இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 21 பேர் சிறைபிடிப்பு..

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகை பகுதிகளை சேர்ந்த 600 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிப்பதற்காக நேற்று கடலுக்கு சென்றனர்.

இதில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 6 மீனவர்களும், ராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தில் இருந்து சென்ற 15 மீனவர்களும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 21 பேரை கைது செய்தனர்.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். .

விசாரணைக்குப் பின் மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பிரதமராக ராஜபக்சே நேற்று பதவியேற்ற நிலையில் தமிழக மீனவர்கள் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது