
இலங்கை ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்நாட்டு அதிபர் மாளிகையை சனிக்கிழமை (ஜூலை 9) அன்று முற்றுகையிட்டுள்ளனர்.
அதிபர் மாளிகையில் உள்ள பல இடங்களுக்குள் நுழைந்து, அதிபர் கோத்தபயா ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று பலரும் குரல் எழுப்பியதைத் தொலைக்காட்சிகள் காட்டின.
இந்நிலையில் அதிபர் ராஜபக்சே ஏற்கெனவே அதிபர் மாளிகையிலிருந்து வெள்ளிக்கிழமை (ஜூலை 9) இரவு வெளியேற்றப்பட்டார் என்று ஊடகங்கள் கூறியுள்ளன.
சனிக்கிழமை ஆர்ப்பாட்டங்கள் கைமீறிப் போகும் என்று வேவுத் தகவல்கள் கிடைத்ததை அடுத்து, அவர் ராணுவத் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டார் என்றும் கூறப்பட்டது.
அதிகாலையில் அதிபர் மாளிகையைப் பலர் முற்றுகையிட்டனர்.
காவல்துறையினரும் ராணுவத்தாரும் கண்ணீர்ப்புகை வீசியும் பீரங்கியால் தண்ணீர் பாய்ச்சியும் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தடுக்க முயன்று தோற்றுப் போயினர்.
துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் அதில் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் காயம் அடைந்ததாகவும் சில உள்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
ராணுவத்தினர் சிலர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சேர்ந்துகொண்டனர்.
“பொறுமை இழந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்”
ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதால், ஊரடங்கு முன்னர் அறிவிக்கப்பட்டு பிறகு அகற்றப்பட்டது. பொதுப் போக்குவரத்து இயங்காது என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால் சனிக்கிழமை எல்லாம் மாறிப்போனது.
நாடு முழுவதிலும் இருந்து ரயில்கள், பேருந்துகள், லாரிகளில் சென்று, மக்கள் தலைநகர் கொழும்பில் திரண்டனர்.
பலர் ரயில்வே அதிகாரிகளை வற்புறுத்தி ரயில்களை ஓட வைத்தனர்.
கோத்தபயாவைப் பதவி விலகச் சொல்லி சொல்லி பொறுமை இழந்துவிட்டோம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் கூறினர்.
இந்நிலையில் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை அரசியல் நெருக்கடிக்கு விரைந்து தீர்வு காண்பது கூட்டத்தின் நோக்கம் என்று பிரதமர் அலுவலகம் கூறியது.
அதிபர் கோத்தபயா பதவி விலகினால் பிரதமர் விக்ரமசிங்கே அதிபராகப் பதிவ ஏற்கக்கூடும் என்று கூறப்படுகிறது.