இலங்கை : ரணில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் நாளில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல்களையடுத்து மக்களுக்கு பாதுகாப்பு வழங்கத் தவறிவிட்ட இலங்கை அரசு

பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. தீர்மானத்தையொட்டி இரண்டு நாட்கள் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன.

தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்பதாக முன்னாள் அதிபர் ராஜபக்சே தலைமையிலான எதிர்க்கட்சி தெரிவித்தது.

இருப்பினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தீர்மானத்தை ஆதரித்தும், எதிர்த்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று வாக்களித்தனர்.

இதில் மொத்தமுள்ள 225 உறுப்பினர்களில் அரசுக்கு ஆதரவாக 119 எம்பிக்கள் வாக்களித்தனர். இதனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.