குரங்கணி காட்டுத் தீயில் 9 பேர் உயிரிழப்பு …

கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் சென்னை பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள், சுற்றுலாப்பயணிகள், குழந்தைகள் என 36 பேர் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் பற்றி எரியும் பயங்கர காட்டுத்தீயில் சிக்கி கொண்டனர். இத்தீயில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், இந்த தீ விபத்தில் சென்னையை சேர்ந்த 6 பேர், ஈரோட்டை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அவர்களின் சடலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும் பேசிய அவர் மீட்கப்பட்டுள்ள 27 பேரில் 10 பேருக்கு எந்த காயமும் இல்லை.

திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயால் மலையேற சென்றவர்கள் சிக்கி கொண்டதாக கூறினார். காட்டுத் தீயை அணைக்க போதிய வசதிகள் தற்போது இல்லை என ஒப்புக் கொண்ட ஆட்சியர், வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

குரங்கணியில் இருந்த மீட்கப்பட்வர்களில் 10 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மீட்பு பணிகளில் தற்போது இரண்ட ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், மேலும் ஒரு ஹெலிகாப்டர் வர உள்ளதாக ஆட்சியர் பல்லவி குறிப்பிட்டார்.

வருவாய் நிர்வாக ஆணையர் பேட்டி;

சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் நிர்வாக ஆணையர் சத்திய கோபால் தீ விபத்தில் சென்னையை சேர்ந்த அகிலா, பிரேமலதா, புனிதா, சுபா, அருண், விபின் உட்பட 6 பேரும், ஈரோட்டை சேர்ந்த விஜயா, விவேக், தமிழ்ச்செல்வி என 3 பேரும் இதுவரை மொத்தம் 9 பேர் பலியாகியுள்ளதாக கூறினார்.

இதுவரை மீட்கப்பட்ட 27 பேரில், 10 பேர் நலமாக உள்ளதாகவும், அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  தீ விபத்தில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டு விட்டதாகவும், உயிரிழந்தவர்களின் சடலங்களை மலையில் இருந்து கொண்டு வரும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.