இலங்கை கொழும்புவில் மேலும் ஒரு குண்டு வெடித்ததால் பரபரப்பு..

இலங்கையின் தலைநகர் கொழும்புவில் வியாழக்கிழமை அன்று மேலும் ஒரு குண்டு வெடித்தது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர்.

அப்போது, பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன.

இந்த கொடூர குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 359-ஐத் தொட்டுள்ளது. 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் புதிய குண்டுவெடிப்பு தொடர்பாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் ருவான் குணசேகர கூறும்போது, ”கொழும்பு அருகே 40 கி.மீ. தொலைவில் புகோடா பகுதி உள்ளது.

இங்குள்ள மேஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்குப் பின்னால், அருகே காலி நிலத்தில் குண்டு வெடித்தது. இந்த சம்பவம் இன்று காலை நடந்தது.

இதுதொடர்பாக விசாரணை செய்துவருகிறோம். தொடர் குண்டுவெடிப்புக்குப்பிறகு சில இடங்களில் சந்தேகிக்கப்பட்ட குண்டுகளை செயலிழக்கச் செய்யும்போது அவை வெடித்துள்ளன. இது அப்படிப்பட்ட குண்டுவெடிப்பு இல்லை.

காலி நிலத்தில் குண்டு வெடித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை” என்றார்.