நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்க உள்ளதாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா முதல்வரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று டெல்லியில் நேரில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது சுமார் ஒரு மணி நேரம் வரை இருவர் பேசி கொண்டர். சந்திப்பின் போது 2019 நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடியை சந்தித்த சந்திரசேகர ராவ், தற்போது 50 நாட்களுக்குள் மீண்டும் சந்தித்து சில முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்துள்ளதுடன் கூட்டணி குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடியை சந்தித்தப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சந்திரசேகர ராவ்,
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைப்பதால் எங்கள் கட்சிக்கு எந்த பலனும் இல்லை என்று கூறினார்.
தேர்தலுக்கு பின் ஒருவேளை பாஜக ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மை இல்லாமல் போனால் அப்போது, பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைப்போம் என்று தெரிவித்தார்.
கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி-க்கள் பிரதமர் மோடி மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர்.
ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பின் போது பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியில் இல்லாத தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி, பா.ஜ.,வுக்கு ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.