நாடாளுமன்ற தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக-வுடன் நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றதாக இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தெரிவித்துள்ளன.
ம.தி.மு.க.வுடனும், விடுதலை சிறுத்தைகளுடனும் நாளைபேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
திமுக தரப்பில் பொருளாளர் துரை முருகன் தலைமையில், ஐ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி, பொன்முடி, எ.வ.வேலு, கே.என்.நேரு ஆகியோர் அடங்கிய நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழு தோழமைக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது.
காலை அண்ணா அறிவாலயத்தில் மார்க்சிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கே பாலகிருஷ்ணன், டி.கே. ரங்கராஜன், ஜி. ராமகிருஷ்ணன், சவுந்தர்ராஜனுடன் அக்குழு சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியது.
எதிர்பார்க்கும் தொகுதிகளின் விருப்பப் பட்டியல் கொடுத்திருப்பதாகவும், முதற்கட்ட பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்ததாகவும் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக மாலை இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணை செயலாளர் வீரபாண்டியன், சுப்பராயன், செயற்குழு உறுப்பினர்கள் பெரியசாமி, பழனிசாமி ஆகியோர் திமுகவின் நாடாளுமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை மேற்கொண்டனர்.
சுமார் 45 நிமிடங்கள் வரை நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றதாகவும்,
அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தொகுதியை அறிவிப்பதாகவும் தெரிவித்தனர்.
இன்று மனித நேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா திமுக கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்து பேச்சுவார்த்தை மேற்கொள்கிறார்.
நாளை காலை மதிமுகவுடனும், அதன் பின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.