. பதவியில் இருந்தபோது என்றில்லாமல், மாணவர்களிடையே அறிவியல் சிந்தனைகளைப் பேசுவது என்பதை ஒரு கடமையாகச் செய்துவந்த அப்துல் கலாம் அவர்கள் அந்தப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவரது வாழ்வு முடிந்திருக்கிறது.
அரசுப் பள்ளி இயக்கம், தமிழ் வழி கல்வி இவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்கான ஒரு அடையாளமாக அப்தல் கலாம் இருந்தார்.
குடியரசுத்தலைவர் தேர்தலில், அரசியலற்ற ஒருவரை பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக நிறுத்தியதன் உள்நோக்க அரசியல் குறித்தும் அதை அவர் ஏற்றுக்கொண்டது குறித்தும் விமர்சனங்கள் உண்டு. ஆயினும் பொறுப்பேற்ற பிறகு அனைவருக்கும் இணக்கமானவராக செயல்பட்டார்.
பதவியேற்புக்கு முதல் நாள் அவரிடம் வந்த ஆளுங்கட்சி தலைவர்களும் அதிகாரிகளும் ஜாதகப்படி நல்ல நேரம் எது என்பதைச் சொல்லி அந்த நேரத்தில் நிகழ்ச்சியை வைத்துக்கொள்ளலாம் என்றார்கள். அதற்கு அவர், “நட்சத்திரங்களும் கோள்களும் தங்களது சுற்று வட்டப்பாதையில் நேராக வருவது, குறிப்பிட்ட நிலைக்கு வருவது என்பதெல்லாம் இயற்கையான நிகழ்வுகள் என்பது எனக்குத் தெரியும். அதற்கும் நல்ல நேரம் என்பதற்கும் சம்பந்தமில்லை. எல்லோருக்கும் வசதியான நேரத்தில் வைத்துககொண்டால் போதும்,” என்று கூறியதாக ஒரு செய்தி வந்தது.
அவரது இந்த அறிவியல் கண்ணோட்டம் சமுதாயத்தில் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு பரப்பப்பட்டிருக்க வேண்டும். அதை விடுத்து, எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது என்ற தத்துவ போதனையை மேற்கோள் காட்டினார் என்பதுதான் பரவலாக்கப்பட்டது…
(இமயம் தொலைக்காட்சியின் நெற்றிக்கண் நிகழ்ச்சியில் கலாம் மறைவுச் செய்தி குறித்து நான் கூறியதன் அடிப்படையில்)
– தோழர் குமரேசனின் முகநூல் பதிவில் இருந்து