இலங்கையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 10-ம் தேதி தேர்தல்..


இலங்கையில் கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படாமல் இருந்தது. இதனால், ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தி மக்களிடையே இருந்தது. புதிய தொகுதிகளை உருவாக்கும் சீர்திருத்தங்களுக்காக தேர்தல் தள்ளிப்போவதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இதுதொடர்பாக தீவிரமாக பரிசீலித்த இலங்கை தேர்தல் கமிஷன் வரும் பிப்ரவரி மாதம் பத்தாம் தேதியன்று தேர்தலை நடத்த தீர்மானித்தது.

இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக முன்னாள் அதிபர் ராஜபக்சே, ஆளும் சிறிலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகி சிறிலங்கா பொதுஜன பெரமுனா என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். ராஜபக்சே கட்சியுடன் கூட்டணி வைத்து இந்த உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திட்டமிட்ட மைத்ரிபாலா சிறிசேனா, ராஜபக்சே கட்சியினருடன் பலசுற்று பேச்சு வார்த்தை நடத்தினார்.

ஆனால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியுடனான உறவை முறித்து கொண்டால் கூட்டணிக்கு தயார் என்று ராஜபக்சே தரப்பில் நிபந்தனை முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் தேர்தலில் ராஜபக்சே கட்சி ஆளும்கட்சியை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அரசின் புதிய தேர்தல் சட்டத்தின்படி உள்ளாட்சி பிரதிநிதிகளின் எண்ணிக்கை 8,825 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் 25 சதவீதம் பெண் வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் முதன்முறையாக இந்த சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது, குறிப்பிடத்தக்கது.