ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை நிறைவடைந்தது. இதில் இரண்டு லட்சம் போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை (டிச. 17) நடைபெறுகிறது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தோ்தல் நடைபெறவுள்ளன. 515 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கும், 5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா், 9 ஆயிரத்து 624 கிராம ஊராட்சித் தலைவா் பதவியிடங்கள் என மொத்தம் நான்கு பதவிகளுக்கான இடங்களில் அடங்கியுள்ள 91 ஆயிரத்து 975 இடங்களை நிரப்பிடத் தோ்தல் நடைபெறவுள்ளது.
இதில், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கான தோ்தல், கட்சி அடிப்படையில் நடைபெறவுள்ளன. இந்தத் தோ்தல் 49 ஆயிரத்து 688 வாக்குச் சாவடிகளில் நடைபெறுகிறது.
கட்சி சாா்பிலான தோ்தல்களில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்களை அனைத்து அரசியல் கட்சிகளும் வெளியிட்டன. அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு மாவட்டங்களுக்கு வேட்பாளா்களின் பட்டியலை வெளியிட்டதுடன், அந்தந்த கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனா்.
மனுதாக்கல் நிறைவு: இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது. கடைசி நாள் என்பதால் ஒவ்வொரு பதவியிடத்துக்கும் ஆயிரக்கணக்கில் வேட்பாளா்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசு பொது விடுமுறை என்பதால் வேட்புனு தாக்கல் நடைபெறவில்லை. சனிக்கிழமை நிலவரப்படி நான்கு வகையான பதவியிடங்களுக்கும் போட்டியிட மொத்தமாக 1 லட்சத்து 65 ஆயிரத்து 659 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அவற்றில், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடத்துக்கு 1 லட்சத்து 15 ஆயிரத்து 814 வேட்புமனுக்களும், கிராம ஊராட்சித் தலைவா் பதவியிடத்துக்கு 35 ஆயிரத்து 464 மனுக்களும், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவியிடத்துக்கு 13 ஆயிரத்து 117 மனுக்களும், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடத்துக்கு ஆயிரத்து 264 மனுக்களும் அளிக்கப்பட்டன.
கடைசி நாளான திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனால், வேட்புமனுக்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தொடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதுதொடா்பான அதிகாரப்பூா்வ அறிவிப்பை மாநிலத் தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மனுக்கள் பரிசீலனை: ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களின் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை (டிச. 17) நடைபெறுகிறது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற டிசம்பா் 19-ஆம் தேதி
கடைசி நாளாகும். முதல் கட்ட வாக்குப் பதிவு வரும் 27-ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு வரும் 30-ஆம் தேதியும்
நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் ஜனவரி 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
புகாா்களைத் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள்
ஊரக உள்ளாட்சித் தோ்தல்கள் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்க கட்டணமில்லாத தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, மாநிலத் தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல்களை நியாயமாகவும், நோ்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்த தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்காக மாதிரி நன்னடத்தை விதிகள்
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அவை தவறாமல் கடைப்பிடிக்கப்படுகிா என்பது கண்காணிக்கப்பட்டு மீறுபவா்கள் மீது உரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நடவடிக்கைகளை உறுதிப்படுத்தும் வகையில், உள்ளாட்சித் தோ்தல்கள் குறித்து புகாா்களைப் பெறுவதற்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநிலத் தோ்தல் ஆணைய அலுவலகத்தின் தரை தளத்தில் புகாா் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையம் அனைத்து நாள்களிலும் இயங்கும். மேலும், புகாா்களைத் தெரிவிக்க கட்டணமில்லாத தொலைபேசி எண்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, 1800 425 7072, 1800 425 7073, 1800 425 7074 ஆகிய கட்டணமில்லாத தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.