இலங்கையில் பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்..


இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான கடிதத்தை அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் கருசூரியவிடம் முன்னாள் அதிபர் ராஜபக்ச புதன்கிழமை அளித்தார்.

இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமையிலான சுதந்திரக் கட்சியும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து, கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. இந்நிலையில், இலங்கை உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் தனித்தனியாக போட்டியிட்டன. இதனால் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுனா (எஸ்எல்பிபி) அதிக இடங்களைக் கைப்பற்றியது.

இந்தத் தேர்தல் தோல்விக்கு, ஆளுங்கட்சிகளான சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றையொன்று குற்றம்சாட்டி வந்தன. மேலும், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக வேண்டும் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மட்டுமின்றி அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரக் கட்சி நிர்வாகிகளும் வலியுறுத்தி வந்தனர்.

மேலும் ஐக்கிய தேசிய கட்சியினருடன் கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பதா, வேண்டாமா என்பது குறித்து முடிவெடுப்பதற்காக ஓர் உயர்நிலைக் குழுவையும் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா அமைத்தார்.

ரணிலிடமிருந்து பறிக்கப்பட்ட போலீஸ் துறை

தொடர்ந்து இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் வெடித்ததால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவிடம் இருந்து சட்டம் ஒழுங்கு பாதுகாப்புத் துறை (போலீஸ்) அமைச்சர் பதவியை ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த அரசியல் தலைவர் ரஞ்ஞித் மதுமா பண்டாராவிற்கு மைத்ரிபால சிறிசேனா வழங்கினார்.

இந்நிலையில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கருசூரியவிடம் பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான கடிதத்தை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று (புதன்கிழமை) அளித்தார். இதில் மகிந்த ராஜபக்ச ஆதரவு பெற்ற கூட்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 51 பேர்களும், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 4 உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் இருப்பது 225 உறுப்பினர்கள். ஆட்சியமைக்க தேவைப்படும் குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிகை 113. பிரதமர் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 106 இடங்கள் இருக்கின்றன. மேலும் 7 பேரின் ஆதரவு கிடைத்தால் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியும். இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குமானால் எளிதாக ஆட்சியில் நீடிக்க முடியும்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் கருசூரியா விவாதத்துக்கு ஏற்றால், அப்போதுதான் நேரடியாக யாருக்கு என்ன ஆதரவு என்பது தெளிவாகும். மேலும் நம்பிக்கையில்லா தீர்மானம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தோல்வியுற்றால் அடுத்து யார் ஆட்சி அமைப்பார் என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.