முக்கிய செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தலோடு 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்தாவிட்டால் போராட்டம் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..

“தங்கள் கூட்டணி லாபத்திற்காக எடுபிடி அ.தி.மு.க அரசைக் காப்பாற்ற தேர்தல் ஆணையத்தின் துணையோடு 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்தக் கூடாது என மத்திய பா.ஜ.க அரசு முயற்சிக்குமேயானால், ஒட்டுமொத்த தமிழக மக்களையும் ஒன்று திரட்டி போராடுகிற சூழல் வரும்”

– திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

இன்று (10-02-2019) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் தளி பிரகாஷ் எம்.எல்.ஏ இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினார். அதன் முழுவிவரம் பின்வருமாறு:

மணவிழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பித்துக் கொண்டிருக்கக்கூடிய மாவட்டச் செயலாளர்களே, முன்னாள் இன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களே, பல்வேறு பொறுப்புகளில் இருந்து பணியாற்றி வரும் கழகத்தின் நிர்வாகிகளே, மணமக்களின் உற்றார் உறவினர்களே, தலைவர் கலைஞர் அவர்களின் உயிரினும் மேலான என் அன்பு உடன்பிறப்புகளே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.

இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பை ஏற்று வாழ்த்தக்கூடிய வாய்ப்பை பெற்றமைக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு உருவாக்கித் தந்திருக்கக்கூடிய மணமக்களுக்கு, மணமக்களின் உற்றார், உறவினர்களுக்கு. குறிப்பாக மாவட்டச் செயலாளர் பிரகாஷ் அவர்களுக்கு என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நேரு அவர்கள் வாழ்த்துரை வழங்குகின்றபோது எடுத்துச்சொன்னார். நான் வந்திருக்கின்ற காரணத்தால் பிரகாஷ் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றார், மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்றார். உண்மை தான் அதை நான் மறுக்கவில்லை. ஆனால், அவர் எந்தளவுக்கு மகிழ்ச்சி அடைந்திருக்கின்றாரோ அதைவிட பன்மடங்கு நானும் மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்றேன் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் என்பது அறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட நேரத்தில், குடும்பப் பாச உணர்வோடு இந்த இயக்கம் இருக்க வேண்டும் என்று தான், இந்த இயக்கத்தை உருவாக்கித் தந்திருக்கின்றார்கள். ஆகவே, அந்த குடும்பப் பாச உணர்வோடு மேடையில் அமர்ந்திருக்கக்கூடிய கழக முன்னோடிகள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் மட்டுமல்ல இங்கு வந்திருக்கக்கூடிய நீங்களும் ஒரு குடும்பப் பாச உணர்வோடு இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்து இந்த மணமக்களை வாழ்த்திக் கொண்டிருக்கின்றோம்.

இன்று ஒரு முக்கியமான நாள். வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நாள். அது என்னவென்று கேட்டால் அறிஞர் அண்ணா அவர்கள் 1967ல் ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலம் தான் நம்மிடத்தில் வாழ்ந்து, அவரின் மறைவிற்குப் பின்னால் 1969 பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் முதன்முதலாக முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற நாள். இந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தான். கணக்குப்போட்டுப் பார்த்தால் 50 ஆண்டுகாலம் முடிந்திருக்கின்றது. அப்படிப்பட்ட தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்று 50 ஆண்டு காலம் நிறைவடைந்திருக்கும் இந்த சிறப்பிற்குரிய நாளில் மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்கள் வாழ்க்கையில் எல்லா நன்மைகளும் பெற்று அவர்கள் சிறப்போடு வாழ்ந்திட வேண்டும் என்று நான் உங்கள் சார்பில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் வாழ்த்துவதற்கு கடமைப்பட்டிருக்கின்றேன்.

நம்முடைய மதிப்பிற்குரிய அருமை பெரியவர் வெங்கடசாமி அவர்கள், இந்த ஒசூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றிய நிகழ்வுகளையெல்லாம் அவர் எடுத்துச் சொன்னார். அப்பொழுது, அவர் பொறுப்பேற்ற காலத்தில் இந்தத் தொகுதி எப்படி இருந்தது? 67ற்கு பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்ததற்குப் பின்னால், அதிலும் குறிப்பாக 1971 – 1972 போன்ற அந்த ஆண்டுகளில் எவ்வளவு பெரிய மாற்றங்களை சிப்காட் என்ற தொழிற்சாலையை கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த நேரத்தில் உருவாக்கி, அதற்குப் பிறகு இந்த பகுதி வளர்ச்சி அடைந்திருக்கக்கூடிய இந்தப் பெருமைகளை எல்லாம் அவர் எடுத்துச் சொன்னார். அதேபோல், மற்றவர்களும் குறிப்பிட்டுச் சொன்னார்கள், குடிப்பதற்குக்கூட தண்ணீர் இல்லாத ஒரு சூழ்நிலை. அப்படியே தண்ணீர் கிடைத்தாலும் அதைக் குடிக்கின்ற நேரத்தில் அதனால் நோய்கள் வரக்கூடிய நிலை. எனவே, இந்த நிலைகளைப் போக்கிட வேண்டும் என்று சொன்னால், குடிப்பதற்கு சுத்தமான தண்ணீரை குடிக்கின்ற தண்ணீராக அமைந்திட வேண்டும்.

ஒரு செய்தியை சொல்ல வேண்டும் என்று சொன்னால், ஒரு அரசு அலுவலகத்தில் ஆசிரியராக இருந்தாலும், காவல்துறையில் இருக்கக்கூடிய அதிகாரிகளாக இருந்தாலும், அல்லது அரசு அலுவலகங்களில் பணிபுரியக்கூடியவர்கள் யாராவது ஒரு மிகப்பெரிய தவறு – குற்றத்தை செய்துவிட்டால் அந்தக் குற்றத்திற்கான, தவறுக்கான தண்டனையாக அந்த நபரை தண்ணியில்லாத காட்டிற்கு மாற்றுவார்கள். ட்ரான்ஸ்பர் செய்கின்ற போது அதிகமான தண்டனை தரவேண்டும் என்று சொல்லி, தண்ணியில்லாத காட்டிற்கு மாற்றிப்போடுங்கள் என்று சொல்லி விடுவார்கள். அந்தத் தண்ணியில்லாத காடு மாற்றப்படுவது ஒன்று இராமநாதபுரம். அடுத்து தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற இந்த மாவட்டங்களுக்குத் தான். ஏனென்றால், இங்கு தான் குடிக்கக்கூடிய தண்ணீருக்கு மிகவும் கஷ்டம். ஆனால், அந்த நிலைகளை மாற்றிட வேண்டும் என்பதற்காகத்தான், கலைஞர் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு, அதுவும் குறிப்பாக குடிநீரை கண்காணிக்கக்கூடிய துறை உள்ளாட்சித் துறை அந்த உள்ளாட்சித்துறை என்ற பொறுப்பை என்னிடத்தில் வழங்கி, இந்த பிரச்னைகளை உடனடியாக தீர்த்துவைக்க, செயல்படவேண்டும் என்று எனக்கு ஆணையிட்டார்கள்.

அந்த ஆணையை ஏற்றுக்கொண்டு சட்டமன்றத்தில் அங்கு இருக்கக்கூடிய உறுப்பினர்கள், முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்களைப் பார்த்து இராமநாதபுரம் பிரச்னையைச் சொல்லுவார்கள். இந்த ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவந்தால் தான் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்கள் காப்பாற்றப்படும் என்ற கோரிக்கையை வைப்பார்கள். அதை தீர்த்து வைக்க இதற்காக நிதி அதிகமான அளவிற்கு தேவைப்படுகின்றது. அந்த நிதியைப் பெறுவதற்கு நாம் ஜப்பான் நாட்டினுடைய தயவை எதிர்நோக்கி காத்திருக்கின்றோம். அப்படி எதிர்நோக்கி காத்திருக்கின்ற நேரத்தில் ஒரு முறை இந்த பிரச்னை சட்டமன்றத்தில் எழுகின்ற போது சட்டமன்றத்தில் சொன்னார், ஜப்பான் நாட்டினுடைய நிதியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம். அது வரவில்லை என்று சொன்னால், நானே முன்னின்று தமிழக அரசின் சார்பில் எவ்வளவு செலவானாலும் கவலையில்லை. அதை நான் நிறைவேற்றியேத் தீருவேன் என்று தலைவர் கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் உறுதிமொழி தந்தார்கள்.

அதற்குப்பிறகு, தலைவர் அவர்கள் அறிவுரையோடு ஆணையை ஏற்றுக்கொண்டு நான் ஜப்பான் நாட்டிற்குச் சென்றேன். அங்கிருக்கக்கூடிய வங்கியின் அதிகாரிகள், அலுவலர்கள் அத்துனைபேரையும் நான் சந்தித்தேன். சந்தித்து இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும், என்ற அந்தக் கோரிக்கையை எடுத்து வைத்த போது அவர்களும், உடனடியாக உறுதியைத் தந்து அவர்களுடைய பிரதிநிதிகளையெல்லாம், இந்த மாவட்டங்களுக்கு அனுப்பிவைத்து அவர்களும் ஆய்வு நடத்தி அதற்குப் பிறகு நாம் கேட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை உடனடியாக நாம் பெற்று அதற்குரிய அடிக்கல் நாட்டு விழாவை தலைவர் கலைஞர் அவர்களை அழைத்து வந்து நாம் செய்தோம். செய்தது மட்டுமல்ல, அந்தப் பணியை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என்று அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சராக இருந்த எனக்கும், என்னுடைய துறையைச் சார்ந்திருக்கக்கூடிய அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்கள்.

உத்தரவிட்டது மட்டுமல்ல, குறித்த நேரத்திற்குள் இந்தப் பணியை நீங்கள் முடித்துவிட்டால், உங்களுக்கு நான் பரிசுத் தருவேன் என்று தலைவர் கலைஞர் அவர்கள் அந்த அடிக்கல் நாட்டு விழாவில் அறிவித்தார்கள்.

அதற்குப் பிறகு இதற்கென்று தனி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து அந்தப்பணியை நாம் விரைவுப்படுத்தி, வேகப்படுத்தி, இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றினோம், இந்த கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்திற்கு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தையும் கொண்டுவந்து நிறைவேற்றி முடித்தோம். ஆனால், நிறைவேற்றி முடித்தோம் என்று பெருமையோடு சொல்லுகின்ற அதேநேரத்தில் இன்னும் சில பகுதிகளில், சில கிராமங்களில் சில நகரங்களில் அந்த ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் வரக்கூடிய நீர் கிடைக்கிறதா என்றால் இல்லை என்ற செய்தி தான் வந்து கொண்டிருக்கின்றது. அது உள்ளபடியே வேதனைக்குரிய ஒன்று. என்ன காரணம்? திட்டத்தைக் கொண்டு வந்தோம், அதற்கான பணிகளில் ஈடுபட்டோம். அதற்கென்று தனி அலுவலர்களை அதிகாரிகளை நியமித்து அந்தப் பணிகளை மேற்பார்வையிட வைத்தோம். ஆனால், அதற்குப்பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெறக்கூடிய வாய்ப்பினை இழந்து இன்றைக்கு ஆளும்கட்சியாக இருக்கக்கூடிய அ.தி.மு.க ஆட்சிக்கு வந்து, நாம் செய்து முடித்திருந்த 80 % முதல் 85 % பணிகளை தொடர்ந்து அவர்கள் செய்து மிச்சமிருக்ககூடிய பணிகளை நிறைவேற்றியிருந்தால், எந்தக் குறைகளும் இல்லாத வகையில் கூட்டுக்குடிநீர் திட்டம் இந்த இரண்டு மாவட்ட மக்களுக்கும் கிடைத்திருக்க முடியும்.

ஆனால், அந்தப் பணிகளைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை. அதனால் தான் இன்றைக்கு இந்தக் குறைபாடுகளும் இருந்து கொண்டிருக்கின்றது. நான் இப்பொழுது சொல்லுகின்றேன், விரைவில் நாம் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கின்றோம். நாடாளுமன்றத் தேர்தல் எப்படியும் வந்தே தீரும் 5 ஆண்டுகாலம் முடியப்போகின்றது. இந்த மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்திலோ தேர்தல் தேதி அறிவிக்கப்படவிருக்கின்றது.

அப்படி அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு எப்படியும் ஏப்ரல், மே மாதத்தில் இந்தியாவில் இருக்கக்கூடிய எல்லா மாநிலங்களிலும், நாடாளுமன்றத் தேர்தல் முடிவுற்று மே மாதம் ஒரு புதிய ஆட்சி மத்தியில், நிச்சயமாக உறுதியாக மோடியின் ஆட்சி அகற்றப்பட்டு நாம் விரும்பக்கூடிய உருவாகப் போகிறது. ஒரு சிறப்பான ஆட்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய முழு ஒத்துழைப்போடு முழு ஆதரவோடு அமையக்கூடிய ஆட்சிதான் மத்தியில் உறுதியாக அமையப்போகின்றது. அப்படி அமைகின்ற நேரத்தில் இருக்கக்கூடிய பிரச்னைகள், குறைபாடுகள் எல்லாம் தீர்த்து வைக்கக்கூடிய நிலை உருவாகப் போகின்றது.

நீங்கள் நினைக்கலாம், வெறும் நாடாளுமன்றத் தேர்தலை மட்டும் சொல்கின்றானே, ஏற்கனவே, தமிழ்நாட்டில் 18 சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏக்கள் பதவி பறிக்கப்பட்டிருக்கின்றது. பறிக்கப்பட்ட எம்.எல்.ஏ பதவியின் தேர்தல் 6 மாதத்திற்குள்ளாக வைத்தாக வேண்டும். 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 18ம் நாள் எம்.எல்.ஏக்களின் பதவி பறிக்கப்பட்டது. ஆறு மாதத்திற்குள் தேர்தல் வைக்க வேண்டும். ஆனால், 15 மாதங்கள் ஆகிவிட்டது. 18 தொகுதிகளில் இருந்த எம்.எல்.ஏக்களின் பதவி ஏன் பறிக்கப்பட்டது என்றால், நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட எதிர்த்து வாக்களிக்கவில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு எதிராக கவர்னரிடத்தில் முதலமைச்சரை மாற்ற வேண்டும், எங்களுக்கு இவர் மீது நம்பிக்கை இல்லையென்று மனு கொடுத்தார்கள், அதனால் இவர்கள் நீக்கப்பட்டார்கள். அதனால் தான் இவர்களின் ஆட்சியே நீடித்து வருகிறது.

இதில் என்ன வேடிக்கை என்றால், எதிர்த்து ஓட்டு போட்டவர்கள் யார் தெரியுமா? துணை முதலமைச்சராக இருக்கின்ற ஓ.பன்னீர் செல்வம் அவரோடு சேர்த்த 11 பேர். அவர்கள் பதவி நீக்கப்படவில்லை. இந்த ஆட்சியே இருக்கக்கூடாது என ஓட்டு போட்டவர்கள். இன்னும் 10 நாட்களில் தீர்ப்பு வரப்போகிறது. நிச்சயமாக, இவர்களின் பதவியும் பறிக்கப்படும் என்ற நம்பிக்கையோடு இங்கிருப்பவர்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் க்கும் நல்லாத் தெரியும். அப்படி ஒரு நிலை வருகிற போது, இந்த ஆட்சி நீடிக்க வாய்ப்பில்லை.

இந்த 18 தொகுதி மட்டுமல்ல, மேலும் 3 தொகுதி. திருவாரூர், திருப்பரங்குன்றம். மூன்றாவது இந்த தொகுதி, உங்கள் ஓசூர் தொகுதி. இங்கு எதற்கு காலியானது என உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், இன்னும் இந்தத் தொகுதி காலியானது என அறிவிப்பு வரவில்லை. நியாயமாக சபாநாயகர் தேர்தல் கமிஷனுக்கு எழுதி அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், அவர் என்ன சொல்கிறார் என்றால், உயர் நீதிமன்றத்தில் இருந்து இன்னும் தாக்கீது வரவில்லை என்கிறார். நாங்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு உயர் நீதிமன்றத்தை அணுகினோம். அவர்கள் அனுப்பி விட்டோம் என்கிறார்கள். இரண்டு நாள் பொறுத்திருப்போம். வரவில்லை என்றால், வழக்கை மதிக்கவில்லை என உங்கள் மீது வழக்குப் போடுவோம் என்றும் நான் சொல்லியிருக்கிறேன்.

நியாயமாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்துகிற நேரத்தில், இந்த 21 தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தலை நடத்தியாக வேண்டும். ஆனால் எனக்கு வந்துகொண்டிருக்கிற செய்திகள் என்னவென்றால், பா.ஜ.கவும் அ.தி.மு.க வும் கூட்டணி வைப்பதற்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலில் இவர்கள் கூட்டணிக்கு ஒத்துக்கொள்ளவில்லை. ஒருவேளை கூட்டணி வைத்தால் டெபாசிட் காலியாகி விடும் என ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால், மோடி இவர்களை மிரட்டிக் கொண்டிருக்கிறார். நீங்கள் தோற்பீர்களோ? ஜெயிப்பீர்களோ? எங்களுடன் கூட்டணி வைக்க வேண்டும். இல்லையென்றால், ஐ.டி ரெய்டு. ஆதாரங்கள் கையில் இருக்கிறது. குட்கா ஆதாரம், எடப்பாடி பழனிசாமி ஊழல் ஆதாரம் எல்லாம் இருக்கிறது. 11 எம்.எல்.ஏக்கள் வழக்கு இருக்கிறது. இதையெல்லாம் வைத்து பழி வாங்கி விடுவோம் என மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த மிரட்டலுக்கு பயந்து அ.தி.மு.க தயாராகி விட்டது. இந்நிலையில் இவர்கள் ஒரு நிபந்தனை வைத்திருக்கிறார்கள். என்னவென்றால், இந்த 21 தொகுதிகளுக்கு தேர்தல் வேண்டாம். வைத்தால் நாங்கள் தேற மாட்டோம். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுற்று கொஞ்ச நாளைக்காவது நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம் எனக் கேட்டிருக்கிறார்கள். நிச்சயமாக சட்டமன்ற பொதுத் தேர்தல் வருகிற போது எங்கும் நாங்கள் வெற்றிபெற முடியாது, ஏன் டெபாசிட் கூட வாங்க முடியாது, எனவே இருக்கிற வரைக்கும் அனுபவித்து போகிறோம் என ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். இதுதான் உண்மை.

நான் இப்போது சொல்கிறேன், இந்த 21 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்தாமல் இருந்தால், தமிழ்நாட்டில் இருக்கின்ற கட்சிகள் மட்டுமல்ல, தமிழகத்தில் இருக்கின்ற மக்களை ஒன்று திரட்டி ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்துகின்ற சூழல் நிச்சயம் ஏற்படும். அதில் எந்த மாற்றமும் கிடையாது. ஏற்கனவே, சி.பி.ஐ, ரிசர்வ் வங்கி என எல்லாவற்றையும் உங்களுக்கு பக்கபலமாக வைத்திருக்கிறீர்கள். உச்சநீதிமன்றத்தையே மிரட்டக் கூடிய வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இந்நிலையில் தேர்தல் ஆணையத்தையும் கூட வைத்துக் கொண்டு அநியாயத்துக்கு துணை போகிறீர்கள் என்பதால் தான் சொல்கிறேன் இந்த மோடி அரசு ஒரு மோசடி அரசு.

மத்தியில் மோசடி ஆட்சி என்றால், மாநிலத்தில் கூலிப்படை ஆட்சி. எடுபிடி ஆட்சி. கொலை செய்கிற கொள்ளையடிக்கின்ற ஒரு ஆட்சி. இப்படிப்பட்ட ஆட்சியை விட்டு வைக்கலாமா? இவர்களை அகற்ற நீங்கள் தயாராக வேண்டும். இங்கே பேசிய அனைவரும், என்னை அடுத்த முதலமைச்சர் என விளித்துப் பேசினார்கள். இத்தோடு இந்தப் பணி நிறைவடைந்து விடாமல், தலைவர் கலைஞர் அவர்கள் இந்த கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆற்றியப் பணிகளை நினைவில் கொண்டு, வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் அத்தோடு சேர்த்து 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தி.மு.கழகத்திற்கு ஆதரவை தர வேண்டும்.

ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் சேர்த்து தேர்தல் வர வேண்டுமென நாங்கள் மட்டுமல்ல, தமிழக மக்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி உதயமாக வேண்டுமென்கிற உணர்வோடு இருக்கிறார்கள். அந்த உணர்வினை நிறைவேற்ற அனைவரும் தயாராகுங்கள், தயாராகுங்கள், தயாராகுங்கள் எனக் கேட்டு, மணக்கோலம் பூண்டிருக்கின்ற மணமக்கள் வாழ்வில் எல்லா நன்மைகளையும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுமென வாழ்த்தி விடைபெறுகிறேன்.

நன்றி வணக்கம்.

இவ்வாறு அவர் பேசினார்.