திருக்கயிலாய பரம்பரை குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் பிரான்மலை வகை ஐந்துகோயில் தேவஸ்தானம் திருக்கோயில்களில் ஒன்றான சிவகங்கை மாவட்டம்,திருப்பத்துார் வட்டம் சிராவயல் புதுாரில் அமைந்துள்ள அருள்தரு தேனாட்சியம்மன் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா சுபகிருது வருடம் ஆவணி மாதம்-23-ஆம் தேதி(08.09.2022) வெகு விமர்சையாக நடைபெற்றது.
சிராவயல்புதுாரில் அமைந்துள்ள அருள்தரு தேனாட்சியம்மன் திருக்கோயில் சிறப்புகள் நிறைந்த திருத்தலமாகும்.இக்கோயில் அன்னை பராசக்தி “தேனாட்சி” என்ற திருநாமத்துடன் உலகின் கண்ணுள்ள தீமைகளை அழித்து நன்மைகளை வளர்த்துக் காத்து வாழ்விக்கும் திருக்கோலத்துடன் எழுந்தருளி காட்சியளிக்கிறாள்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயில் 2003-ஆம் ஆண்டு திருப்பணி செய்யப்பட்டு 10.03.2003 ஆம் நாள் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது.
தற்போது மீண்டும் திருவருள் கூட்டுவித்த வண்ணம் மேலைச்சிவபுரி, தேனிப்பட்டி, கீழச்சிவல்பட்டி, ஒ.சிறுவயல், நாச்சியார்புரம் ஆகிய ஊர் வயிரவன் கோயில் நகரத்தார்களாலும், கோட்டையூர்,அரிமழம்,பள்ளத்துார்,கானாடுகாத்தான்,பலவான்குடி ஆகிய ஊர் நேமம் கோயில் நகரத்தார்களாலும் அவர்களது பேருதவியுடனும் மேலைச்சிவபுரி திரு.கரு.தே.தே. நாகப்ப செட்டியார் குடும்பத்தினர் பொறுப்பில் இத்திருக்கோயில் முழுத்திருப்பணியும் சீரிய முறையில் நிறைவெய்தி திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது.
இத்திருக்கோயிலின் பரம்பரை அறங்காவலர் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் குருமகாசந்நிதானம் திருவருள்திரு தெய்வசிகாமணி பொன்னம்பல தேசிக பரமச்சாரிய சுவாமிகளின் தலைமையில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது. திருக்குட நன்னீராட்டுவிழாவில் மாண்புமிகு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.ஆர.பெரியகருப்பன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இத்திருக்கோயிலைச் சேர்ந்த கண்டுகொண்ட மாணிக்க நாட்டார்,ஏழூர்பத்து நாட்டார் மற்றும் கிராம பொதுமக்கள் ஒத்துழைப்போடு தருக்குட நன்னீராட்டுப் பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான ஆன்மீக பக்த கோடிகள்,பொதுமக்கள் கண்டு களித்து அம்மன் அருள்பெற்றனர்.
சர்வசாதகம் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் வேதசிவகாம வித்துவான் சிவத்திரு சி.உமாபதி சிவாச்சாரியார் பிரான்மலை.
திருக்கோயில் ஸ்தானீகம் சிவாகமசீரோன்மணி சிவத்திரு ஆர். காளீசுவரக் குருக்கள் தேனாட்சியம்மன் திருக்கோயில்,திருத்தல பூசை ஸ்தானீகர் உள்ளிட்டோர் வேள்வி பூசைகளை சிறப்பாக நடத்தினர்.
விழாவில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு பி.கே. சேகர் பாபு அவர்களுக்கு “செயல்பாபு” என்ற பட்டத்தையும் , ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.ஆர.பெரியகருப்பன் அவர்களுக்கு “அமைதியின் நாயகன்” என்ற பட்டத்தையும் அவர்களின் சிறப்பான சேவையைப்பாராட்டி குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் குருமகாசந்நிதானம் திருவருள்திரு பொன்னம்பல தேசிக பரமாச்சாரிய அடிகளார் வழங்கி கொளரவித்தார்கள்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்