முக்கிய செய்திகள்

இலங்கைக்கு எதிரான முதல் டி-20: இந்திய அணி வெற்றி

இலங்கைக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இலங்கைக்கு எதிரான முதலாவது ‘டுவென்டி-20’ போட்டியில் அசத்திய இந்திய அணி, 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபாரமாக ஆடிய லோகேஷ் ராகுல் அரைசதமடித்தார். ‘சுழலில்’ அசத்திய யுவேந்திர சகால் 4 விக்கெட் கைப்பற்றினார்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ‘டுவென்டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கட்டாக்கில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

இந்திய அணிக்கு கேப்டன் ரோகித், ராகுல் ஜோடி துவக்கம் தந்தது. ரோகித் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். திசரா பெரேரா பந்துவீச்சில் ராகுல் தொடர்ந்து இரண்டு பவுண்டரி அடித்தார்.பொறுப்பாக ஆடிய லோகேஷ் ராகுல் (61) அரைசதமடித்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 24 ரன்னில் அவுட்டானார்.இந்திய அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்தது. தோனி (39), மணிஷ் பாண்டே (32) அவுட்டாகாமல் இருந்தனர்.

சவாலான இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு டிக்வெல்லா (13), உபுல் தரங்கா (23) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. மாத்யூஸ் (1) ஏமாற்றினார். குணரத்னே (4), ஷனாகா (1), கேப்டன் திசாரா பெரேரா (3), தனஞ்செயா (7) சொற்ப ரன்னில் அவுட்டாகினர்.இலங்கை அணி 16 ஓவரில் 87 ரன்னுக்கு சுருண்டு, தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் யுவேந்திர சகால் 4, ஹர்திக் பாண்ட்யா 3, குல்தீப் யாதவ் 2 விக்கெட் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின்மூலம் 3 போட்டிகள் கொண்ட ‘டுவென்டி-20’ தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி வரும் 22ல் இந்தூரில் நடக்கவுள்ளது.