முக்கிய செய்திகள்

குன்றத்தூர் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன் புதுச்சேரியில் கைது..

சென்னை குன்றத்தூரில், கடந்த 10-ம் தேதி நடந்துசென்ற பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாநகரில் சமீபகாலமாக, செல்போன் பறிப்பு மற்றும் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகமாக நடந்துவருகின்றன. இவற்றைத் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறிவருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 10-ம் தேதி, சென்னை குன்றத்தூர் ராகவேந்திரா நகரைச் சேர்ந்த ஜெயஸ்ரீ, தனது கணவர் அசோக் குமாருடன் கடைக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த இளைஞர் ஜெயஸ்ரீயின் கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு ஓடிவிட்டான்.

இதில், ஜெயஸ்ரீ கீழே விழுந்துவிட கொள்ளையனைப் பிடிக்க அசோக் குமார் முயன்று முடியாமல்போகவே, கொள்ளையன் தப்பித்துவிட்டான். இந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாக, அதை ஆதாரமாக வைத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவந்தனர்.

இந்த நிலையில், ஜெயஸ்ரீயிடம் செயின் பறித்த வழக்கில், சிவா என்ற 19 வயது இளைஞன் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டுள்ளான். அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இருப்பினும் சிவாவின் கூட்டாளி சாலமன் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.