முக்கிய செய்திகள்

இலங்கை அதிபர் தேர்தல் :திடீர் திருப்பமாக சஜித் பிரேமதாசவுக்கு சந்திரிகா ஆதரவு..

இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளர் சஜித்பிரேமதாசவுக்கு, முன்னாள் அதிபர்சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க ஆதரவு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அதிபர் தேர்தல் நவம்பர் 16-ம் தேதி நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச,

பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் சஜித் பிரேமதாச, மக்கள் விடுதலை முன்னணியின் அதிபர் வேட்பாளராக அநுர குமார திசநாயக்கவும்,

இலங்கை சோசலிச கட்சி சார்பில் அஜந்தா பெரேராவும், தேசிய மக்கள் இயக்கம் சார்பில் முன்னாள் ராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க,

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், இந்திய வம்சாவளியைச் சார்ந்த சுப்ரமணியம் குணரத்னம் உட்பட 35 பேர் களத்தில் உள்ளனர்.

தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி,

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட 17 கட்சிகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன.

மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய மக்கள் முன்னணி,

புதிய தொழிலாளர் முன்னணி, ஸ்ரீலங்கா தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தேசிய திட்டம், நவ சம சமாஜ கட்சி, ஸ்ரீலங்கா ஜனநாயக முன்னணி,

ஐக்கிய மக்கள் முன்னணி, பலமு பெரமுன, மக்கள் தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட 12 கட்சிகள் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

ஒப்பந்தம் கையெழுத்து

இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகரும் முன்னாள் அதிபருமான சந்திரிகா குமாரதுங்க ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதற்காக இரு தரப்புக்கும் இடையே கொழும்பில் நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது