தமிழகத்தில் இருந்து படகில் சென்ற அகதிகள் உட்பட 14 பேரை யாழ்ப்பாணம் அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இலங்கையில் 1983-ம் ஆண்டு உள்நாட்டுப் போர் தொடங்கியபோது தமிழ் மக்கள் அகதிகளாக புலம்பெயரத் தொடங்கினர்.
தமிழகத்துக்கு 1983-ம் ஆண்டு முதல் 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 அகதிகள் வந்தனர். இவர்களில் சுமார் 2 லட்சத்து 12 ஆயிரம் பேர் இலங்கைக்கு திரும்பிச் சென்றனர். தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் சுமார் 1,02,000 பேர் அகதிகள் முகாம்களிலும், காவல் நிலையங்களிலும் பதிவு செய்துவிட்டு வெளியிலும் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை பாக் ஜலசந்தி கடல் பகுதியில் ரோந்து சென்ற இலங்கை கடற்படையினர் சந்தேகத்துக்குரிய முறையில் நின்றிருந்த ஒரு பைபர் படகை சோதனை செய்தனர். அதில் 3 பெண்கள், 4 குழந்தைகள் உட்பட 14 பேர் இருந்தனர். பின்னர் பைபர் படகை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர், காங்கேசன் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
காவல் துறை விசாரணையில் 3 பெண்கள், 4 குழந்தைகள், 5 ஆண்கள் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் வசித்து வந்த இலங்கை தமிழர்கள் என்பதும் மற்ற 2 பேர் படகை ஓட்டி வந்த மீனவர்கள் என்பதும் தெரிய வந்தது. பின்னர் 14 பேரும் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மே 19 வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.