இலங்கையின் பயங்கர மழை வெள்ளம் : 45 ஆயிரம் தமிழர்கள் வீடுகளை இழந்து தவிப்பு..

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணம் தொடர் கனமழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கிறது.

45 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், பவுனியா, யாழ்ப்பாணம் மாவட்டங்களில்,

கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கி கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் அந்த 5 மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மாங்குளம், இரணிமடு உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் 14 ஆயிரம் குடும்பத்தினர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

கனமழையால் கண்டவளை பிரதேச செயலகம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் அங்கு பணியிலிருந்த அரசு ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறமுடியாத நிலை ஏற்பட்டது.

இடுப்பளவு தேங்கியுள்ள மழைநீரால் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். வெள்ளப்பெருக்கால் முல்லைத்தீவுக்கு செல்லும் முக்கிய சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனப் போக்குவரத்து சவாலாக உள்ளது.

வெள்ளத்தினால் நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்களும் நாசமடைந்துள்ளன.

வெள்ளத்தில் சிக்கியவர்களில் 8,539 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளார். அவர்கள் 52 நலவாழ்வு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ராணுவமும், கடற்படையும் இணைந்து வெள்ள மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளன. ஹெலிகாப்டர்கள், விமானங்கள், படகுகள் மூலம் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு இலங்கையின் இராணுவத்தளபதி, வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு, அந்நாட்டு அதிபர் மைதிரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.