“மின்னல் வேக நியமனமும் ராஜினாமா ஏற்பும்”:பாஜக கைப்பாவையாக தேர்தல் ஆணையம் மாறுகிறதா?..

தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டபோதே சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில் லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவர் பதவி விலகியுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

யார் இந்த அருண் கோயல்?:

கடந்த 1985ஆம் ஆண்டு பஞ்சாப் கேடர் ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல். இவர் மத்திய அரசு செயலாளராக பணியாற்றினார். மத்திய அமைச்சரவை அலுவலகத்தின் செயலாளர் பதவியிலிருந்து அருண் கோயல் கடந்த 2019ஆம் ஆண்டு விலகினார். அதன்பின் இவர் மத்திய அரசில் கனரக தொழில்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது. ஆனால் அவர் 2022ஆம் ஆண்டு நவம்பர் 18-ல் தனது பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.

அடுத்த நாளே தேர்தல் ஆணையர் பதவி:

மத்திய அரசின் செயலாளராக பதவி வகித்த அருண் கோயல் 2022ஆம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி விருப்ப ஓய்வு பெற்ற அடுத்த நாளே, அதாவது நவம்பர் 19ஆம் தேதியே தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமாரும் தேர்தல் ஆணையர்களாக அனுப் சந்திர பாண்டேவும், அருண் கோயலும் பணியாற்றி வந்தனர்.

நியமன சர்ச்சை, வழக்கு:

அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தன்னார்வ தொண்டு அமைப்பான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மத்திய அரசின் செயலாளராக பதவி வகித்த அருண் கோயல் விருப்ப ஓய்வு பெற்ற அடுத்த நாளே தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்தில் பல்வேறு சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று ஏடிஆர் மனுவில் கோரப்பட்டது.

ஏன் மின்னல் வேகம்?:

அந்த மனுவை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், “இந்த கோப்பு 24 மணி நேரத்தில் ஒப்புதல் பெற்றுள்ளது. மத்திய அரசுக்கு அப்படியான அவசரம் ஏன்? மே 15-ஆம் தேதி தேர்தல் ஆணையர் பணியிடம் காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அருண் கோயல் விருப்ப ஓய்வு பெற்ற உடனே மின்னல் வேகத்தில் அடுத்த ஆணையருக்கான கோப்புக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. அப்படி மின்னல் வேகத்தில் ஒப்புதல் அளிக்க அவசியம் என்ன?” என்று கேள்வி எழுப்பினர்.

மர்மமா இருக்கே:

மேலும், நாங்கள் அருண் கோயல் என்ற அதிகாரியின் திறனை கேள்விக்கு உள்ளாக்கவில்லை. மாறாக, எதன் அடிப்படையில் இந்த தேர்தல் ஆணையர் பதவிக்கான தேர்வு நடைபெற்றது என்பதையே கேட்கிறோம் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், தேர்தல் ஆணையராக தன்னை நியமிக்கும் திட்டம் குறித்து தனக்குத் தெரியாவிட்டால், அருண் கோயல் எப்படி விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தார் என்பது மர்மமாக இருப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியது.

வழக்கு தள்ளுபடி:

தொடர்ந்து, இந்த வழக்கில் இருந்து நீதிபதி ஒருவர் விலகினார். தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்த நிலையில், தேர்தல் ஆணையராக அருண் கோயலை நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி தள்ளுபடி செய்தது .

திடீர் ராஜினாமா:

இந்நிலையில், பதவி காலம் நிறைவடையும் முன்பே தேர்தல் ஆணையர் அருண் கோயல் இன்று திடீரென ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இவரது பதவி காலம் 2027 வரை உள்ளது. இந்நிலையில், விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று திடீரென அருண் கோயல் பதவி விலகியுள்ளார். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தில் ஏற்கெனவே ஒரு காலியிடம் இருந்த நிலையில், தற்போது அருண் கோயலும் ராஜினாமா செய்திருப்பதால் தலைமை தேர்தல் ஆணையரான ராஜிவ் குமார் மட்டுமே தேர்தல் ஆணைய தலைமைப் பொறுப்பில் உள்ளார். தேர்தல் ஆணையத்தின் தலைமையில், ஒரு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் இருப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

அவசரம் அவசரமாக தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட அருண் கோயலின் ராஜினாமாவும் அவசரம் அவசரமாக ஏற்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டு இருப்பது தேர்தல் ஆணையத்தை ஒன்றிய பாஜக அரசு எந்த அளவுக்கு கைப்பாவையாக பயன்படுத்துகிறது என்பதையே தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.

தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் எஸ்பிஐ தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..

பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனை நிறுத்திவைப்பு : உச்சநீதிமன்றம் உத்தரவு…

Recent Posts