இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டதற்கு இடைக்காலத் தடைவிதித்து இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
அதிபர் சிறிசேனாவின் உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுவை விசாரித்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிரடியாக அறிவித்தது.
முன்னாள் அதிபர் ராஜபக்சே அரசில் அமைச்சராக இருந்து அவரை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிட்ட வென்றவர் சிறிசேனா.
விக்ரமசிங்கேயின் உதவியுடன், கடந்த 2015-ம் ஆண்டு அதிபராகப் பதவி ஏற்றார் சிறிசேனா.
இதையடுத்து, அதிபர் சிறிசேனா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணியும், ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி செய்தன.
3 ஆண்டுகள் சென்ற நிலையில், ரணில் விக்ரமசிங்கேவுக்கு அளித்து வந்த ஆதரவைக் கடந்த மாதம் 26-ம் தேதி திடீரென வாபஸ் பெற்ற சிறிசேனா, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்கினார்.
அதன்பின், ராஜபக்சேயுடன் (இலங்கை மக்கள் முன்னணி) கூட்டணி அமைத்த அதிபர் சிறிசேனா, புதிய பிரதமராக ராஜபக்சேவை நியமித்து, பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார்.
இதனால் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.பெரும்பான்மை இல்லாத ராஜபக்சேவை பிரதமராக நியமித்தது செல்லாது என்று விக்ரமசிங்கே எதிர்ப்புத் தெரிவித்தார்.
சபாநாயகர் ஜெயசூர்யாவும் ராஜபக்சே சட்டப்பூர்வ பிரதமர் இல்லை என்று அறிவித்தார். இதனால் சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் அதிபர் சிறிசேனா முடிவுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் ராஜபக்சே பிரதமராக ஏற்க முடியாது எனத் தெரிவித்த ரணில் விக்ரமசிங்கே நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு நோட்டீஸ் அளித்தார்.
ஆனால், திடீரென நாடாளுமன்றத்தை முடக்கி உத்தரவிட்ட அதிபர் சிறிசேனா, வரும் 14-ம் தேதி கூடும் என்று அறிவித்தார்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு அதிபர் சிறிசேனா கட்சிக்கு ஆதரவு அளிக்கத் தமிழ் தேசியக் கூட்டணி மறுத்துவிட்டது.
இந்தச் சூழலில் நாடாளுமன்றத்தைக் கலைத்து கடந்த 9-ம் தேதி அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். மேலும், 2019-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார்.
இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை இருக்கும் நிலையில் திடீரென கலைக்கப்பட்டது
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி நேற்று இரவு அவசரமாகக் கூடி ஆலோசனை நடத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று முடிவு செய்தது.
இந்த நிலையில், திடீர் திருப்பமாக, மகிந்த ராஜபக்சே, சிறிசேனாவின் சுதந்திரா கட்சியில் இருந்து வெளியேறி இலங்கை பொதுஜன முன்னணி இணைந்தார்.
அவருடன் முன்னாள் எம்.பி. 50 பேரையும் அழைத்து கட்சி மாறினார். அவர்கள் அனைவரும் சிறிசேனாவின் சுதந்திரா கட்சி சார்பில் தேர்தலில் நின்று வென்றவர்கள்.
இந்தச் சூழலில் அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தைக் கலைத்து பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக 13 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதில் தேர்தல் ஆணைய அதிகாரி ரத்னஜீவன் ஹோலே தனியாகத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் அனைத்தும் தலைமைநீதிபதி நளின் பெரேரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுக்களை அனைத்தையும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தைக் கலைத்து பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.
மேலும், 2019-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி தேர்தல் நடத்தத் தேர்தல் ஆணையம் எந்த விதமான ஏற்பாடுகளையும் செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டனர்.
மேலும், அனைத்து மனுக்களையும் டிசம்பர் 4,5,6 ஆகிய தேதிகளில் விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.