முக்கிய செய்திகள்

“அப்பா! நான் செத்துப் போன பிறகாவது நீ குடிக்காமல் இரு” : தந்தையின் மது பழக்கத்தால் மாணவர் தற்கொலை..


நெல்லை சங்கரன்கோவில் அருகே, தன் தந்தை மது அருந்துவதால் மனமுடைந்த 17 வயது மாணவர், உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு ரயில்வே மேம்பாலத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் தினேஷ் நல்லசிவன்(17). இவர் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு வரும் 6-ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார்.

இந்நிலையில், பாளையங்கோட்டை அருகேயுள்ள ரயில்வே மேம்பாலத்தில் இன்று (புதன்கிழமை) காலையில் மாணவர் தினேஷ் நல்லசிவன் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து பாளையங்கோட்டை போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் தினேஷின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேம்பாலத்தில் தொங்கியபடி இறந்து கிடந்ததால் யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டிருக்கலாம் என போலீஸார் ஆரம்பத்தில் சந்தேகம் அடைந்தனர்.

இந்நிலையில், தினேஷின் சட்டையில் இருந்து போலீஸார் கடிதமொன்றை கைப்பற்றினர். அந்தக் கடிதத்தில், தன்னுடைய இறப்புக்கு பிறகாவது தன் தந்தை குடிக்கக் கூடாது என எழுதப்பட்டிருந்தது.

மேலும், “என் இறப்புக்குப் பிறகாவது நீ (தந்தை) குடிக்காமல் இருக்க வேண்டும். இதுதான் என்னுடைய ஆசை. எனக்கு நீ கொள்ளி வைக்கக் கூடாது. காரியம் செய்யக் கூடாது. மொட்டை போடக் கூடாது. மணியின் தந்தை தான் இறுதிச் சடங்கு செய்ய வேண்டும். அப்போது தான் என் ஆத்மா சாந்தியடையும். இந்தியாவில் பிரதமரும், தமிழகத்தில் முதல்வரும் இனிமேலாவது மதுக்கடைகளை அடைக்கிறார்களா? என பார்ப்போம். இல்லையென்றால் நான் ஆவியாக வந்து மதுக்கடைகளை அடைப்பேன்.” என எழுதப்பட்டிருந்தது.
கடிதத்தைக் கைப்பற்றிய போலீஸார் இந்த வழக்கை தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் தினேஷ் சிறுவயதாக இருக்கும்போதே அவரது தாய் இறந்துவிட்டதும், அதன்பிறகு அவரது தந்தை வேறொரு திருமணம் செய்துகொண்டதும் தெரியவந்தது. 10-ம் வகுப்பு வரை தினேஷ் மதுரையில் உள்ள தன் சித்தப்பாவின் வீட்டில் தங்கி படித்துள்ளார். அதன்பிறகு 11 மற்றும் 12-ம் வகுப்புகளை நாமக்கல்லில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் படித்துள்ளார்.

இந்நிலையில், தந்தை வீட்டுக்கு கடந்த இரு நாட்களுக்கு முன் தான் வந்ததாகவும், அப்போது தன் தந்தை மது அருந்துவதால் தினேஷ் மனமுடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், தினேஷ் உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு, பாளையங்கோட்டை அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்