மூடியது மட்டும் போதுமா?..: இராஜா சண்முகசுந்தரம், ஊடகவியலாளர் (சிறப்புக் கட்டுரை)

tasmac 1

____________________________________________________________________

முதலமைச்சரின் வாக்குறுதியின்படி முதல்கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கின்றன என்பது வரவேற்கத்தக்க விடயமாக இருந்தாலும் கூட, மூடப்பட்ட கடைகள் அனைத்தும் போதிய வரவேற்பில்லாமல் இருந்ததே அவை மூடு விழா காண்பதற்கு காரணமாக இருந்திருக்கின்றன என்பதையும் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

எந்தெந்த கடைகளை முதல் கட்டமாக மூடப்போகிறீர்கள் என்று அத்துறைச்சார்ந்த அலுவலர்களிடம் கேட்டப்போது…

மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்ட கடைகள், பிரச்னைகளுக்குரிய கடைகள், ஆலயங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகாமையில் இருக்கின்ற கடைகள் என கணக்குச்சொன்னது அரசு துறை.

ஆனால், அகற்றப்பட்ட கடைகள் அனைத்தும் மேற்கூறியவற்றிற்கு தொடர்புடையதா என்று நாம் கணக்குப் பார்த்தப்போது, அவற்றிற்கு பெரும்பாலும் சம்பந்தமே இல்லாத கடைகளாகவேதான் இருந்திருக்கின்றன என்பதே நிதர்சனமான உண்மை.

இந்தந்த கடைகள் அகற்றப்பட வேண்டும் என ஆவேசமாக போராட்டம் நடத்திய பொதுமக்களின் பொறுப்புணர்வுக்கு, பட்டியல் அளித்த அந்தெந்த மாவட்ட நிர்வாகம் மதிப்பளிக்கவில்லை என்பதையே இது தெள்ளத்தெளிவாக காட்டுகிறது.

அப்படியெனில், எதன் அடிப்படையில் இந்த கடைகள் அகற்றப்பட்டுள்ளன என சாமானியனிடம் கேட்டால் கூட சட்டென்று பதில் சொல்லிவிடுவான்…

போதிய வருமானம் ஈட்டாத கடைகள், ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள கடைகள், அவ்வளவு தூரம் போகனுமா டா என்று மதுமயங்கிகளே கூறும் அளவிற்கு அவர்களுக்கு எட்டா தூரத்தில் உள்ள கடைகள் என இதுபோன்ற கடைகளே பெரும்பாலும் அகற்றப்பட்டிருக்கின்றன என்று.

ஆக, முதல்கட்டத்தில் பிரச்னைகளுக்குரிய கடைகள் பெரும்பாலும் மூடப்படவில்லை.

பிரச்னைகள் இருந்தாலும் அருகில் பள்ளி, கல்லூரி இருந்தாலும், ரோட்டில் போகும் பெண் பிள்ளைகள் சீண்டப்பட்டு தர்மச்சங்கடத்திற்குள்ளானாலும், விபத்தில் விலை மதிப்பற்ற உயிர் பறிபோனாலும் பரவாயில்லை. ஆனால், வருமானம் ஈட்டும் கடைகளை அகற்றக்கூடாது என்பதில் மட்டும் அதிகாரிகள் தெள்ளத்தெளிவாக இருந்திருக்கின்றார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

உதாரணமாக, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள “வடுவூர்” என்னும் கிராமத்தில் செல்வ செழிப்பாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது. இந்த இரண்டு டாஸ்மாக் மதுபான கடைகளை அகற்ற வேண்டும் என எத்தணை போராட்டங்களை அந்த ஊர் மக்கள் நடத்தியிருப்பார்கள், எத்தனை முறை அதிகாரிகளிடம் மனு அளித்து மன்றாடியிருக்கிறார்கள்,  எத்தனை பேர் பொது நோக்கத்திற்காக கைதாகி இன்றுவரை வழக்கை எதிர்கொண்டிருக்கிறார்கள்,  எத்தனை விளையாட்டு வீரர்களை விவசாயிகளை மது மூலம் ஏற்பட்ட விபத்தில் சிக்கி இழந்திருக்கிறார்கள் என்று அந்த மாவட்ட டாஸ்மாக் மேற்பார்வையாளரும் மாவட்ட ஆட்சியரும் எண்ணிப்பார்த்து இருந்திருந்தார்களேயானால்  இன்று, முதல் பட்டியலின்முதலிரண்டு கடைகளில் இவை இருந்திருக்கும். ஆனால், அவர்கள் எண்ணிப்பார்த்தது மக்கள் வாழ்வையல்ல வருமானத்தை என்பதாலேயே கம்பீரமாக இன்னும் காட்சி அளித்துக்கொண்டிருக்கிறது.

வடுவூர் ஒர் உதாரணம் தான் இன்னும் எத்தனையோ கிராமங்களை சீரழித்துக்கொண்டிருக்கும் பல மதுபான கடைகள் மூடப்பட்ட படியலில் இல்லை என்பது தான் வேதனை.

ஒருவேளை, உங்கள் வாக்குறுதிபடி 500 கடைகளை மூடிவிட்டோம் “அம்மா”…. என்ற கணக்கை மட்டுமே முதல்வரின் கவனத்திற்கு அதிகாரிகளும் அமைச்சர்களும் கொண்டுச்செல்கிறார்களோ என்ற அய்யம் மேலோங்குகிறது. எதன் அடிப்படையில் மூடினோம் என்பதை முதல்வரிடம் கூட மூடி மறைத்து விட்டார்களோ என்று எண்ணவும் தோன்றுகிறது.

எது எப்படியோ அடுத்தக்கட்டமாவது வருமானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மக்கள் நல்வாழ்விற்கு முக்கியத்துவம் அளித்து முக்கிய கடைகளை மூட வேண்டும் என்பதே முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.

இப்போது மூடிய கடைகள் மட்டும் போதாது என்றுணர்ந்து விரைவிலேயே ஒட்டுமொத்த மதுக்கடைகளுக்கும் மூடுவிழா காண்பார் முதல்வர் என்று நம்புகிறோம் !

நம்பிக்கையுடன்…

– ராஜா சண்முகசுந்தரம்,ஊடகவியலாளர்

தொடர்புக்கு – 9600428367, 9840308748

___________________________________________________________________________________________________________