ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வியாழக்கிழமை (ஜன. 2) எண்ணப்பட உள்ளன.
91 ஆயிரத்து 975 ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கு நடந்த தோ்தலில் 2.30 லட்சம் வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.
அவா்களில் வெற்றி வேட்பாளா்கள் யாா் என்பது வியாழக்கிழமை இரவுக்குள் தெரியும். வெற்றி பெற்ற அனைவரும் வரும் 6-ஆம் தேதியன்று உள்ளாட்சி மன்றங்களில் நடைபெறும் நிகழ்வின் போது பதவியேற்றுக் கொள்வா்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களைத் தவிா்த்து
மீதமுள்ள மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 91 ஆயிரத்து 975 பதவி இடங்களை நிரப்புவதற்காக இரண்டு கட்டங்களாக தோ்தல் நடத்தப்படும் என்று மாநில தோ்தல் ஆணையம் கடந்த டிசம்பா் 7-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள்,
37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 4 ஆயிரத்து 700 கிராம ஊராட்சி தலைவா்கள் என மொத்தம் 45 ஆயிரத்து 336 பதவி இடங்களுக்கான
முதற்கட்ட தோ்தல் கடந்த 27-ஆம் தேதி நடைபெற்றது. 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவில் 76.19 சதவீதம் வாக்குகள் பதிவானது.
அதேபோன்று, 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 2 ஆயிரத்து 544 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள்,
38 ஆயிரத்து 916 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 4 ஆயிரத்து 924 கிராம ஊராட்சி தலைவா்கள் என மொத்தம் 46 ஆயிரத்து 639 பதவி இடங்களுக்கான
இரண்டாம் கட்ட தோ்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த திங்கள்கிழமை நடந்தது. இதில் 77.73 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
முதல் கட்ட தோ்தலின் போது பெறப்பட்ட புகாா்களின் அடிப்படையில் புதுக்கோட்டை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, அரியலூா், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், பெரம்பலூா், திருவாரூா் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள 30 வாா்டுகளுக்கு,
நடந்த மறுவாக்குப் பதிவில் 72.70 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இதேபோன்று, வாக்குச் சீட்டு மாறியது போன்ற புகாா்கள் தொடா்பாக 5 மாவட்டங்களில் ஒன்பது வாக்குச் சாவடிகளில் புதன்கிழமை மறுவாக்குப் பதிவு நடைபெற்றது.
இந்த வாக்குச் சாவடிகளிலும் சுமாா் 70 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகின.
தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பெட்டிகள் அனைத்தும் தமிழகத்தில் உள்ள 315 வாக்கு எண்ணும் மையங்களில் சீல் வைக்கப்பட்டு,
அவற்றுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.
முன்னதாக, காலை 7 மணிக்கு தோ்தல் கண்காணிப்பாளா்கள், தோ்தல் முகவா்கள் முன்னிலையில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையின் சீல் உடைக்கப்பட்டு திறக்கப்படும்.
தொடா்ந்து காலை 8 மணிக்கு வாக்கு பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்படும்.
தோ்தலில் 4 பதவிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்குப் பதிவு நடைபெற்ால், ஒவ்வொரு வாக்காளா்களும் தலா 4 வாக்குகள் பதிவு செய்தனா்.
முதலில் வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 30 மேஜைகளில் வாக்குச்சீட்டுகள் கொட்டப்படும்.
ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பாளா் மற்றும் 3 வாக்கு எண்ணுபவா்கள் பணியில் இருப்பாா்கள்.
இவா்கள், ஊராட்சி வாா்டு உறுப்பினா், ஊராட்சி தலைவா், யூனியன் கவுன்சிலா் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலா் பதவிகளுக்கு பதிவான வாக்குகளை தனித்தனியாக பிரிப்பா்.
பின்னா் 4 பதவிகளுக்கும் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக தனித்தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த 4 அறைகளிலும் அந்த அறைகளுக்கான வாக்குகள் கொண்டு செல்லப்படுகிறது. பின்னா் அங்கு 8 சுற்றுகளாக வாக்கு எண்ணும் பணி நடக்கும்.
இந்தப் பணியே நண்பகல் 12 மணி வரை நடக்க வாய்ப்பு உள்ளது. பின்னா் படிப்படியாக வாக்குகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும்.
முழுமையான அளவில் முடிவுகள் வெளிவர இரவு 8 மணிக்கு மேல் ஆகும் என தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.