முக்கிய செய்திகள்

காற்றழுத்த தாழ்வு மண்டலம், சனிக்கிழமை புயலாக உருவெடுக்கும் : வானிலை ஆய்வு மையம்

வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், சனிக்கிழமை புயலாக உருவெடுக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 30ஆம் தேதி வட தமிழ்நாட்டையொட்டி புயல் நெருங்கி வர வாய்ப்புள்ளது.

தென்கிழக்கு வங்க கடலில், வியாழக்கிழமை, காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

சனிக்கிழமை பிற்பகல் வாக்கில், அதிதீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து, புயலாக மாறும். இந்நிலையில், நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது,

இதனைத் தெரிவித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், காற்றழுத்த தாழ்வு மண்டலம், வட தமிழ்நாட்டின் கடற்கரை பகுதியிலிருந்து, தென்கிழக்கே, ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறிய பின்னர், வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகிற 30ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை வடதமிழக கடற்கரைக்கு அருகில் வரும் என எதிர்பார்க்கப்படுவதாக, வானிலை ஆய்வு மைய இயக்குநர் அவர் தெரிவித்தார்.

கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால், மீனவர்களுக்கு யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

வங்க கடலில் உருவாகும் புதிய புயல் சின்னம் காரணமாக, வருகிற செவ்வாய்க்கிழமை, வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும், மற்ற பகுதிகளில் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.

புயல் எச்சரிக்கை குறித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையைத் தொடர்ந்து தமிழக துறைமுகப் பகுதிகளில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

நாகை, கடலூர், புதுச்சேரி, ராமேஸ்வரம், காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் ஏற்கனவே ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.