“குன்றக்குடி ஆதீனப்புலவர் , மரு. பரமகுரு( வயது 89 ) இன்று காலமானார்..

“குன்றக்குடி ஆதீனப்புலவர் , மரு. பரமகுரு அவர்கள் இன்று 27 .12 .23 காலமானார்கள்.
குன்றக்குடி ஆதீனம் 45 ஆவது குருமகா சன்னிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் நிழலாக இலக்கிய உலகத்தால் அறியப்பட்டவர்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் நடுவராக பொறுப்பேற்று நடத்தும் பட்டிமன்றங்களில் அனைத்திலும் அவர்களின் இருக்கைக்கு பின்னே அமர்ந்து பட்டிமன்றம் தொடர்பான பேச்சுக் குறிப்புகளை உடனுக்குடன் எடுத்து தரும் தமிழறிஞராக விளங்கியவர்.

பேராசிரியர் பத்மஸ்ரீ டாக்டர் சாலமன் பாப்பையா அவர்களின் சமகாலத்து தமிழறிஞர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள், அனைவரும் அறிந்த தமிழறிஞர் ..
குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனப் புலவரும், காப்பியக் கவிஞரும், “மக்கள் சிந்தனை” − இதழாசிரியருமாகிய மரு.பரமகுரு அவர்கள் (89)இன்று (27.12.2023) புதன் கிழமை, காலை குன்றக்குடியில் காலமானார். குன்றக்குடி குருமகாசந்நிதானங்கள் தவத்திரு குன்றக்குடி அடிகளார், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோரின் இலக்கியத்துறை − உதவியாளராக, 57 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றியவர். மனச்சுவடுகள், பாடுகிறேன் பரமகுரு, தெய்வத் தமிழ்மாலை ஆகிய கவிதைத் தொகுதிகளையும், தேவவிரதன் பீஷ்மர் காப்பியத்தையும் எழுதி வெளியிட்டவர்.

குன்றக்குடி ஆதீன வரலாறு, பறம்புமலை திருக்கொடுங்குன்ற வரலாறு, திருவண்ணாமலை ஆதிகுருமுதல்வர் வரலாறு ஆகிய நூல்களின் ஆசிரியர். அடிகளார் ஓர் உறவுப்பாலம் நூலின் பதிப்பாசிரியர்களுள் ஒருவர். தெய்வத் தமிழ், ஆளுமைச் சிந்தனைகள் ஆகிய கட்டுரை நூல்களை எழுதியவர். சாகித்திய அகாதெமிக்காக, “தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூல் திரட்டு” நூலை உருவாக்கியவர். பக்திக் கவிஞர் பரமஹம்ஸதாசரின் நூல்களைத் தொகுத்துப் பதிப்பித்தவர். திருமடத்தின் “மக்கள் சிந்தனை” இதழின் ஆசிரியர். தவத்திரு அடிகள்பெருமானின் அனைத்து ஆக்கங்களும் அச்சாக்கம் காணப் பணிபுரிந்தவர். தவத்திரு குன்றக்குடி அடிகளார் விருது, பேரூராதீனத்து, “நிமிட கவி” விருது, ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸின், “தமிழ்த்தாத்தா உ.வே.சா. விருது”, காப்பியக் கவிஞர், தமிழ்மாமணி விருதுகள், பட்டங்கள் பெற்றவர்.
1936 இல் சிவகங்கை மாவட்டம் சேது ரகுநாத பட்டணத்தில் பிறந்த இவர் காரைக்குடி நெசவாளர் சங்கத்தில் கணக்கராகப் பணிபுரிந்த போது பொதுவுடமை இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான தோழர் ஜீவா அவர்களுடன் நெருக்கமாக பழகிய இலக்கியவாதி…

ஆன்மீகத்திலும் சரி, இலக்கியங்களிலும் சரி, எந்த சந்தேகங்களுக்கும் உடனுக்குடன் சரியான விளக்கத்தைத் தரும் தமிழ் அகராதி…

பட்டிமன்றங்கள் நடந்து கொண்டிருக்கும்போதே பேச்சாளர் குறிப்பிடும் சங்க இலக்கியப் பாடல்களில் முதல் வரியை குருமகா சன்னிதானம் அவர்கள் ஒரு வெள்ளைத் தாளில் எழுதி அதை கீழே கொடுத்தால் பரமகுரு ஐயா அவர்கள் முழுப் பாடலையும் சரியாக எழுதி, அந்த பேச்சாளர் பேசி முடிப்பதற்குள் குரு மகாசன்னிதானம் பார்வைக்கு அனுப்பி விடுவார்கள். அந்த அளவிற்கு அவர் சங்க இலக்கியங்களில் ஆழங்கால் பட்டவர்.

பல முனைவர் பட்டங்களை பெறத் தகுதியுடைய அவருடைய தமிழறிவு ஆச்சரியமான ஒன்றாகும். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக்கல்வி பெற்ற அவரால் தமிழின் மீது இருந்த தீரா காதல்தான் அவரை தமிழின் உச்சத்தில் நிறுத்தியது..

இன்றும் ஒரு கட்டுரையோ ஒரு கடிதமோ அவரால் எழுதப்பட்டு அல்லது பிழை திருத்தப்பட்டு வருமேயானால் அதில் ஒரு பிழை கூட காண முடியாது…

கணிப்பொறியும் , தட்டச்சும், இல்லாத காலத்தில் தவத்தில் குன்றக்குடி அடிகளார் அவர்களின் 43 புத்தகங்கள் வெளிவர இவரின் கையெழுத்து பிரதிகளே துணையாக நின்றன…

88 வயதை நிறைவு செய்து இருக்கிறார் பரமகுரு ஐயா..
.
காசிலிங்கம், சுப்பராமன், கற்பகவல்லி, அபிராமி, சண்முகசுந்தரம் என்று ஐந்து பிள்ளைகள் இவருக்கு உண்டு…
குன்றக்குடி ஆதீன நிர்வாகத்தில் உள்ள குன்றக்குடி மேல்நிலைப் பள்ளியில் கற்பகவல்லி முதுகலை தமிழாசிரியராகவும், பிரான்மலை வள்ளல் பாரி மேல்நிலைப் பள்ளியில் முதுகலை கணக்காசிரியராக சண்முகசுந்தரமும் பணியாற்றுகிறார்கள்.
அன்னாருக்கு, ப.காசிலிங்கம், ப.சுப்பாராமன், ப.சண்முகசுந்தரம், ப.கற்பகவல்லி, ப.அபிராமி ஆகிய மக்களும், உள்ளனர்,துணைவியார் திருமதி.ப.காமாட்சி அம்மாள்.
அன்னாரின் உடல்,
நாளை (28.12.2023 வியாழன்) காலை 11 மணியளவில், குன்றக்குடியில், திருமடத்து மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. தொடர்புக்கு − ப. சண்முகசுந்தரம் (மகன்) 9626363808
செய்தி & படங்கள்
சிங்தேவ்

தந்தை பெரியார் அவர்களின் 50-வது நினைவு தினம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை..

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவால் காலமானார்..

Recent Posts