முக்கிய செய்திகள்

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு : அதிபர் சிறிசேனா அதிரடி உத்தரவு

அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூட இருந்த நிலையில், அதிபர் சிறிசேனா  வெள்ளிக்கிழமை இரவு நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே இருந்து வந்த பனிப்போர் சமீபத்தில் மோதலாக வெடித்தது. பிரதமர் பதவியில் இருந்து ரனில் விக்ரமசிங்கேயை அதிபர் சிறிசேனா கடந்த மாதம் 26-ந் தேதி திடீரென்று நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் ராஜபக்சேயை புதிய பிரதமராக நியமித்தார். ஆனால் தானே பிரதமர் என்றும், நாடாளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும் ரனில் விக்ரமசிங்கே கூறினார். அத்துடன் பிரதமர் மாளிகையை விட்டு வெளியேறவும் அவர் மறுத்தார்.

இதனால், நாடாளுமன்றத்தை வருகிற 16-ந் தேதி வரை முடக்கி வைத்து சிறிசேனா உத்தரவிட்டார். 225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் ரனில் விக்ரமசிங்கேவுக்கு 120-க்கும் அதிகமான உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது. நாடாளுமன்ற சபாநாயகரின் ஆதரவும் ரனில் விக்ரமசிங்கேவுக்கு இருந்தது. அவர் ராஜபக்சேவை பிரதமராக ஏற்க மறுத்துவிட்டார்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க இரு தரப்பினருக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததால், நாடாளுமன்றம் வருகிற 14-ந் தேதி கூடும் என்று சிறிசேனா அறிவித்தார். இதைத்தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியில் ராஜபக்சே ஈடுபட்டார். ஆனால் அவரது முயற்சிக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. 15 எம்.பி.க்களை கொண்ட தமிழ்தேசிய கூட்டமைப்பும் ராஜபக்சேயை ஆதரிக்க மறுத்துவிட்டது.இதனால் நாடாளுமன்றத்தில் பலப்பரீட்சை நடைபெற்றால் ராஜபக்சே தோற்பது உறுதி ஆனது. இது அதிபர் சிறிசேனாவுக்கு பேரிடியாக அமைந்தது.

இதைத்தொடர்ந்து, தனக்கு நெருக்கமானவர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்த அதிபர் சிறிசேனா, நேற்று இரவு திடீரென்று நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். இந்த தகவலை மூத்த மந்திரி ஒருவர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ராஜபக்சே தரப்புக்கு (ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி) 8 எம்.பி.க்களின் ஆதரவு குறைவாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய இலங்கை நாடாளுமன்றத்தின் பதவி காலம் 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை உள்ளது. நாடாளுமன்றத்தின் ஆயுள் இன்னும் 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில், அதிபர் சிறிசேனா அதை அதிரடியாக கலைத்து இருப்பது இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இலங்கை நாடாளுமன்றத்துக்கு ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து ரனில் விக்ரமசிங்கே தரப்பு கோர்ட்டுக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.