இலங்கையில் சமூக வலைதளங்களுக்கு மீண்டும் தடை..

இலங்கையில் மீண்டும் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறுகிய காலத்திற்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.

இதன்படி, வாட்ஸ் அப், ஃபேஸ்புக், வைபர் உள்ளிட்ட சில சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் ஏற்பட்ட அமைதியின்மையை கருத்தில் கொண்டு, நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

இலங்கையில் கடந்த 21ஆம் தேதியன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் உடன் அமுலுக்கு வரும் வகையில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தன.

9 நாட்கள் அமுல்படுத்தப்பட்டிருந்த அந்த தடையுத்தரவு மீண்டும் நீக்கப்பட்ட நிலையில், நீர்கொழும்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து சில மணித்தியாலங்கள் தடை செய்யப்பட்டிருந்தன.

கண்டி – திகன பகுதியில் கடந்த ஆண்டு ஏற்பட்ட இன வன்முறை சம்பவத்தின் போதே சமூக வலைதளங்கள் முதல் முறையாக முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.