முக்கிய செய்திகள்

நிலக்கரி ஊழல் வழக்கு : ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா குற்றவாளி என அறிவிப்பு


ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2006 செப்டம்பரில் இருந்து 2008 ஆகஸ்ட் வரைக்கும், மதுகோடா முதல்வராக இருந்தார். அப்போது தனது அதிகாரத்தை பயன்படுத்தி, நிலக்கரி சுரங்கங்களை மேற்குவங்கத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு முறைகேடாக ஒதுக்கீடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதன்பேரில், மதுகோடா, நிலக்கரித்துறை முன்னாள் செயலர் ஹெச்.சி.குப்தா, முன்னாள் ஜார்க்கண்ட் தலைமை செயலர் ஏ.கே. பாசு, நிலக்கரித்துறை செயலர் ஹரிஷ் சந்திரா உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ., அதுதொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த வழக்கின் மீதான விசாரணை டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சாட்சியங்கள், குறுக்கு விசாரணைகள் முடிந்த பின்னர் இன்று தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தீர்பை ஒட்டி குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

முன்னாள் முதல்வர் மதுகோடா குற்றவாளி, முன்னாள் நிலக்கரி துறை செயலாளர் ஹெச்.சி.குப்தா உள்பட 6 பேர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார். நான்கு பேர் குற்றமற்றவர்கள் என்று கூறி அவர்களை விடுவிப்பதாகவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளிகளுக்கான தண்டனை விபரங்கள் நாளை அறிவிக்கப்பட இருப்பதாக சி.பி.ஐ சிறப்பு கோர்ட் நீதிபதி கூறியுள்ளார்.