மக்களவைத் தேர்தலில் 25 தொகுதி களில் போட்டியிட திட்டமிட்டுள்ள திமுக, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் – மே மாதத்தில் மக்களவைத் தேர்தல் நடக்கவுள்ளது. பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் தொடக்கத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு இன்னும் 4 மாதங்களே இருக்கும் நிலையில் தேர்தலை எதிர்கொள்ள முக்கிய அரசியல்கட்சிகள் தயாராகி வருகின்றன. பல மாநிலங்களிலும் கூட்டணி பேச்சுவார்த்தையும் தொடங்கியுள்ளன.
பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் பாஜக உடன்பாடு கண்டுள்ளது. பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியில் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், தெலுங்கு தேசம் ஆகியவை ஈடுபட்டுள்ளன.
தமிழகத்தைப் பொறுத்தவரை பிரதான எதிர்க்கட்சியான திமுக, கடந்த மாதமே மக்களவைத் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது.
கடந்த அக்டோபர் 17-ம் தேதி மக்களவைத் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, பிரச்சார யுக்தி, வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை தயாரித்தல்,
தேர்தல் நிதி வசூல் என பல்வேறு அம்சங்கள் குறித்து திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு 3 மணி நேரம் ஆலோசனை நடத்தியது.
அதைத் தொடர்ந்து புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கும் தலா 2 பேர் வீதம் 80 பொறுப்பாளர்களை ஸ்டாலின் நியமித்தார்.
கடந்த மாதம் 25-ம் தேதி மக்களவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
தற்போது திமுக அணியில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய 7 கட்சிகள் உள்ளன.
மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தொகுதிகளை பங்கீடு செய்வதில் திமுகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அதிமுக இரண்டாக பிளவுபட்டிருப்பது, ஆளும் அதிமுக அரசுக்கு எதிரான நிலை, வலுவான கூட்டணிஆகியவை இருப்பதால் பெரும்பாலான தொகுதிகளில் வென்றுவிடலாம் என திமுக நினைக்கிறது.
எனவே, குறைந்தது 25 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என ஸ்டாலின் விரும்புவதாகவும், திமுக முக்கிய தலைவர்கள் இதை வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
திமுக 25 தொகுதிகளில் போட்டியிட்டால் மீதமுள்ள 15 தொகுதிகளை 7 கட்சிகளுக்கு எப்படி பங்கிடுவது என்பது ஸ்டாலினுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை திமுகதொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக திமுக நிர்வாகி ஒருவர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத், காங்கிரஸ் பொருளாளர் அகமது படேல் ஆகியோருடன் திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி, திருச்சி சிவா எம்.பி.,ஆகியோர் முதல்கட்ட பேச்சை தொடங்கியுள்ளனர்’’ என தெரிவித்தார்.
பேச்சுவார்த்தையின் தொடக்கத்திலேயே 2009 தேர்தலில் போட்டியிட்ட 15 தொகுதிகளை ஒதுக்குமாறு காங்கிரஸ் கேட்டுள்ளது. அதிக கூட்டணி கட்சிகள் இருப்பதாலும், காங்கிரஸின் பாரம்பரிய வாக்கு வங்கி சரிந்திருப்பதாலும் 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக கூறியுள்ளது.
இதை ஏற்காத காங்கிரஸ், 2004-ல்ஒதுக்கிய 10 தொகுதிகளாவது வேண்டும் என உறுதியாக கூறிவிட்டதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
காங்கிரஸுக்கு புதுச்சேரி உட்பட 8, மீதமுள்ள 7 தொகுதிகளை மற்ற6 கட்சிகளுக்கும் பங்கிட திமுக விரும்புகிறது. இதில் உடன்பாடு ஏற்படாவிட்டால் திமுக தான் போட்டியிட விரும்பும் 25 தொகுதிகளில் ஒன்றிரண்டை விட்டுக் கொடுக்கும் எனக் கூறப்படுகிறது.