மக்களவையில் பலத்த எதிர்ப்பிற்கிடையே ‘முத்தலாக்’ மசோதா நிறைவேற்றம்…

மக்களவையில் 5 மணிநேர கடுமையான விவாதத்திற்கு பிறகு முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இஸ்லாமிய மதத்தை சேர்ந்த திருமணம் ஆன ஒரு ஆண், தன் மனைவியை விவாகரத்து செய்வதற்கு 3 முறை ‘தலாக்’ (முத்தலாக்) கூறுகிற வழக்கம் இருந்தது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 3 முறை ‘தலாக்’ கூறி விவாகரத்து செய்து விடும் ‘முத்தலாக்’ நடைமுறை சட்டவிரோதமானது என்று கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது.

அத்துடன், இது தொடர்பாக நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கூறியது.

அதைத் தொடர்ந்து ‘முத்தலாக்’ சட்ட விரோதம் என அறிவிக்கும் சட்டம் கொண்டு வர மத்திய அரசு விரும்பியது.

இது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27–ந் தேதி மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

ஆனால் மாநிலங்களவை தொடர்ந்து முடங்கியதால், அங்கு இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது.

இந்த நிலையில் ‘முத்தலாக்’ நடைமுறையை தடை செய்து மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.
இப்போது இது தொடர்பான முறையான சட்ட மசோதாவை மக்களவையில் மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார்.

இந்த மசோதா மக்களவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

‘முத்தலாக்’ தடையை மீறி ஒருவர் செயல்பட்டால், அவருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க ‘முத்தலாக்’ மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது.

அவசர சட்டத்தின் ஆயுள் 6 மாதம் தான். நாடாளுமன்ற கூட்டம் தொடங்கிய 42 நாளில் மசோதா நிறைவேறி விட வேண்டும்.

இல்லாத பட்சத்தில் அவசர சட்டம் காலாவதியாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்பு

மக்களவையில் முத்தலாக் மசோதா தொடர்பான விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி. சுஷ்மிதா தேவ் பேசுகையில், பெண்களுக்கு அதிகாரமென்று எதுவும் அரசு செய்யவில்லை, மாறாக கிரிமினல் வழக்கைதான் கொண்டு வருகிறது.

முத்தலாக் மசோதாவின் உண்மையான நோக்கம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது கிடையாது, ஆண்களை தண்டிப்பது மட்டும்தான்.

பாராளுமன்ற கூட்டுக் குழுவிற்கு மசோதாவை அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்திய அவர், முத்தலாக்கை கிரிமினல் குற்றமாக்குவது உச்சநீதிமன்ற உத்தரவிற்கு எதிரானது எனக் குறிப்பிட்டார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான மல்லிகார்ஜுன கார்கே, மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இதனையே முன்வைத்தன.

2019-ம் ஆண்டு தேர்தலை மனதில் வைத்து இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வருகிறது என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் விமர்சனம் செய்யப்பட்டது.

எந்த மதத்துக்கும் எதிரானது கிடையாது

முத்தலாக் தடை மசோதா எந்த மதத்துக்கும், சமூகத்துக்கும், நம்பிக்கைக்கும் எதிரானது கிடையாது.

மனிதநேயத்துக்கானது என்று முத்தலாக் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. மக்களவையில் ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், உலகில் 20 முஸ்லிம் நாடுகள் முத்தலாக்கை தடை செய்துவிட்டன.

மதச்சார்பற்ற நம் நாடு ஏன் தடை செய்யவில்லை. அரசியலை ஒதுக்கிவைத்துவிட்டு, இந்த மசோதாவைப் பார்க்க வேண்டும் என்றார்.

எதிர்க்கட்சிகள் கோரிக்கைகள் நிராகரிப்பு

மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. எதிர்க்கட்சிகள் கோரிய திருத்தங்களையும் மத்திய அரசு நிராகரித்தது.

நீண்ட விவாதத்திற்கு பின்னர் மசோதா தொடர்பாக குரல் வாக்கெடுப்புக்கு நடவடிக்கை தொடங்கியது. இந்நிலையில் எதிர்ப்பை தெரிவித்து,

‘முத்தலாக்’ மசோதா வாக்கெடுப்புக்கு முன்னதாக காங்கிரஸ் மற்றும் அதிமுக மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தது.

மசோதா நிறைவேற்றம்

5 மணிநேர கடுமையான விவாதத்திற்கு பிறகு முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மசோதா நிறைவேற்றப்பட்டதும் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவைக்கு மசோதா செல்லவிருக்கிறது. மக்களவையில் பா.ஜனதாவிற்கு தனிப்பெரும்பான்மை உள்ளது. மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் ஆதரவு அவசியமானது.

அதிமுக, பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகளுமே மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. எனவே மாநிலங்களவையில் அரசு பெரும் சவாலை எதிர்கொள்ளும். ஏற்கனவே மாநிலங்களவையில் மசோதா முடங்கியது குறிப்பிடத்தக்கது.